திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கிழக்கு வதனவாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(45), விவசாயி. இவரது விவசாய கிணற்றில் நேற்று காலை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது கொடிய விஷ தன்மை கொண்ட கோதுமை நாகப்பாம்பு அவரது காலை கடித்துவிட்டு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. உடனே இரண்டரை அடி நீளமுள்ள நாகப்பாம்பை அடித்துக்கொன்று, பிளாஸ்டிக் கவரில் போட்டு கையில் எடுத்துக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். இதைப்பார்த்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் ‘என்னை இந்த பாம்பு தான் கடித்துவிட்டது டாக்டர்’ என்று கூறிய வேலாயுதம் பாம்பை காட்டினார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி
50