திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை லதாராணி மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறையுடன் சிறந்த முறையில் கல்வி கற்பித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் மிகவும் ஏழ்மை நிலை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். படித்தால் மட்டுமே தங்கள் குடும்ப வறுமையைப் போக்கமுடியும் என்ற சூழ்நிலையில்தான் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப்படிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களின் கல்வித்தரத்தால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை லதாராணி பல்வேறு நடவடிக்கைகளைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களோடு இணைந்து செயல்படுத்திவருகிறார். கல்வி கற்பிப்பதோடு இல்லாமல் சிறந்த பண்பாளர்களாகவும், ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து வாழும் வகையில் தனது பள்ளி மாணவர்களை பட்டைத்தீட்டி மிளிரச் செய்துவருகிறார். மேலும், தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்ற முயற்சியால் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்துவருகிறார்.
ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கான யோசனை தோன்றியதையும் அதற்காக உதவியவர்கள் பற்றியும் நம்மிடம் தலைமை ஆசிரியர் கூறும்போது, ‘‘சிறு வயதிலேயே ஆசிரியர் பணியின் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டதால் ஆசிரியர் பணியில் சேரவேண்டும் என்ற முடிவோடுதான் பள்ளிப் படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சிப்படிப்பை நான் படித்தேன். அரசுப் பொதுத்தேர்வில் நல்லமுறையில் தேர்ச்சி பெற்று கடந்த 1998ம் ஆண்டு நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். அங்கு சுமார் 17 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் ஈடுபட்டேன். மாணவர்களுக்கு இயற்பியல் பாடத்தை மிகவும் எளிமையான முறையில் பயிற்றுவித்தேன்.
அதன் மூலமாக மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று வகுப்புத்தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கு முன்புதான் பதவி உயர்வு பெற்று நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தேன். அப்போது, பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். மிகவும் கஷ்டப்படும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையச் செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதற்கு அடிப்படையான தரமான கல்வி கிடைக்கவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கல்வி கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று தோன்றியதால் உருவானதுதான் ஸ்மார்ட் வகுப்பறை’’ என்று விவரித்தார் தலைமை ஆசிரியர் லதாராணி.
மேலும் அவர் கூறுகையில், ‘‘இன்றைய நவீன உலகத்தில் தினமும் புதுப்புது தகவல்கள், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. கரும்பலகையில் பாடம் நடத்துவது சிறப்புதான் என்றாலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் மாணவர்களின் கல்வி கற்கும் வழிமுறைகளை மேம்படுத்துவதும் கட்டாயமாகும். எனவே, ஏட்டுக்கல்வியோடு செயல்முறைக் கல்வியையும் மாணவர்களுக்கு அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால், தனியார் பள்ளிகளில் உள்ளது போன்று ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்க முடிவுசெய்தேன். இதனிடையே பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மாணவர் ஒருவர் உதவியுடன் ₹4 லட்சம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்படுத்திவந்தனர்.
அந்தக் கட்டடத்தில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைக்க முடிவுசெய்தேன். பள்ளியில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சமூக ஆர்வலர்கள், பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையாக உள்ள ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க உதவி கேட்டேன். இதனை அறிந்த பலரும் உதவ முன்வந்தனர். குறிப்பாக முன்னாள் மாணவர்கள் பலரும் தாங்கள் கல்வி கற்று இன்று உயர்ந்த நிலையை அடைய காரணமாக இருந்த பள்ளிக்குத் தங்களால் இயன்ற உதவிகளை நிச்சயம் செய்வோம், என்று உறுதி அளித்தனர்.
அதன்படி, முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறைக்குத் தேவையான எல்இடி டிவி, மாணவர்களுக்கான இருக்கைகள், மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் ₹2.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இணையதள இணைப்பு உள்ளதால் யூடியூப் மூலமாகவும் மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். கடந்த ஜூன் மாதம் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஸ்மார்ட் வகுப்பறை மூலமாக்க கல்வி கற்கும் வகையில் தினந்தோறும் 8 பாடவேளைகளில் மாணவர்கள் ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி கல்வி கற்றுவருகின்றனர்’’ என தலைமை ஆசிரியை லதாராணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அரசின் மூலம் கிடைக்கும் திட்டங்களை பற்றியும் தலைமை ஆசிரியை கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. திறமையான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி கற்பித்துவருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை வழங்குவதோடு, மாணவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் அரசு சார்பில் செய்து தரப்படுகின்றன. அதேபோல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்ற அறிவியல் பாடங்கள் சார்ந்த செய்முறை பயிற்சிகளுக்காக ஹைடெக் ஆய்வுக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு உயர்ந்த நிலையை அடைந்து வருகின்றனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் தொலைநோக்குத் திட்டங்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
பள்ளியில் அமைந்துள்ள ஸ்மார்ட் வகுப்பறையால் மாணவர்களுக்குக் கல்வி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. வழக்கமாகப் பாடப்புத்தகங்களை பார்த்துப் படிக்கும் முறைக்கு மாற்றாக டிஜிட்டல் திரையில் செயல்முறைப் பாடங்களைப் படிப்பது மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாடங்களை எளிதாகப் புரிந்துகொண்டு வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருகின்றனர்’’ என பெருமிதத்துடன் தெரிவிக்கும் தலைமை ஆசிரியை லதாராணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
– இர.மு.அருண் பிரசாத்