*பொங்கல் செய்யும் போது மிளகை லேசாக வறுத்து பொடித்து சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும்.
*வாழைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை சமைக்கும் பொழுது முன் கூட்டியே துண்டுகளாக நறுக்கி வைக்கக் கூடாது. அதன் மீது காற்று பட்டால் அதன் நிறம் கறுப்பாக மாறிவிடும். அதற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி மோர் கலந்த தண்ணீரில் கத்தரிக்காய், வாழைக்காய் வெட்டி வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
*முட்டையை வேகவைக்கும் பொழுது ஐந்து துளிகள் கடலை எண்ணெய், கொஞ்சம் உப்பு போட்டு வைத்தால் போதும். முட்டையை வேகவைத்த பின்பு அதன்தோலை கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விட முடியும்.
*இட்லி அதிகமாக தயார் செய்து விட்டால் வீணாக தூக்கிப் போடாமல் சிலர் உப்புமா செய்வது வழக்கம். அப்படி இட்லி உப்புமா செய்யும் பொழுது இட்லிகளை தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து பின்னர் தண்ணீர் இல்லாமல் உதிர்த்து வைத்து தாளித்து உப்புமா செய்தால் உப்புமா வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.
*தேங்காயை அதன் ஓட்டிலிருந்து பிரித்தெடுக்க பலரும் அவதிப்படுவார்கள். முழு தேங்காயை மூடியுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொண்டு ஓட்டை கொஞ்ச நேரம் நெருப்பில் வைக்க வேண்டும். எல்லா பக்கமும் நெருப்பு படும்படி இரண்டு நிமிடம் திருப்பி விட வேண்டும். ஓடு தனியாகவும், தேங்காய் தனியாகவும் எடுக்கசுலபமாக இருக்கும்.
*பூரி மற்றும் சப்பாத்தி மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெதுவெதுப்பான சுடு தண்ணீர் தெளித்து பிசைந்தால் மாவு மிருதுவாகும். இதனால் சப்பாத்தியும் ரொம்பவே மென்மையாக இருக்கும்.
*மீந்து போன தோசை மாவில் பொட்டுக்கடலை மாவு, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு பிசைந்து கொதிக்கும் எண்ணெயில் பக்கோடாவாக தயாரித்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.
*காய்ந்துபோன கறிவேப்பிலை இலைகளை சேமித்து குழம்பு மிளகாய்த்தூள் அரைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
– அ.ப.ஜெயபால்