சென்னை: சென்னை பெருநகர மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் செல்போன் செயலியில் ஒரு குறிப்பிட்ட நபர் குழுக்கள் ஆரம்பித்து, அதில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு ெசய்து வருவதாகவும், அந்த குழுவில் உள்ள மற்றவர்கள் அந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை மற்ற குழுக்களில் பகிர்ந்து வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை பெருநகர மேற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் உப்பால் நியூ பவானி நகரை சேர்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி (22) என்பவர், எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சைபர் க்ரைம் தனிப்படையினர், தெலங்கானா மாநிலத்திற்கு சென்று, வெங்கா ரகுநாத் ரெட்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.