Monday, April 15, 2024
Home » வானமும் வசமாகும்!

வானமும் வசமாகும்!

by Porselvi

கடவுளின் படைப்பில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கிறது. என்னிடம் என்ன திறமை இருக்கிறது? என்னும் கேள்வியுடனேயே பல இளைஞர்கள், இளம்பெண்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தம்மிடம் எந்த தனித்திறமையும் இல்லை என்பது இவர்களின் தீராக் கவலை.அவர்களுக்குத்தான் இந்த வழிகாட்டு நெறி, ஒன்றை திடமாக நம்ப வேண்டும். ஒவ்வொருவரிடம் ஒரு திறமை இருக்கின்றது. தாழ்வு மனப்பான்மையால் தளர்ந்து போவதை விட கர்வம் கொண்டவனாக தன் திறமையின் மீது அகந்தை கொண்டவனாக இருப்பது மேல். இதற்கு ஒரு கதையை உதாரணமாகச் சொல்லலாம்.முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில்,வித்தியாசமான ஆட்சிமுறை இருந்தது. அதாவது,அந்த நாட்டில் யார் வேண்டுமானாலும்,மன்னன் ஆகலாம்.மன்னனின் ஆட்சிக்காலம் ஒரு ஆண்டு மட்டுமே. விதி என்னவென்றால், ஆட்சிக்காலம் முடிந்ததும்,நாட்டின் எல்லையில் கடல்.அதைக்கடந்து போனால்,கொடிய விலங்குகள் நிறைந்த கானகத்தில் விட்டுவிடுவார்கள்.கரை இறக்கிய அடுத்த நொடியே, விலங்குகள் அம்மனிதனைக் கொன்றுவிடும்.

இதுமாதிரி பல மன்னர்கள்,ஆட்சிமுடிந்ததும்,உயிரை இழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மன்னனும் படகில் பயணிக்கும் போதே,படகோட்டியிடம் கதறி அழுவார்களாம்.படகோட்டிக்கு, ஒவ்வொரு ஆண்டும்,பார்த்து பழகிவிட்ட ஒன்றாகிவிட்டது. இது போல ஒரு ஆண்டு, ஒரு மன்னன், கானகம் செல்ல படகில் பயணிக்கலானான். அவன் வழக்கத்திற்கு மாறாக, படகோட்டியிடம், மிகவும் ஆனந்தமாக,சிறிதும் கவலைப்படாமல், பேசிக்கொண்டு வந்தான். படகோட்டிக்கோ வியப்பு தாங்கமுடியவில்லை. அம்மன்னனைப் பார்த்து, ‘‘சந்தோசமாக வருகிறாயே, இன்னும் சற்று நேரத்தில் இறக்கப்போகிறோம் என்ற கவலை இல்லையா” என்று கேட்டான்.அதற்கு அவன், ‘‘கடந்த ஒரு ஆண்டு ஆட்சிக்காலத்தில், படைவீரர்களை கானகத்திற்கு அனுப்பி, கொடியவிலங்குகளை வேட்டையாடச்சொல்லி விட்டேன்.விவசாயிகளை அனுப்பி, நிலத்தை பண்படுத்தி,வேளாண்மைசெய்யச் சொல்லிவிட்டேன். இப்போது நான் போய் தனிக்காட்டு ராஜாவாக, மகிழ்ச்சியாக வாழப்போகிறேன்” என்றானாம்.

இப்படி கிடைத்த அதிகாரத்துடன் தன் திறமையும் சேர்த்துக்கொண்டு செயலாற்றினால் பல நன்மைகள் வந்து சேரும். அப்படித் தன் திறமையால் சாதித்த சாதனைப் பெண் தான் திவ்யா.ஒருவர் நம்மை ஏளனமாக பேசும் போது, அவர் முன் நாம் சாதித்து காட்ட வேண்டும் என்ற வேகம் எழும்,அதற்கான வாய்ப்புகள் அமையும் போது அந்த வேகத்தை நாம் செயலில் காட்டினால் பெரிய உயரத்தை அடையலாம்.அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபரான திவ்யா ராவ்.திவ்யா ராவ் அடிப்படையிலேயே நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது அதை இலக்காக மாற்றி கொண்டார். ஆனால் அந்த காலகட்டத்தில் திவ்யாவால் பத்து ரூபாய் செலவு செய்வது கூட கடினமான விஷயமாக இருந்தது.

இருப்பினும் படிப்பில் கெட்டிக்காரராக இருந்த திவ்யா 21 வயதில் CA தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைத் தொடர்ந்து நிதி மற்றும் மேலாண்மை படிப்புக்காக அகமதாபாத் ஐ.ஐ.எம். சென்றார். அதுவரை அவரது வாழ்க்கை இயல்பான ஒன்றாகத் தான் இருந்தது.அகமதாபாத் ஐ.ஐ.எம்.யில் பேராசிரியர் ஒருவர் பாடம் எடுக்கும் போது, இந்தியர்கள் உணவகங்களை நடத்துவதில் திறமையானவர்கள் அல்ல. நாம் மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் மற்றும் கே.எஃப்.சி.யின் வர்த்தக செயல்பாடுகளை படிக்கிறோம், எந்தவொரு இந்திய உணவகங்களின் வர்த்தகத்தை பற்றி படித்தது இல்லை என்று தெரிவித்தார்.

பேராசிரியரின் இந்த பேச்சு திவ்யா ராவின் மனதிற்குள் பெரிய வலியை கொடுத்தது. இதனை மாற்றிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் திவ்யா ராவுக்கு ஏற்பட்டது.இருப்பினும் நல்ல சம்பளத்தில் ஒரு வேலையில் பணியாற்றினார். அந்த சூழலில் உணவுத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தும் ஓட்டல் தொழிலில் தோல்வியடைந்த ராகவ், மீண்டும் ஓட்டல் தொழில் தொடங்க விரும்பினார். அதற்காக ஆலோசனைகள் கேட்பதற்காக திவ்யாவை ராகவ் சந்தித்தார்.அப்போது திவ்யா ராவுக்கு, இந்தியர்களுக்கு உணவகம் நடத்த திறமை கிடையாது என்ற பேராசிரியரின் ஏளனமான பேச்சு மற்றும் பயமுறுத்தும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. இதனையடுத்து பேராசிரியரின் கூற்றை மாற்றிக்காட்ட இதுதான் நமக்கு வாய்ப்பு என்று முடிவு செய்த திவ்யா ராவ் தான் பார்த்து கொண்டிருந்த வேலையை விட்டார். ராகவுடன் ஓட்டலில் பார்ட்னராக திவ்யா ராவ் இணைந்தார்.பெங்களூரில் உணவகம் ஒன்றை தொடங்கினார். நெய், இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுகளை விற்பனை செய்தார். ஆரம்பத்தில் வியாபாரம் சுமாராக இருந்தது. ஆனால் பின்னர் வியாபாரம் சூடு பிடித்தது. உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் 95 சதவீதம் பேர் உணவை புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதன் மூலம் அவரது உணவகம் அந்நகரம் முழுவதும் பிரபலம் ஆனது.

அவரது உணவகத்தில் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அதிகாலை 1 மணி வரை மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். புதிய பொருட்கள் பயன்படுத்துதல், தரமான சேவை போன்றவை அவரது உணவகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து சென்றது. இப்போது பெங்களூருவில் அவரது உணவகத்திற்கு 4 கிளைகள் உள்ளன.முதல் ஹோட்டல் 10க்கு 10 கடையில் துவங்கப்பட்டு பெரிய வெற்றியை அடைந்தது. ஆனால் பிறகு வந்த கடைகள் பெரிது என்ற போதிலும் பிற ரெஸ்டாரண்ட்களை ஒப்பிட்டால் சின்னதாகவே உள்ளது. இந்த 4 கிளைகள் மூலம் நாள் ஒன்றுக்கு மொத்தம் 7,500 ஆர்டர்களை செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.4.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

தற்போது 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.துபாயில் மற்றும் ஹைதராபாத்தில் கிளைகள் திறந்துள்ளார். திவ்யா தனது தொழில் பார்ட்னர் ராகவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது உணவகத்திற்கு ராமேஸ்வரம் கஃபே என்று திவ்யா ராவ் பெயரிட்டு உள்ளார். அகமதாபாத்தில் படித்து விட்டு, தெருவில் இட்லி விற்பனை செய்ததற்காக தன்னை கேலி செய்தவர்களுக்கு மத்தியில் இன்று ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து தனது உயர்வால் பதிலடி கொடுத்துள்ளார் திவ்யா ராவ். எதையும் செய்யும் ஆற்றலும், திறமையும் நமக்குள் இருந்தாலும் ‘எதுவும் இல்லை என்னிடம்’ என்று நினைத்தால் எதுவும் இல்லைதான். ஆனால் திவ்யாவை போல ‘எதுவும் முடியும் என்னால்’ என்று நம்பினால் எதுவும் முடியும். நம்புங்கள் உங்களை நம்புங்கள்!உங்கள் திறமையை நம்புங்கள்! திடமாக நம்புங்கள்! இதுவே உங்கள் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுச் சீர்படுத்தும்! வானமும் வசமாகும்!

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi