*காலையில் செய்த பொரியல் மீதி இருந்தால் அதில் வெங்காயம், பச்சைமிளகாய், மிளகாய் பொடி, கரம் மசாலா சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா மாவில் தோய்த்து பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கட்லட் தயார்.
*சாம்பார் சாதம் தயார் செய்த பின் 15-20 சுண்டைக்காய்களை நல்லெண்ணெயில் வறுத்து சாதத்தில் கலக்கவும். பிரமாத சுவையுடன் இருக்கும்.
*சாம்பார் வைத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது, மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்த தனியா தூளை சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்குங்கள். சாம்பார் கமகமக்கும்.
*வீட்டில் தேங்காய் இல்லா விட்டால் பொட்டுக்கடலை சிறிது, உப்பு, கொத்தமல்லி சிறிது, புளி சேர்த்து அரைத்து, கடுகு தாளித்தால் திடீர் சட்னி தயார்.
*கொத்தமல்லி, புளி, வெல்லம், இட்லி மிளகாய்ப் பொடி, பச்சைமிளகாய் அரைத்து, கடுகு தாளித்தால் தொட்டுக் கொள்ள ருசியான அவசர சட்னி ரெடி.
*பிரெட் சாண்ட்விச் செய்யும்போது பட்டர், வெள்ளரி, கேரட் வைத்து அதனுடன் ஏதேனும் முறுக்கு அல்லது மிக்சர் வைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
*சாபூதானா கிச்சடி ஜவ்வரிசி செய்த பின் பொடித்த வேர்க்கடலையுடன் தனியா, காய்ந்தமிளகாய், பொட்டுக் கடலை வறுத்து பொடி செய்து போடவும். இப்போது சுவை அள்ளும்.
*தக்காளி தொக்கு செய்ய மிக்ஸியில் தக்காளியுடன் சிறிது புளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிது வெல்லம் இரண்டு ஸ்பூன் இட்லி மிளகாய்ப் பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து அரைத்து செய்தால் சுவையோ சுவை.
*ரவா உப்புமா அல்லது கிச்சடி செய்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு முறை கிளறவும். வாசனையும், சுவையும் அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டில் நாம் அதிகமாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதில்லை. ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.
*புளியோதரை சாதம் செய்தபின், தனியா 2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் 6, வெந்தயம் ½ ஸ்பூன், வேர்கடலை 14, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக வாணலியில் வறுத்துப் பொடி செய்து சாதத்தில் கலக்கவும். அப்போது தனிச் சுவையுடன் கூடிய புளியோதரை தயார்.
*அரிசியையும் பருப்பையும் வாசனை வரும் அளவு வறுத்து பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
– அ.ப.ஜெயபால்
குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்
0