சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சென்னை முழுவதும் 7.7 லட்சம் குடிநீர் இணைப்புகள் மூலம் நகருக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள வணிக மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் பயன்பாட்டு அளவை கணக்கிடவும், தண்ணீர் கசிந்து வீணாவதை தடுக்கவும், தண்ணீர் திருடப்படுவதை தடுக்கவும் குடிநீர் வாரியம் சார்பில், சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட் மின்காந்த மீட்டர்கள் பொறுத்தப்படுகிறது. வரும் 2025-26ம் ஆண்டிற்குள் சென்னையில் 90% கட்டிடங்களில் இந்த கருவியை பொருத்த சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவி திட்டத்திற்கான ஸ்டெடி டாப்ஸ் என்ற ஆலோசகர் நிறுவனம் மூலம் இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. 2 மாதங்களில் இந்த பணிக்கு டெண்டர் கோரப்பட உள்ளது. குடியிருப்புகள், வணிக தளங்களுக்கு எப்படி நீர் வழங்க வேண்டும் என்ற திட்டங்கள் தெளிவான திட்டமிடல் செய்த பின்னர், குறிப்பிட்ட பகுதிகளில் மொத்தம் ஒரு லட்சம் மீட்டர்கள் அமைக்கப்படும். இந்த மீட்டர்கள் முதலில் எப்படி அமைக்கப்படும் என்றால், ஆரம்பத்தில், வணிக பகுதி, நிறுவன மற்றும் உயர் அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் அளவீட்டு திட்டத்தில் மீட்டர் பொறுத்தப்படும்.
அதாவது அதிக நீர் பயன்பாடு உள்ள கட்டிடங்களுக்கு தற்போது நீர் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலவரப்படி, சென்னை குடிநீர் வாரியம் 24,095 மீட்டர்களை பொறுத்தி உள்ளது. அதில் 12,708 மீட்டர்கள் தானியங்கி மீட்டர் ரீடிங்க் வசதி கொண்டவை. புதிதாக பொறுத்தப்பட உள்ள மீட்டர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் தண்ணீர் நுகர்வுக் கட்டணமாக ரூ.5 முதல் ரூ.5.5 கோடியை வசூலிக்க முடியும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கு தண்ணீர் அளவீடு அவசியம்.
போதுமான அளவு மெட்ரோ வாட்டர் கிடைத்தால், மக்கள் நிச்சயமாக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்ச மாட்டார்கள். தண்ணீரை பொறுத்தவரை மழைக்காலத்தில் அது நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு இருக்கிறது. எனவே இந்த நீர் மீட்டர்கள் மெட்ரோ வாட்டார் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை மக்கள் சரியாக பயன்படுத்த உதவும். இதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டை அளவாக பயன்படுத்தி மாதாந்திர பில்லிங் சுழற்சி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க முடியும். ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யவும் முடியும்,’’ என்றார்.