காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் அருகே காவலர் பயிற்சி பள்ளி உள்ளது.புதிதாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டால், இப்பயிற்சி பள்ளியில் தங்கி இருப்பர். அங்குள்ள மைதானத்தில் புதிய காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், காவல் துறையினருக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள், முதலுதவிப் பயிற்சி, சாமர்த்தியத்தை வளர்க்கும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மைதானத்தை சில நேரங்களில் காவல்துறை சார்பில் நடைபெறும் விழாக்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.இந்த, மைதானத்துக்கு அருகில் காவலர் குடியிருப்பு மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. இதனால், தினந்தோறும் இந்த மைதானம் வழியாக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த, மைதானத்துக்கு முறையான தடுப்புச்சுவர் இல்லாததால், அந்த மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், தமிழ்நாடு அரசுப் தேர்வாணையத் தேர்வுக்கு பயிற்சி எடுப்பவர்கள் என பலர் வந்து அமர்கின்றனர்.எனவே, இந்த ஆயுதப்படை மைதானத்துக்கு பாதுகாப்புடன் கூடிய தடுப்பு சுவரை அமைக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்துகின்றனர்.