*50 கிலோ கஞ்சா பறிமுதல்
சித்தூர் : விசாகப்பட்டினத்தில் இருந்து சித்தூருக்கு கடத்தி கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சித்தூர் இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நெட்டி கண்ட நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூர் மாநகரத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதாக சித்தூர் இரண்டாவது காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை அடுத்து சித்தூர் லட்சுமி நகர் காலனி பகுதியில் இரண்டாவது காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இளைஞர் சிறு சிறு பொட்டலங்களாக தயார் செய்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த இளைஞரிடம் இருந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் விசாரணை செய்தனர்.
அதில் சித்தூர் லட்சுமி நகர் காலனி சேர்ந்த குமார்(30) என தெரியவந்தது. இவர் சித்தூர் மாநகரத்தில் சில வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் சித்தூர் ரயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து தொலைபேசி மூலம் இவர்களுக்கு விற்பனை செய்வதும், விசாகப்பட்டினத்தில் இருந்து எடுத்து வரும் கஞ்சா கொள்முதல் செய்து சிறு சிறு பொட்டலங்களாக தயார் செய்து ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்வது தெரியவந்தது.
மேலும் குமாரிடம் கஞ்சாவை யார் மூலம் கடத்தி வந்து, யார் யார் மூலம் சித்தூர் மாநகரத்தில் விற்பனை செய்து வருகிறார்கள், இவர்களுக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.