Sunday, February 25, 2024
Home » தோல் நோய்களும் ஆயுர்வேதமும்

தோல் நோய்களும் ஆயுர்வேதமும்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஒருவரின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அவர் முகமே காட்டும் என்பதை இந்த பழமொழியின் மூலம் அறியமுடியும்.

தோல் என்பது மனித உடலின் மிகப்பெரிய உறுப்பாகும். நம் தோலானது நமக்கு அழகைமட்டும் தராமல் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு பாதுகாப்புக் கவசமாக விளங்கி, உடல் வெப்பத்தை சீர்படுத்தி, உடலுக்குத் தேவையான தண்ணீர், வைட்டமின்கள், கொழுப்பு, அமிலங்கள் போன்றவற்றைச் சேர்த்து வைத்து கொடுப்பதோடு, உடம்பிற்குத் தேவையில்லாத பலவற்றை வியர்வை மூலமாக நீக்கி, நம் உடலின் ஆரோக்கியத்தை காக்கிறது. ஆயுர்வேதத்தின்படி நம் தோலானது ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது. எனவே தோலில் வரும் நோய்களை நம் உடலில் உள்ள நோய்களின் பிரதிபலிப்பாகவே பார்க்கின்றோம்.

இப்பொழுது தோல் பிரச்னைக்கான நவீன மருந்துகள் ஓவர் தி கவுண்டர் எனப்படும் மருத்துவரின் குறிப்பேடு எதுவும் இல்லாமல் மருந்துக் கடைகளில் நாமே வாங்கிக்கொள்ளும் வகையில் மேற்பூச்சு மற்றும் உள் மருந்துகளாக கிடைக்கின்றன. ஆனால், இந்த மருந்துகள் அல்லது மேற்பூச்சு மேலோடு இந்த வியாதிகளை தற்காலிகமாக சரிசெய்வதை போல் தெரிந்தாலும் இவை எந்த ஒரு நிரந்தரத் தீர்வையும் கொடுப்பதில்லை. அவை தோலின் ஆழமான அடுக்குகளை ஒருபோதும் அடையாததால் அறிகுறிகளை மட்டும் தற்காலிகமாக மறைத்துவிட உதவக்கூடும். ஆனால் ஆயுர்வேதத்தில் “நோய்நாடி நோய்முதல்நாடி” என்ற அடிப்படையில், இந்தத் தோல் நோய்க்கான காரணங்களை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் வேரறுக்கப்படுகின்றது. ஆகவே ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மூலம் குணமாவதற்கு சில நாட்கள் ஆனாலும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.

அழகு என்பது பெண்கள் சார்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்ட காலம் உண்டு. ஆனால் இன்றோ ஆண், பெண் இருபாலருக்கும் வயது வித்தியாசமின்றி பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனாலும் பெண்கள் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகளேதான் உலகம் முழுவதும் அதிகமாக விற்கப்படுகின்றது.

பெண்களுக்கு பல்வேறு வயதுகளில் பல்வேறு தோல் நோய்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. உதாரணமாகக் குழந்தை பருவத்தில் டயாபர் அரிப்பில் ஆரம்பித்து பூப்படையும் காலத்தில் முகப்பரு, 30-40 வயதுகளில் எக்ஸிமா, பின்னர் மாதவிடாய் நிற்கும் தறுவாயில் படர்தாமரை, பாதவெடிப்பு, வயதான காலத்தில் செனிலே ப்ரூரிடஸ் (senile pruritus- பிற மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் அரிப்பு) போன்ற தோல்நோய்கள் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

இதில் எந்த வியாதியாக இருந்தாலும் ஆயுர்வேதத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சகர்மா சிகிச்சைகளான வமனம் என்னும் வாந்தி சிகிச்சை விரேசனம் என்னும் பேதி சிகிச்சை ஜலுகாவசரணம் என்னும் அட்டைவிடுதல், ஆகியவை நோய்க்கும் நோயாளிக்கும் ஏற்றாற்போல் தேர்ந்தெடுத்து பின்னர் உள்ளுக்கு மருந்துகளும் மேற்பூச்சு மருந்துகளும் தக்க பத்தியத்துடன் கொடுக்கும்போது நோய் முற்றிலுமாகக் குணமடையும்.

பொதுவாக நவீன மருத்துவம் போலில்லாமல் பஞ்சகர்மா சிகிச்சைகள் செய்து முடித்து அக்னி பலம் பெற்ற பின்னரே உள்ளுக்கு மருந்துகளும் மேலுக்கு எண்ணெய்களும் ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

தோல் நோய்களுக்கான பத்தியம்

எது எப்படியாக இருந்தாலும் பத்தியம் என்பது நோய் குணமாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
பத்தியம் இருந்தால் மருந்தேதற்கு, பத்தியம் இல்லாவிடில் மருந்தேதற்கு என்ற ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி எல்லா வியாதிகளுக்கும் பத்தியம் முக்கியமானது. அது போல் தோல்நோய்களுக்குச் சிகிச்சை முற்படும்போது பத்தியம் மிகவும் முக்கியமானது. உணவில் கத்தரிக்காய், தக்காளி, புளிப்பு சார்ந்த உணவுகள், சிட்ரஸ் பழங்கள், நிலக்கடலை எண்ணெய், நிலக்கடலை மற்றும் முட்டை, கோழி, கருவாடு போன்ற இறைச்சிகள், எண்ணெய்யில் பொரித்தவை, வறுத்தவை, சாஸ், ஜாம், அஜினோமோட்டோ, ஃபுட் கலர், பதப்பொருட்கள் ஆகியவை தவிர்க்க வேண்டும்.

தினசரி ஒருவேளையாவது இளஞ்சூடான நீரில் குளித்தல், இருவேளை முகம் கை கால் கழுவுதல், வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து கடலைமாவு, பச்சைப்பயறு தேய்த்து குளித்தல், அறுசுவையான வீட்டிலேயே சமைத்த காய்கறிகள், கீரை, மஞ்சள், இஞ்சி, சீரகம், சுக்கு அடங்கிய உணவுகள், பழங்கள், குறைந்தது 3 லிட்டர் தண்ணீர், 7 மணி நேர உறக்கம் ஆகியவை தோல் நோய்கள் மட்டுமில்லாமல் மற்ற நோய்கள் வராமலும் தடுக்கும்.

மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்தகத்தில் இருந்து தோல் சம்பந்தப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் மூலமாகவும் தோல் மற்றும் சுவாசத்தில் அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை.நைலான் ஆடைகள் அலர்ஜி ஏற்படுத்தலாம். முடிந்த அளவு கதர் ஆடைகளையே பயன்படுத்துவது நம் நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றதாகும்.இப்போது சில நோய்கள் பற்றியும் அதன் ஆயுர்வேத சிகிச்சை பற்றியும் பார்ப்போம்.

இவை அனைத்திற்கும் மேற்கூறிய பஞ்சகர்ம சிகிச்சை மற்றும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மருந்துகளை ஒரு தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும்.

முகப்பரு: பொதுவாக பெண்களுக்கு 15 வயதான பருவ வயதில் முகத்தில் வரக்கூடிய சருமநோய். இந்நோய் முகத்தில் மட்டுமல்லாமல் சிலருக்கு முதுகு, மார்பு போன்ற இடங்களிலும் காணப்படும்.

குறிகுணங்கள்: இப்பருவினுள் ஒருவகை கொழுப்புப் பொருளானது முளை போன்று இருக்கும். இதை அமுக்கி வெளியேற்றுவதால் ஒருவித வீக்கமும், வலியும், எரிச்சலும் ஏற்படும். முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள் வந்து சருமத்தின் அழகைக் கெடுக்கும்.

மருத்துவம்: குடுச்சி கஷாயம், கதிரரிஷ்டம் போன்ற மருந்துகள் உள்ளுக்கு கொடுக்க, நற்பலனைத்தரும். வெளிப்பூச்சாகக் கும்குமாதிலேபம், சந்திரலேபம் போன்றவை பயன்படுத்தலாம்.

கரப்பான்: இது தோலில் வீக்கம், தடிப்பு, புண் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தி படைகளை உண்டாக்கும். இது தோலை சொரசொரப்பாக்கி தோலின் இயற்கை நிறத்தை மாறுபடுத்தும்.

குறிகுணம்: தோளில் நமைச்சல், தடிப்பு, வறட்சி, வெடிப்பு, புண், எரிச்சல், நீர்க்கசிவு போன்றவை உண்டாகும். கசிந்த ஊனீர், உறைந்து பக்கு கட்டுதல், தோலில் புலால் நாற்றம் வீசும், தோல் கருமை நிறம் அடையும்.

மருத்துவம்: கந்தகரசாயனம், அமிர்த குக்குலு, நிம்பாதி கசாயம் போன்றவை உள் மருந்தாக வழங்கப்படும்.திரிபலா கசாயம், திநெஷவல்யதி கேரம், துர்துரபற்றாடாதி கேரம் வெளிமருந்தாக இந்நோய் தீவிரத்தை குறைக்க வழங்கலாம்.சொரியாசிஸ்: இந்நோயால் ஆண்களைவிட 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது பரம்பரையாக மூன்றில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் ஆகும்.

குறிகுணம்: செந்நிற பருக்கள், தடிப்புகள் உண்டாகும், பார்ப்பதற்கு பளபளப்பு உடைய செதில்களால் மூடப்பட்டிருக்கும். இழை தலை மற்றும் முகத்திலும் கூட வரலாம். நாட்பட்டுவிட்டால் செதில்கள் முழங்கை, முழங்கால்களில் காணப்படும். பெண்களுக்கு அக்குள், தொடை மடிப்பு, தொப்புள் இவ்விடங்களில் பாதிப்பை உண்டாக்கும்.

மருத்துவம்: மஞ்சிஷ்டாதி கசாயம், மஹாதிக்தகம் நெய், குக்குலு திக்டக நெய் போன்றவை உள் மருந்தாகவும், குடச ஆதித்யபாகத் தைலம், தூர்வாதி தைலம் போன்ற வெளிமருந்துகள் நற்பலனைத் தரும்.

படர்தாமரை: இது கோடைக்காலங்களில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் சரும நோயாகும். இந்நோய் தோலில் தொடை இடுப்பு, பிறப்புறுப்பு, மார்பகத்தின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ஏற்படும். இது உடல் தூய்மை இன்மை, சுத்தமில்லாத ஆடைகளை அணிவதன் மூலமாகவும் வரக்கூடிய நோய். இது தோலில் அதிக நமைச்சல், நோய் கண்ட இடத்தில் அரிப்பு, எரிச்சல் உண்டாகும். தோலின் நிறம் சிவந்து பின்பு கருமைநிறமாக மாற்றமடையும். சில படைகள் பனை ஓலைகளைப் போல் இருக்கும்.

மருத்துவம்: பரங்கி ரசாயனம், கதிராதி கஷாயம் போன்ற மருந்துகள் உள்ளுக்குக் கொடுத்தும், வெளிப்புறமாக சதடவுத நெய் மற்றும் அருகன் தைலம் வழங்கலாம்.

பாத வெடிப்பு: பாதங்களின் அடிபாகத்தில் வெடிப்பு. இதனால் பாதத்தில் வலி, சில நேரம் ரத்தக்கசிவு, நடக்க இயலாமை ஏற்படும்.

மருத்துவம்: குக்குலுதிக்தக நெய் உள்ளுக்கு கொடுத்து, வெளிப்புறமாக சிந்துராதி லேபம், ஜீவந்தியாதி யாமகம் போன்றவை வழங்கலாம். இதனுடன் பாதம் தூய்மையாக வைத்துக் கொள்வதன்மூலம் இந்நோயை தவிர்க்கலாம்.

வேர்க்குரு: கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் காணும் ஒருசிலருக்கு வேர்க்குரு வரும். இதனால் நமைச்சல், சிறுசிறு வேர்க்குருக்கள் ஏற்பட்டு சொறியை உண்டாக்கும்.

மருத்துவம்: நன்னாரி மணப்பாகு, திராட்ச்சாடி பாணியம், பரவலாபிஸ்டி உள்மருந்தாக உபயோகிக்கலாம் மற்றும் தூர்வாதி கேரம், சததெளத நெய் வெளிமருந்தாக தரலாம்.

டயாபர் அரிப்பு: இது குழந்தைகள், வயது முதிர்ந்தோர் குறிப்பாக பெண்களுக்கு டயாபர் பயன்படுத்துவதால் தோலில் வரும் பாதிப்பு. சிறுநீர், மலம் போன்றவற்றில் உள்ள நச்சுத்தன்மை வெளியாவதால் அது தோலில் உறிஞ்சப்பட்டு தோலில் பூஞ்சைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வாமையாலும் இது ஏற்படும்.

அறிகுறிகள்: கொப்புளம், சொறி, வறட்சி, அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படும். மேலும் சீழ் கோர்தல், படை, எரிச்சல், உண்டாகும். பெண்களுக்கு இதனால் பிறப்புறுப்புகளில் கட்டி, வீக்கம் ஆகியன உண்டாக வாய்ப்புண்டு.

மருத்துவம்: படோலதிகசாயம், கதிராதிகசாயம் திரிபலாகசாயம், நால்பமராதிகசாயம் உட்கொள்ளலாம். ஜாத்யாதி நெய் வெளிப்புறமாகப் பயன்படுத்தலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

twenty − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi