சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அவரது கணவர் ேஹம்நாத்தை விடுதலை செய்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த நிலையில் அவரது கணவர் ஹேம்நாத்தான் தங்களது மகளை கொலை செய்ததாக சித்ராவின் பெற்றோர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
மேலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டியதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் ஹேம்நாத் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில், கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 57 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டை காவல்துறை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்காததால், அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி ரேவதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக சித்ரா தரப்பில் மேல்முறையீடு செய்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக ஹேம்நாத்தின் வழக்கறிஞர் எஸ்.கே.ஆதாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.