* பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்துவிட்டு, பிறகு கிழங்குகளை வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
* தேங்காய் பர்பி செய்யும் போது, கலவையில் இரண்டு ஸ்பூன் ராகி மால்ட் சேர்த்தால் மணமும் சுவையும் கூடும்.
* கொழுக்கட்டைக்கு மாவு கிளறும் போது தண்ணீருடன் ஒரு கரண்டி பால் விட்டுக் கிளறவும். கொழுக்கட்டை விரிந்து போகாமல் ருசியும் கூடுதலாக இருக்கும்.
* சேமியாவுடன் ஒரு ஸ்பூன் கோதுமை மாவையும் சேர்த்து நெய்யில் வறுத்து பாயசம் வைக்கவும். பாயசம் சுவையாகவும் இருக்கும். பாலும் அதிகம் சேர்க்க வேண்டியிருக்காது.
* பாகற்காய், கோவைக்காய் போன்றவை இரண்டொரு நாளில் பழுத்து விடும். இதை தவிர்க்க, நீரில் கழுவி, வேண்டிய அளவில் நறுக்கி கண்டெயினர் டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ஐந்து நாட்கள் வரை கெடாது.
* ஆரஞ்சுப் பழத்தோலைக் கிள்ளி தேயிலையுடன் சேர்த்து டீ போட்டால் மணம் கமகமக்கும்.
* வெங்காயத்தாள், கோவைக்காய், வாழைக்காய் இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி, இத்துடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, வினிகர், மிளகு, சீரகத் தூள், உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து அந்த மாவைக் கிள்ளி கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால் கலர்ஃபுல் பக்கோடா ரெடி.
* எந்தக் காயில் புளிக்கூட்டு செய்தாலும் கடலைப்பருப்புக்கு பதில் கொண்டைக் கடலை சேர்த்து கூட்டு செய்யலாம். காய் வெந்ததும் தேவையான அளவு தேங்காய், காய்ந்த மிளகாய், தனியா சேர்த்து அரைத்து அதோடு ஒரு கொட்டைப்பாக்கு அளவு வெல்லம் சேர்த்து, அச்சில் பிழிய வேண்டும். அந்த கூழில் இரண்டு ஸ்பூன் கசகசா சேர்த்து கிளறி கூழ் தயாரிக்கவும். இதில் வடாம் செய்தால் மனம் கமகமக்கும்.
* கொத்தவரங்காய் பொரியல் செய்யும்போது சின்ன வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி, அதோடு சேர்த்து வதக்கினால் சூப்பராக இருக்கும்.
* இட்லியை நீளமாக, குறுக்காக சிறு சிறு துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து, சூடாக இருக்கும் போதே சிறிது சர்க்கரை தூவி விட்டால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
* ஒரு கப் ஓட்ஸ்வுடன் ஊறவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, குக்கரில் வேக விடுங்கள். பிறகு தாளிப்புச் சேர்த்தால் மணக்கும். ஓட்ஸ் பொங்கல் ரெடி.
– எம். ஏ. நிவேதா