பெண் உடலில் எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கட்டிகள் தோன்றலாம். சில சாதாரண வேனல் கட்டிகளாக இருக்கலாம். சில புற்றுக் கட்டிகளாகவும் இருக்கலாம். சிலருக்கு மார்பகங்களில் சிறு சிறு கட்டிகள் மாதவிலக்கு சமயத்தில் மட்டும் தோன்றி மறையும். வலி இருக்கும். ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக வரும் இக்கட்டிகளுக்கு ஃபைப்ரோ அடினோஸிஸ் (FIBRO ADENOSIS) என பெயர். பயப்பட தேவையில்லாத கட்டிகள் இவை. இப்படி உடலில் உண்டாகும் கட்டிகளை எப்போதும் அலட்சியம் செய்யாமல் எப்படி ஆரம்பத்திலேயே பிரச்னைகளை கண்டறிந்து சரி செய்யலாம். சிலருக்கு மார்பகங்களை அழுத்திப் பார்த்தால் சின்ன உருண்டை போல் உருளும் கட்டி தட்டுப்படும். இதுவும் ஹார்மோன் சமச்சீரின்மையால் வருவதே இதன் பெயர் ப்ரெஸ்ட் மவுஸ் (Breast Mouse). இது வளரக்கூடியது. மருந்து, மாத்திரையால் குணப்படுத்தி விட முடியும். முடியவில்லையெனில் அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம். இவை வளர வளர மர்புப் பகுதி தசைகளை அழுத்தி, வலி உண்டாக்கும் என்பதால் ஆரம்பத்திலேயே மருத்துவ உதவி பெறுவது அவசியம்.
பிரேஸியர் போன்ற உடலை இறுக்கும் உள்ளாடைகளை துவைக்காமல் பயன்படுத்தினால் அழுக்கு கட்டிகள் ஏற்படலாம். கட்டிகளின் முனையில் முள்போல் கறுப்பாக இருந்தால் அழுக்கு கட்டிகள் என அறிய வேண்டும். இதை மருந்தின் மூலம் குணப்படுத்தலாம்.சிலருக்கு மார்பு, கைகள் மற்றும் உடல் பாகங்களில் லிபோமா (LIBOMA) என்னும் கொழுப்பு கட்டிகள் ஏற்படலாம். இந்த கட்டிகளால் உபத்திரவம் இராது. ஒரு கட்டி மட்டும் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். பல இருப்பின், அவை மேலும் வளராதிருக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறப்புறுப்பு சுத்தமாக இல்லாவிடில், அல்லது பிரசவகால தொற்றால் நீர்க்கட்டிகள் ஏற்படலாம். நீர்க்கட்டிகளை கைகளால் தொட்டால் இன்ஃபெக்ஷன் ஆகிவிடும். மகப்பேறு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறலாம். பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதற்கான தீர்வு. மார்பக காம்பிலிருந்து வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் எப்போதாவது திரவம் ஒழுகும். மார்பகத்தின் உள்புற குழாயில் அடைப்பு ஏற்படுவதால் அங்கிருந்த நீர் இப்படி வெளியேறுகிறது. இவ்வகை கட்டிகள்.புற்றுக்கட்டிகளாய் மாற வாய்ப்புள்ளதால் உடனடி கவனம் தேவை. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்துவிட வாய்ப்புண்டு. எதுவாயினும் மார்பகங்களில் நீர் போன்ற திரவம் வழிந்தாலே மருத்துவரை அணுகுவது நல்லது.
அக்குள் மற்றும் தொடை பகுதிகளில் வாசனை திரவியங்கள், சென்ட், பவுடர் போடுவதால் அங்குள்ள வியர்வை சுரப்பிகள் அடைப்பட்டு, அதனால் வியர்வை கட்டிகள் வரலாம். இந்த வகை கட்டிகளில் ஒழுகும் நீர் துர்நாற்றத்துடன் இருக்கும். அந்த இடங்களை சுத்தமாய், உலர்வாய் வைத்துக் கொண்டாலே இவ்வகை கட்டிகள் தோன்றாது. தேவை இருப்பின் தோல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறலாம்.பால் தரும் அம்மாக்கள் பாப்பாவின் தேவையறிந்து பாலூட்ட வில்லை என்றால் பால்கட்டிகள் ஏற்படும். மார்பகத்திற்கும் அக்குளுக்கும் இடைப்பட்ட இடத்தில் நெரி கட்டிக் கொள்ளும். இவ்வகை கட்டிகள் புற்று நோய் கட்டிகளாக மாற வாய்ப்புள்ளதால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.உடல் சுத்தம் பேனாத, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாத டயபடீஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு தோள்களுக்கு மத்தியில் முதுகுப்பகுதியில் CARBUNCLE என்னும் சீழ்கட்டிகள் ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை பெற்று, சர்க்கரை பாதிப்பை குறைத்தால் இதை குணமாக்கி விடலாம்.மார்பக காம்புகளில் சுத்தமின்மை, அழுக்கு அல்லது ரசாயனம் கலந்த நீரில் குளிப்பது, வியர்வை படிந்த ஆடைகள் அணிவது இவற்றால் மார்பகக் காம்புகளில் சீழ்கட்டிகள் ஏற்படலாம். இதற்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
இளம் வயதினருக்கு முகத்தில் பருக்கள், பருகட்டிகள் ஏற்படலாம். முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உணவில் கொழுப்பு பதார்த்தங்களை குறைப்பதுமே இதற்கான தீர்வு. மேலும் பழங்கால வகையான இயற்கை குளியல்களான வேம்பு, மஞ்சள், சீயக்காய் கலந்த குளியல்களை முயற்சி செய்து பார்க்கலாம். அதீத எண்ணெய் பிசுக்கும். வியர்வையும் கூட பருக்கள், கட்டிகளை உருவாக்கும். சுத்தம் மட்டுமே இதற்குத் தீர்வு. சிலருக்கு நெற்றிப் பகுதிகளில் வேர்க்குரு போன்ற சிறு பருக்கள் உண்டாகும். இவை வலிகள் பெரிதாக இல்லாதவை ஆனால் நம் தலையின் சுத்தத்தைத் தீர்மானிக்கும் கட்டிகள் இவைதான். தலையில் பொடுகு, பேன், ஈர் தொல்லைகள் இருந்தால் முடியை சுற்றியுள்ள சருமத்தில்தான் அறிகுறிகள் தென்படும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து தலை குளியல், வாரம் ஒரு முறை கற்றாழைச் சாறு பேக், உள்ளிட்ட பராமரிப்புகள் மூலம் இந்த பொடுகு கட்டிகளைத் தவிர்க்கலாம். மன அழுத்தப் பருக்கள். 20 வயதுக்குள் அல்லது அதிகமாக 25 வயதுக்குள் வரும் பருக்கள், பருவம் சார்ந்த பருக்கள், அதைத் தாண்டிய 30 வயதுக்கு மேலான பருக்கள் எண்ணெய் பிசுக்கு வகை எனில் மற்றொன்று மன அழுத்தப் பருக்கள். அல்லது இரத்த அழுத்த பருக்கள். கூடுமானவரை தங்களை சந்தோஷமாக, லேசான நேர்மறை எண்ணங்களுடன் வைத்திருந்தாலே முகம் பிரகாசிக்கும்.
– மல்லிகா குரு.