மன்னார்குடி: கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றி கடைமடை வரை பாசனநீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து பிரியும் மூன்று முக்கிய ஆறுகளின் ஒன்றான வெண்ணாறு லட்சுமாங்குடி கூத்தாநல்லூர் பாண்டுக்குடி வடபாதிமங்கலம் புள்ளமங்கலம் வழியாகச் சென்று அரிச்சந்திரா ஆற்றில் கலக்கிறது.இந்த வெண்ணாறு மற்றும் அதிலிருந்து பிரியும் பல்வேறு கிளை வாய்க்கால்கள் மூலம் வரும் நீரை ஆதாரமாகக் கொண்டு ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர.
இந்த நிலையில் வெண்ணாற்றில் லெட்சுமாங்குடியில் இருந்து சுமார் 10 கிமீ தூரத்திற்கு மேலாக பல மாதங்களாக ஆறு தெரியாத வகையில் ஆகாய தாமரை மண்டி கிடக்கிறது. இதனால், விவசாயத்திற்காக கடைமடை வரை செல்ல வேண்டிய நீர் சீராக செல்ல வழி இல்லாமல் தடுக்கப்படுகிறது. மேலும், ஆற்றில் வழி நெடுகிலும் பரவி கிடக்கும் ஆகாய தாமரை மூலம் ஆற்று நீர் மாசுபட்டு அதன் மூலம் நிலத்தடி நீரும் பாழ்பட்டு வருகிறது. இதையடுத்து, வெண்ணாற்றில் பதவி கிடைக்கும் ஆகாய தாமரைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வெண்ணாறு தண்ணீர் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் கூறுகையில், குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.அவ்வாறு திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை தங்கு தடை இன்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அண்மையில் தூர்வாரப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் வெண்ணாற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளால் கடைமடை விவசாயத்திற்கு காவிரி நீர் வருவது கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் ஆகாய தாமரை செடிகளை முழுமையாக அகற்றி கடைமடை பகுதிக்கு விவசாயிகளுக்கும் காவிரி நீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ஆறு ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆகாய தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்து வருவது நீர்நிலைகளை சூழ்ந்து போக செய்து விடும். இதனைத் தவிர்க்க ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அவனை இயற்கை உரமாக மாற்றலாம். டபிள்யு டி சி எனப்படும் வேஸ்ட் டிகம்போஸ் ஜெல், நாட்டு சக்கரை இரண்டையும் நீருடன் சேர்த்து திரவம் தயார் செய்து வெங்காய தாமரை செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதில் தேங்காய் நார் கழிவு சேர்க்கப்பட்டு படுதா கொண்டு மூடி வைத்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் மீண்டும் கிளறிவிட்டு கரைசல் தெளிப்பான் மூலம் தெளித்தால் 45 நாள் முடிவில் இயற்கை உரம் கிடைக்கும் என்றனர்.