பொதுவாக புதிய வீடு கட்டு வதற்கு முன்னதாகவோ அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றாலோ வாஸ்து பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஒட்டுமொத்த வீட்டையுமே வாஸ்து பார்த்து எப்படி கட்டினால் நல்லது, எப்படியெல்லாம் கட்ட கூடாது என்பதையெல்லாம் தெரிந்து, நன்கு ஆராய்ந்து வீட்டை கட்டுவதே சிறந்தது. வீட்டின் படுக்கையறை, குளியலறை, பூஜை அறை, சமையலறை என அனைத்திற்குமே வாஸ்து பார்க்க வேண்டியது
அவசியம்.குறிப்பாக சமையலறையை வாஸ்து அடிப்படையில் வடிவமைப்பது, நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவுவது மட்டுமல்லாமல், இனிமையான வாழ்க்கை அமைவதையும் உறுதி செய்கிறது. சமையலறையானது உங்கள் வீட்டின் மையமாக இருப்பதால் அதற்கு சிறப்புக்கவனிப்பு தேவை. நாம் அன்றாடம் உண்ணும் உணவைத் தயாரிப்பது, பெரும்பாலான நேரத்தை வீட்டு பெண்கள் சமையலறையில் செலவிடுவது எல்லாம் அங்குதான். எனவே நேர்மறை அதிர்வுகளை ஈர்க்க, வீட்டில் உங்கள் சமையலறையைக் கட்டுவதற்கு முன்பு வாஸ்துக் குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். அமைதியான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்காக வீட்டில் சமையலறை கட்டுவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய சில வாஸ்துக் குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
திசை பொதுவாக வீட்டின் தென்கிழக்கு திசையானது நெருப்பால் ஆளப் படுகிறது. அதே சமயம், சமையலறையும் நெருப்பால் ஆளப்படுவதால், சமையலறையை வீட்டின் தென்கிழக்கு மூலையை நோக்கி வைக்க வேண்டும். ஒருவேளை, இந்த திசை சாத்தியமில்லை என்றால், வீட்டின் வடமேற்குப்பகுதி சமையலறைக்கான இரண்டாவது மாற்றாக இருக்கலாம்.அடுப்படி சமையலறைக்கான இடத்தை தேர்ந்தெடுத்த பின்னர், அடுப்பை வைப்பதற்கான இடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இது சமையலறையின் முக்கிய நெருப்பு ஆதாரமாகும். மீண்டும், அது ஒரு நெருப்பு உறுப்புக்கு சொந்தமானது என்பதால், அதுவும் தென்கிழக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும்.
சமையலறைக்கு வாஸ்து கொள்கைகளின்படி, உணவு சமைப்பவர், சமைக்கும் போது கிழக்குத்திசை நோக்கி இருக்க வேண்டும் என்பது அவசியம்.
பாத்திரம் கழுவுமிடம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி அடுப்பிற்கு சற்று தொலைவில் பாத்திரம் கழுவும் தொட்டியை அமைக்க முயற்சி செய்யுங்கள். அதிலும், வடகிழக்குத்திசை இதற்கு ஏற்ற இடம். இப்படி இருக்கையில் அடுப்பு தென்கிழக்குத்திசையில் இருக்க வேண்டும்.
அலமாரி
சமையலறையின் தெற்கு மற்றும் மேற்குத்சுவர்கள் அலமாரிகளை கட்டுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்குச் சுவர்களை எப்போதும் காலியாகவிட்டுவிட வேண்டும். கூடுதலாக, செல்வத்தையும் மகிழ்ச்சியையும் ஈர்க்க சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
மின்சாதனப் பொருட்கள்
சமையலறையில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் தெற்கு அல்லது தென்கிழக்குத் திசையில் அமைந்திருக்க வேண்டும். இதில் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, மிக்ஸி மற்றும் மைக்ரோவேவ் ஆகியவை அடங்கும்.இவற்றைப்பொருத்தவரை நீங்கள் வடகிழக்கு திசையைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், குளிர்சாதனப்பெட்டியை மூலையில் இருந்து குறைந்தபட்சம் ஒரு அடி தூரத்திலாவது வைக்க வேண்டும்.ஜன்னல்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீடு எப்படி காற்றோட்டமாக இருக்க வேண்டுமோ, அதே போலத்தான் சமையலறையும் நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமையலறைக்கும் கட்டாயம் ஜன்னல் இருக்க வேண்டும். காலை விடிந்தவுடன் சூரியஒளி சமையலறையின் உள்ளே நுழையும் வகையில் கிழக்கு நோக்கி ஒரு ஜன்னல் நிச்சயமாக இருக்க வேண்டும்.
நிறம்
சமையலறைக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு, சாக்லேட், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு போன்ற துடிப்பானவண்ணங்களைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. கறுப்பு அல்லது சாம்பல் போன்ற இருண்ட அல்லது மனச்சோர்வடைய செய்யும் வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவும்.சமையலறையின் தரைத்தளம் எப்போதும் பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றிப்பாருங்கள் உங்கள் சமையல் அறை ஜொலிக்கும்.
– கவிதா பாலஜிகணேஷ்