நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
அதேபோல் திரைப்பட நடிகர் புகைபிடிக்கும்பொழுது அது ஆண்மையின், வீரத்தின் அடையாளமாக சித்தரிக்கப்பட்டது. 1950 -1980 வரையிலான காலக்கட்டத்தில் சர்வதேசத் திரைப்படங்கள் முதல் தமிழ் திரைப்படங்கள் வரை அதிகமாக புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. அவை ஹீரோயிசத்தைக் கொண்டாடுவதாக, ஆண்மையின் அடையாளமாகவே மக்களால் இரசித்துப் பார்க்கபட்டன.அதே நேரத்தில் உலக அளவில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாகவும், புற்றுநோய் மரணங்கள் அதிகமாக இருந்ததையும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO ) புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
1955 ஆம் ஆண்டு 53 சதவீத ஆண்கள் அமெரிக்காவில் புகைபிடிப்பவர்களாக இருந்தார்கள் என்று ஒரு தரவு கூறுகிறது. இதுவே உலக அளவில் இன்றுவரை அதிகமாக புகைபிடிக்கக்கூடிய ஆண்கள் இருந்த காலகட்டம் என்று அறியப்படுகிறது. அதன்பிறகு, 1975 -இல் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. விழிப்புணர்வு பிரச்சாரங்களாலும், மருத்துவக் கல்வியின் அறிவுறுத்தல்களாலும் 39 சதவீதமாக மாறியிருந்தது ஆனால், 1994 -இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவர ஆய்வின் முடிவு, அமெரிக்காவில் வயது வந்த ஆண்களின் (Adult ) புகைபிடிக்கும் சதவீதம் குறைந்துள்ளதுதான்.
ஆனால் வளரிளம் (Adolescents) புகைபிடிப்பாளர்களின் எண்ணிக்கை 28% சதவீதம் அதிகரித்துள்ளது என்று அதிர்ச்சி அளிக்கிறது. திரைப்படங்களைப் பார்த்து, தந்தை அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்து ‘இமேஜ்’ எனும் சுயகட்டமைப்பை உயர்த்திக் காட்ட புகைபிடித்தல் விளையாட்டாக நுழைந்து நுரையீரலை மெல்ல மெல்ல புகைமண்டலமாக்குகிறது. ஒரு விடுதலை உணர்வுக்காகவும், தற்காலிகமாகப் பிரச்சனைகளைத் தள்ளிப் போடுவதற்காகவும் இந்தத் தவறான சமூக திரைக்கற்பிதங்களை இளைஞர்கள் பெருமளவில் ஏற்றுக் கொள்கிறார்கள்.
பெண்களும் அதீத ஒப்பனை, கோபப்படுவது, உணர்ச்சிகரமாக இருப்பது, Fantacy எனப்படும் நவீன உலகின் மிகை எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது என்றெல்லாம் பல விஷயங்களை திரைப்படங்கள்வழி கற்றுக் கொள்கிறார்கள் என்று பெண் சார்ந்த உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன.மிகவும் தன்னிச்சையாக இருக்க விரும்புவது, (Independancy) இயற்கையாகப் பெண்களுக்கு அமைந்த தாய்மையைத் தன்னுடைய சுதந்திரத்திற்குத் தடையாக பார்ப்பது என்று இன்றைய நவீனப் பெண்களிடத்தில் உருவாகியுள்ள நிறைய மாற்றங்களை உருவாக்கியதில் திரைப்படங்களுக்கே முதலிடம்.
இவ்வாறு, அனைத்து வயதினரையும் ஈர்த்து அவரவர் வாழ்வின் போக்குகளை நிர்ணயிக்கும் சக்தியை ( Influencing power) காட்சி ஊடகங்களுக்கு வழங்குவது யார்? அல்லது அவ்வாறான சமூக உரிமையை, பொழுதுபோக்குக்கென எடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் திரைப்படங்களின் இயக்குனர்கள் தாமாகவே எடுத்துக்கொள்கிறார்களா? ஊடகச் சுதந்திரத்தின் அளவுகோல்தான் என்ன? மக்களை நேரடியாகச் சென்று கவர்ந்திழுப்பதோடு, கற்பிக்கும் திறன் பெற்ற திரைப்படங்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு வேண்டாமா? என்று பல கேள்விகள் எழுகின்றன. சென்சார் என்று இதற்கென நடுவர் குழாம் இருந்தாலும் அதைத் தாண்டியும் சமூகத்திற்குப் பாதிப்பைத் தரக்கூடிய தவறான முன்னுதாரணங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
திரை உளவியல் குறித்து பேசும்போது குடும்பத்தில் பணத்திற்காகச் சண்டை போட்டுக்கொள்வது, வீட்டிற்கு நடுவில் கோடு போட்டுக்கொண்டு இருதரப்பும் பேசிக்கொள்ளாமல் இருப்பது என்ற பிரச்சனையை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்த ஒரு குடும்பத்தை நினைவு கூர்கிறேன்.அவர்களோடு முதற்கட்ட கலந்துரையாடல் நிகழ்த்தும்போதே ஒரு திரைப்படத்தின் தாக்கத்தை என்னால் உணரமுடிந்தது. காதல் தோல்வி ஏற்பட்டால் குடிப்பதும், தாடி வைத்துக் கொள்வதும், தற்கொலை செய்துகொள்வதும்கூட அதிகமாகத் திரைப்படங்களில் காட்டப்பட்ட காலகட்டங்களில் , அதே போன்ற சம்பவங்கள் நிஜ வாழ்விலும் அதிகமாக இருந்தன என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மையே.
மேலும், தன்னுடைய சுய அறிவையும், கல்வியையும் வைத்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முடிவுகளை எடுப்பதை விடவும், ஏற்கனவே திரைப்படங்களில் அல்லது ஊடகத்தில் காட்டப்படக்கூடிய ஒன்றைப் பலரும் முன்முடிவாக வைத்துக் கொள்கிறார்கள். மாற்றுக் கோணங்களுக்கு இடமின்றி (Sterotype mindset) ஒரே விதமான மனநிலையில் எல்லாவற்றையும் எதிர்கொள்வது என்ற நிலையில் இன்று பலரும் தேங்கியுள்ளனர். அவ்வகையில், சற்றும் சமூகப் பொறுப்புணர்வின்றி ஆசிரியைகளைக் கவர்ச்சிப்பொருளாக காட்டும் பல தமிழ்த் திரைப்படங்களை நாம் அறிவோம்.ஆங்கில ஆசிரியை என்றால் கூடுதல் கவர்ச்சி, என்ற ஒரு தவறான பிம்பம் வலியுறுத்தப்படுகிறது.
இளநிலைக் கல்லூரி வகுப்பறைக் காட்சிகளில், ஆறாம் வகுப்பின் செம்பருத்திப் பூவின் பாகங்கள் கரும்பலகையில் காட்டப்படுகின்றன. இன்னமும் லைலா – மஜ்னு காதல் காட்சிகள், ஷேக்ஸ்பியர் நாடகம் என்று Cliche காட்சிகளையே தொடர்ந்து காட்டும் பொழுது அவற்றின் தாக்கம் காரணமாக கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எண்ண வைக்கலாம். அல்லது எவ்வளவு அபத்தம் என்று அதன்பின் அதே திரைப்படத்தில் காட்டப்படும் வேறு நல்ல தகவல்களோ,கருத்துகளோ கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படலாம். பெண்களுக்கெதிரான ஈவ்டீசிங், சகமாணவனைக் கொலை செய்யும் அளவுக்கு ஆபத்தான, கல்லூரிகளில் தடை செய்யப்பட்ட ராகிங் போன்றவை இன்னமும் திரைப்படங்களில் வெகு இயல்பாகவே காட்டப்படுகின்றன.
ஒரு பிரபல பெண் வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரின் பேச்சை வலைக் காணொளியொன்றில் மீண்டும் கேட்க நேர்ந்தது. சட்டம் தண்டிக்கக் காத்திருக்கும் ஒரு குற்றவாளிக்குப் பெண் கேட்டு உங்கள் வீடு தேடி ஒருவர் வந்தால், நீங்களெல்லாம் மறுக்காமல் உங்கள் பெண்ணைக் கொடுத்துவிடுவீர்களா என்ற கேள்வி ஒரு பெண் உளவியலாலராக என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
அதேபோல், நிர்வாகத்திறன் மிக்கவொரு பெண்ணைத் திமிர் என்று அடக்கி வீட்டில் அமர வைத்துவிடுவது ஆண்மை எனவும் ஒரு திரைப்படத்தில் காட்டப்படுகிறது. இதில் முரண் என்னவென்றால் அதே திரைப்படம் மனைவிதான் வேலைக்கு போகக்கூடாது, சம்பாதிக்கக்கூடாது.மற்ற பெண்/காதலி நிர்வாகி ஆகலாம் என்ற போலிமையையும், பிற்போக்குத் தனத்தையும் மறைமுகமாகக் கடைசியில் நிறுவி விடுகிறது. இச்சூழலில், இந்தத் திரை உளவியல் அவசியம் விவாதிக்கப்பட வேண்டும் என்று என்னுள் தீர்மானித்துக் கொண்டேன். சமூக மாற்றங்களை மெல்ல மெல்லத் திணிக்கும் காட்சி ஊடகவழி- சமூகக் கற்றலை (Visual Media – Social Learning ) மறுசீராய்வு செய்ய வேண்டியதன் கட்டாயம் உறுதிப்படுகிறது.
உலக அளவில் புகழ்பெற்ற சில திரைப்படங்களை கவனிக்கையில் 1998-இல் வெளிவந்த ஒரு திரைப்படம் ‘‘The Trueman Show”. ஒரு மனிதன் அவனுக்குத் தெரியாமலேயே மாபெரும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றின் ஹீரோவாக இருப்பான். அதாவது, அவனுடைய அன்றாட வாழ்வின் காட்சிகள் அப்படியே ஊடகத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். அவை மிகவும் சுவாரஸ்யம் மிகுந்ததாக பலருக்கும் இருப்பதை இத்திரைப்படம் உணர்த்தியது. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் 2004 – ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடந்தது. அதன் பின்னணியில் தெரிய வந்த உண்மை என்னவென்றால் அந்தத் திரைப்படம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து செயல் தூண்டலைக் கொடுத்துள்ளது என்பதே.
1999 – ஆம் ஆண்டு ‘‘The Matrix” என்றவொரு படம் வந்த பிறகு, Simulated Realaity Concept அதிகளவில் உருவானது என்று மேலை நாட்டு உளவியல் பேராசிரியர்கள் சில சான்றுகளை முன்வைக்கின்றனர். அது வேறொன்றுமில்லை உண்மையை மழுங்கடிக்கச்செய்யும் அளவிலான தூண்டுதல் சாகசங்களை முன் வைக்கும் உத்தியே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைப்பது, சில சூழ்நிலைகளின் மேல் ஆர்வத்தை உருவாக்குவது போன்றவற்றை அந்தத் திரைப்படம் எங்களுக்கு ஏற்படுத்தியது என்று சாதாரணமான மக்களும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
‘Matrix Syndrome’ என்றும் அதற்குப் பெயரிட்டு, திடீரென கணிப்பொறிகள் மீதான ஆர்வம் தங்களுக்கு வெகுவாய்த் தூண்டப்பட்டதாக பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.நமது நாட்டிலும் பல தொடர் குற்றங்கள் புரிந்த குற்றவாளியின் வாக்குமூலத்தில் திரைப்படங்களின் தாக்கம் பதிவு செய்யப்பட்டதாகப் படித்திருக்கிறோம்.இவ்வாறு திரை உளவியலின் சமூகத் தாக்கம் மிக நீண்ட விவாதப்பொருளாக, மனிதனுக்கான பெரும் சவாலாகவே பலகாலமாக இருந்துவருகிறது.
‘‘ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால், முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்” என்பது பைபிள் வாசகம். எனவே, எதனைப் பிறருக்கு வழங்குகிறோம் என்பதுவும் எதனை அவ்வாறு நாம் எடுத்துக்கொள்கிறோம் என்பதும் அவரவருடைய பக்குவ நிலையைப் பொறுத்தது என்றுதான் நாம் இதற்கொரு முடிவைச் சொல்ல முடியும்.
சமூக வலைத்தளங்களில் செலவுகள் ஏதுமின்றி வெறுமனே scroll செய்யும்போது தாமாக வந்துவிழும் காட்சிகளாகட்டும் அல்லது செலவு செய்து பார்க்கக்கூடிய திரைப்படங்களாகட்டும் அவற்றிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.அவற்றை உருவாக்குபவர்களும் தங்களுடைய சமூக நிலையையும், பொறுப்புணர்வின் ஆழத்தையும் உணர்ந்து இன்னும் ஆக்கபூர்வமானவற்றைத் தரமான வகையில் வழங்க முனைய வேண்டும். நல்ல மாற்றங்களை வெளியிலிருந்து அல்ல நம்மிடமிருந்தே தொடங்குவோம்.