திருமலை: திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு நேற்று `ஸ்மார்ட் ஸ்டிக்’ வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் 7வது மைல் ஆஞ்சனேய சுவாமி கோயிலில் இருந்து நரசிம்ம சுவாமி கோயில் இடையே அடிக்கடி சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் காணப்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் ஒரு சிறுமியை சிறுத்தை கொன்றது, ஒரு சிறுவனை தாக்கியது. எனவே இந்த இடத்தில் வனத்துறையினரை 2 ஷிப்டுகளாக பணி அமர்த்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு நேற்று ‘ஸ்மார்ட் ஸ்டிக்’ வழங்கப்பட்டது.
இதன்மூலம் இருளிலும் வனவிலங்குகளை பார்க்க வசதியாக டார்ச் லைட்டுகளும், வனவிலங்குகள் அருகில் வராமல் இருக்க அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கரும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சத்தம் கேட்டால் வனவிலங்குகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என கருதப்படுகிறது. மேலும் இதனையும் மீறி வனவிலங்குகள் தாக்க முயற்சி மேற்கொண்டால் ஸ்மார்ட் ஸ்டிக் அடிப்பகுதியில் எலக்ட்ரானிக் மின்தாக்கி மூலம் ஷாக் கொடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு தாக்கினால் இந்த ‘ஸ்மார்ட் ஸ்டிக்’ மூலம் ஷாக் கொடுப்பதால் அவை ஓடிவிடும். இந்த ஸ்மார்ட் ஸ்டிக்குகள் தற்போது 20 வாங்கப்பட்டு வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 20 ஸ்மார்ட் ஸ்டிக்குகள் வாங்கி கண்காணிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் அச்சமின்றி பாதுகாப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 71,721 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,011 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.42 கோடி காணிக்கை செலுத்தினர்.
கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்து ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.