*பொதுமக்கள் பாராட்டு
வீரவநல்லூர் : சேரன்மகாதேவியில் குப்பையில் கிடந்த 122 ஆண்டு கால பழமைவாய்ந்த நினைவு விளக்குத்தூணை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் நிறுவிய சமூக ஆர்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில 1914ம் ஆண்டு சப் கலெக்டர் அலுவலகம் உதயமானது.
சப்-கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் அருகில் சாலையோரம் மகுடாபிஷேக விளக்கு என்ற பெயரில் அப்போதைய சேரன்மகாதேவி பண்ணையாராகிய ‘யுவாலு சோமயாஜூலு’ என்பவரால் விளக்குத்தூண் அமைக்கப்பட்டது.
01-01-1903 என தேதியிட்டு நிறுவப்பட்ட இந்த விளக்குத்தூணானது, மகிமை தாங்கிய எட்வார்ட் மன்னரின் மகுடாபிஷேக ஞாபக தீபம் என பெயரிடப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த தூணில் கண்ணாடி குடுவையை தொங்கவிட்டவாறு விளக்கு தீபம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சேரன்மகாதேவியின் அடையாளமாக கம்பீரமாக இருந்த விளக்குத்தூண் நாகரீக வளர்ச்சி காரணமாக பயன்பாடின்றி அதே இடத்தில் 122 ஆண்டாக நினைவுச் சின்னமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்தாண்டு சாலை விரிவாக்கப்பணிக்காக இந்த நினைவுத்தூண் அகற்றப்பட்டது. பணிகள் முடிந்ததும் இந்த நினைவுத்தூண் மற்றும் கல்வெட்டுகள் குப்பையில் போடப்பட்டது.
இந்நிலையில் இந்த நினைவுத்தூணின் சிறப்புகள் குறித்து அறிந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சேரன்மகாதேவியின் அடையாளமாக இருந்த நினைவு விளக்குத்தூணை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் நேற்ற ஒளிரச் செய்தனர். சமூக ஆர்வலர்களின் இந்த செயல்பாட்டிற்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.