ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள சின்னபேளகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (68). சமூக ஆர்வலர். இவர் நேற்று மாலை, தனது பேரன் வேல்முருகனுடன் டூவீலரில் மத்திகிரி போலீஸ் ஸ்ேடஷனுக்கு, வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். மத்திகிரி கால்நடை பண்ணை அருகில் சென்ற போது, 2 டூவீலர்களில் வந்த 3 பேர், திடீரென வேல்முருகன் ஓட்டிச்சென்ற டூவீலரை மறித்து, தாங்கள் தயாராக கொண்டு வந்த அரிவாளை கொண்டு முனிராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து முனிராஜ் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முனிராஜ ஊரில் நடக்க கூடிய சட்ட விரோத செயல்கள் குறித்து, அவ்வப்போது போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில், சின்னபேளகொண்டப்பள்ளி பகுதியில், சிலர் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதை முனிராஜ் தட்டிகேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கும், முனிராஜ் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா என மத்திகிரி போலீசில் விசாரித்து வருகின்றனர்.