நன்றி குங்குமம் தோழி
கலை, காலம் கடந்தும் பேசப்படும். அந்தக் கலையினை மக்கள் விரும்புகிறார்கள் என்றால், இது அவர்களின் அன்றாட வாழ்வியலில் கலந்திடும். ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், அழுகை, துக்கம் என சகலத்தையும் சந்திக்கிறார்கள். மக்களின் மனதில் ஒரு கலை நீங்காமல் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அந்தக் கலையில் அவை எல்லாம் பிரதிபலிக்க வேண்டும். இப்படி மக்களின் குரலாக இருப்பதுதான் கலை. அதனை உருவாக்கும் கலைஞர்களும் அவர்கள் வாழ்ந்த காலம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை பதிவு செய்ய பல யுக்திகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் முக்கியமான இடத்தை பிடிப்பதுதான் ஓவியம். ஓவியங்களில் பல பிம்பங்கள் இருந்தாலும், நிற பேதத்துக்கு எதிரான ஓவியங்களை வரைந்து வருகிறார் ரோஹிணி மணி.
‘‘எனக்குள் ஏற்படும் உணர்வுகளை நான் ஓவியங்களாக வெளிக்கொண்டு வருகிறேன். நான் வரையும் ஓவியங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை கேள்வி கேட்பவையாக இருக்க வேண்டும்’’ என்கிறார். அவர் சொல்வதை போலவே இவரின் ஒவ்வொரு ஓவியங்களும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கிறது. மேலும் அவை அனைத்தும் சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகள் குறித்து பேசும் நிகழ்காலத்தின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறது.
‘‘நான் சென்னை வாசி தான். என் பெற்றோர் இருவருக்குமே கலைகள் மீது ரொம்ப ஆர்வம் உண்டு. அவங்க அது குறித்து நிறைய பேசுவாங்க. அவர்கள் பேசுவதைக் ேகட்டுதான் நான் வளர்ந்தேன். அதனாலயே எனக்கும், கலைகள் மீது ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. குறிப்பாக ஓவியங்கள் வரைவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. நான் வரையும் ஓவியம் எனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.
அதனாலேயே சின்ன வயதிலேயே ஓவியங்கள் வரைய கற்றுக் கொண்டேன். என் கண்ணில் தென்படும் அனைத்தையும் வரையத் தொடங்கினேன். முக்கியமாக நான் வரைந்த ஓவியங்கள் எல்லாமே நான் பார்த்த மனிதர்களின் முகங்கள்தான். அவர்களில் நாம் அழகானவர்கள் அழகற்றவர்கள் என்று பிரிக்க முடியாது. காரணம், அவர்களை நாம் உன்னிப்பாக கவனித்தால், அவர்களின் முகம் பிரமிப்பு ஊட்டுவதாக இருக்கும். முகத்தில் இருக்கும் மருக்கள், மச்சங்கள், சுருக்கங்கள் என எல்லாமே அழகானவை. எனக்கு அதனை பார்க்கும் போது எல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
நான் ஓவியம் வரைவதற்காக அவர்களின் முகத்தை பார்த்த போதுதான் இவை எல்லாம் தெரிய வந்தது. மனிதர்களுடைய முகத்தின் ஒவ்வொரு பகுதியும் அழகானவை. முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நான் கோடுகளாக ஓவியத்தில் கொண்டு வரும் போது அந்த முகங்களின் அழகை பார்க்க முடியும்’’ என்றவர் தன்னுடைய ஓவியங்களின் தனித்தன்மை குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘எனக்கு மனித முகங்களை வரைவதில்தான் கூடுதலான ஆர்வம். அப்படி வரையும் போது, என் கற்பனையில் தோன்றிய அனைத்தும் ஓவியங்களாக மாறி இருக்கிறதா என்றுதான் நான் பார்ப்பேனே தவிர அழகாக இருக்கிறதா என்று பார்க்க மாட்டேன். இதனாலேயே நான் கலந்து கொண்ட அனைத்து ஓவியப் போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் எனக்கு கலை துறைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதனாலேயே ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். அங்கு முழு நேரமும் ஓவியங்கள் சார்ந்து பேசுவதும் யோசிப்பதுமாக இருப்பதால் என்னுடைய ஓவியங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது. முக்கியமாக பெண்களுடைய நிறம், உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் என சமூகத்தில் நடக்கும் இழிவுகளை தெரிந்து கொண்டேன்.
ஒரு பெண் எந்த நிறத்தில் இருக்க வேண்டும். அவள் தன்னை எப்படியெல்லாம் அலங்காரப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுடைய உடல் அமைப்பு என்ன என யாரோ ஒருவர்தான் முடிவு செய்கிறார். அப்படி இல்லாத பெண்களை ஏளனம் செய்வது, கேலியாக பேசுவது என அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர் கொள்பவைதான். இந்த வன்முறைகள் குறித்தெல்லாம் பேசுவதற்கு எனக்கு சரியான களம் தேவைப்பட்டது. இதற்கான அடிப்படை காரணம் மற்றும் அதை மாற்ற வேண்டும் எனத் தோன்றியது.
அதற்கு ஓவியம் என்னுடைய களமாக அமைந்தது. மேலும் ஒரு ஓவியம் பலவிதமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும். அதுவே விவாதத்திற்கு வழிநடத்தி செல்லும். அதே சமயம் அந்த விவாதம் ஒரே நேர்கோட்டில், சொல்பவரின் கருத்துகளை பிரதிபலிக்கும் இடமாக இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை முன் வைக்கக்கூடிய ஆரோக்கிய உரையாடலாக இருக்க விரும்பினேன். அதனால் எனக்குள் எழும் கேள்விகள், அதற்கான பதில்கள், கோபம் இவற்றையெல்லாம் என் ஓவியங்கள் மூலம் எடுத்துரைத்தேன். நான் ஓவியங்களை வரைந்து முடித்து பார்க்கும் போது, என் மனதின் வெளிப்பாடாக இருப்பதை உணர்வேன். மேலும் என்னுடைய பிரச்னைக்கான விடைகளாகவும் அவை அமைந்தன.
ஒரு ஓவியம் எனக்கு ஒரு அர்த்தத்தை குறிக்கும். ஆனால் அதை மூன்றாம் நபர் பார்க்கும் போது, அவரின் புரிதல் வேறாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு பெண்ணை ஓவியமாக தீட்டும் போது, அவரை வெற்றுடம்போடு காண்பிக்க முடியாது. உடையினை வரைய வேண்டும். அந்த உடை என்ன என்று தீர்மானிப்பது மிகவும் முக்கியம். ஒரு பெண்ணை உடை இல்லாமல் வரைந்தால் என்ன என்று மனதில் தோன்றும்.
ஆனால் அதற்கான தையரித்தை நான் வளர்ந்த சூழ்நிலை உருவாக்கி தரவில்லை. அதனால் நான் பெண்ணின் உடலை மறைக்கவே அவளை ஒரு தட்டான் பூச்சியாகவோ, புழுவாகவோ, பறவையாகவோ, பழமாகவோ உருவகப்படுத்துவேன். இந்த மாற்றம் எனக்கு பிடித்திருந்தது. பெண்களின் உடல், உடை எல்லாமே ஒரு காட்சிப் பொருளாக பார்க்கப்படும் போது அதை மாற்ற என் ஓவியங்களை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினேன்.
எனக்குள் இருக்கும் ஆசைகள், கனவுகள் எல்லாமே ஓவியங்களானது. இதில் நான் முக்கியமாக பார்த்தது நம்மை சுற்றியிருக்கும் கடவுள் சிலைகள் கருப்பாக இருக்கும் போது அவரின் புகைப்படங்கள் மட்டும் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்பதுதான். காரணம், தெய்வங்களின் நிறம், உடை மற்றும் நகைகள், இடம் அனைத்துமே அழகானது என்கிற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது. அது எல்லோருடைய மனதிலும் இதுதான் அழகு என்கிற மனநிலையை கொடுக்கிறது.
தெய்வீகமான முகம், நளினமான பெண் என்ற சொற்கள் இந்த புகைப்படங்களிலிருந்துதான் உருவாகி இருக்கிறது. சருமம் வெள்ளையாக இருப்பவர்களின் அனைத்து விஷயங்களும் உயர்வானதாகவும், கருமை தாழ்வானதாக பார்க்கும் அசாதாரண சூழ்நிலையை அமைத்திருக்கிறது. மக்கள் மனதிலும் தெரிந்தோ தெரியாமலோ நிற பேத மனநிலை பற்றிக் கொண்டுவிட்டது.
அந்த மனநிலையை மாற்றத்தான் நான் நிற பேதத்திற்கு எதிரான ஓவியங்களை வரையத் துவங்கினேன். இதனுடைய நீட்சியாகத்தான் இலக்கியம், கதைகள், கவிதைத் தொகுப்புகளுக்கான புத்தகங்களின் அட்டைப் படங்களுக்கு ஓவியம் வரைந்து தருகிறேன். இதன் மூலம் சமூகத்தில் நடக்கும் பாகுபாடுகளை என் ஓவியங்கள் வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் ரோஹிணி மணி.
தொகுப்பு: மா.வினோத்குமார்