உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்திற்காக அமைக்கப்படும் 4.5 கிமீ தூர சுரங்கபாதை பணி தற்போது நடந்து வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் சார்தாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக 4 ஆயிரத்து 531 மீட்டர் கொண்ட சில்யாக்ரா சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்க சாலையானது கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி பகுதிகளை இணைக்க உள்ளது. இந்த சுரங்கபாதை பணியின் ஒருபகுதி கடந்த 12ம் தேதி தீபாவளி தினத்தன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏற்பட்ட மண் சரிவில் சுரங்கத்தில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்க இயந்திரங்கள் 24 மீட்டர் வரை துளையிட்டுள்ளன. அந்த இயந்திரத்தில் இருந்து சப்தம் வெளிப்பட்டதால், இந்திய விமான படை உதவியோடு மற்றொரு டிரில்லிங் இயந்திரம் அப்பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் துளையிடும் பணியை நிறுத்தும் அளவுக்கு சுரங்கத்தின் உள்ளே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் இடிந்து விழும் அபாயம் நிலவியது. உத்தரகாசி சுரங்கத்திற்குள் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், 7 தினங்கள் ஆகியும் மீட்பு பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. 900 மில்லி மீட்டர் விட்டம் மற்றும் 21 மீட்டர் நீளம் கொண்ட ஸ்டீல் பைப்பை சுரங்கத்திற்குள் நுழைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
அடுத்தக்கட்டமாக சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்க மாற்று ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பதற்றத்தால் உடல் நலிவு அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர், ஆக்சிஜன், மருந்துகள், உலர் பழங்கள், உணவு பொருட்கள் தண்ணீர் பைப்புகள் மூலம் தினமும் 3 முறை அனுப்பப்பட்டு வருகின்றன. சுரங்கத்தின் உள்ளே சிலிக்கா அதிகளவு இருப்பதால் தொழிலாளர்களுக்கு சுவாச பிரச்னைகளும் ஏற்பட்டு உள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மீட்பு பணிகள் ஒருபுறம் நடக்க எவ்வித முன்னேற்றமும் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் உடல்நிலையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. மீட்பு பணிகள் ஒருவாரம் நடந்தும் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காத நிலையில், தொழிலாளர்களின் குடும்பங்கள் கவலை அடைந்துள்ளன. நாட்கள் கடக்க, கடக்க அவர்கள் நம்பிக்கையையும், பொறுமையையும் இழந்து வருகின்றனர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையிலும், இன்னமும் இடிபாடுகளின் போது சிக்கிக் கொள்பவர்களை மீட்க தேவையான மீட்பு கருவிகள் போதிய அளவில் இல்லை.
சுரங்கப்பாதைகள், மலைகளுக்கு மேல் நடக்கும் கடின பணிகள் ஆகியவற்றின்போது அதிக தொழிலாளர்களை ஈடுபடுத்தும்போது, அதற்கேற்ப பாதுகாப்பு வழங்குவதும் முக்கியம். இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பதற்கான உபகரணங்களும் கண்டறியப்பட வேண்டும். வட மாநிலங்களை பொறுத்தவரை வறுமையின் பிடியில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் அவர்களை நம்பியே உள்ளன. அவர்கள் குடும்ப சூழல்களை கருத்தில் கொண்டாவது மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.