கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே தேத்தாம்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வழுக்கு மரம் ஏறும் போட்டி நேற்று நடைபெற்றது.
இதற்காக 50 அடி உயரம் உள்ள கழுமரம் வெட்டி கொண்டு வரப்பட்டது. அதன் பட்டைகள் உரிக்கப்பட்டு வழுக்கும் பொருள்களான சோற்றுக்கற்றாழை, எண்ணெய் வகைகள் தடவப்பட்டு கோயில் மைதானத்தில் ஊன்றப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தேத்தாம்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர உச்சியில் ஏறி, அதில் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருள்களை அவிழ்த்தார். இந்த போட்டியை சுற்றுவட்டார கிராமமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.