Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்கேட்டர் கேர்ள்!

புனேவின் வாகோலி நகரைச் சேர்ந்த ஷ்ரத்தா கெய்க்வாட் ஸ்கேட்போர்டில் உலகசாதனை படைத்திருக்கிறார்.சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கேட் போர்டிங் ஸ்ட்ரீட் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார் 16 வயது ஷ்ரத்தா. மகாராஷ்டிராவின் வளர்ச்சியடையாத பகுதியான பீட்டைச் சேர்ந்த ஷ்ரதாவின் குடும்பம் வறுமையின் பிடியால் அதீத துயருற்று வாழ்ந்ததால் ஊரை விட்டு வெளியேறினர். ஒருவேளை சாப்பாட்டிற்கும் கூட வழியில்லாத நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் புனேவிற்கு குடிபெயர்ந்தது. புனேவில் அவரது தந்தைக்கு டெகாத்லானில் வேலை கிடைத்தது. ஷ்ரத்தாவின் தினந்தோறுமான வழக்கம், அப்பாவுக்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுப்பது. 12 வயதில் எல்லாம் அங்கே இருந்த ஸ்கேட் போர்டு மீது ஏற்பட்ட ஆவலால் , தன்னிச்சையாக எடுத்துப் பழகத் தொடங்கினார் ஷ்ரத்தா. மேலும் ஷரத்தாவிற்கு உதவியாக கடையின் பணியாளர்களும் பயிற்சிகள் கொடுக்க தன்னையே அறியாமல் உலகக் கோப்பைக்காக தயாராகிக் கொண்டிருந்தார் ஷ்ரத்தா.

அவர் தந்தையின் மதிய உணவை வழங்குவதற்காக பெரும்பாலான மதியங்களில் வரும் ஷ்ரத்தா தொடர்ந்து பயிற்சி எடுத்துவந்திருக்கிறார். கடை ஊழியர்களிடமிருந்து அடிப்படைப் பயிற்சி யுடன் தனது திறமைகளையும் வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார். பயிற்சிக்காகவே அப்பாவுக்கு மதிய உணவு கொண்டு செல்வதைத் தவறாமல் செய்து வந்திருக்கிறார் ஷ்ரத்தா. தினம் மதிய உணவு கொண்டு வருவதும், உடன் ஸ்கேட் போர்டில் பயிற்சி பெறுவதுமாக இருந்த வேளைதான் கடையிலேயே ஸ்வப்னில் மாகரே என்னும் பயிற்சியாளரின் சிறப்புப் பயிற்சிகள் நடந்திருக்கின்றன. அப்போது ஷ்ரத்தாவின் திறமையைக் கண்ட ஸ்வப்னில் ஷ்ரத்தாவிற்கு முறைப்படி பயிற்சி கொடுக்க முடிவெடுத்தார். ஷ்ரத்தாவின் திறமையால் கவரப்பட்ட மாகரே அவரைத் தன் பிரிவின் கீழ் அழைத்துச் சென்று அவருக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.விளையாட்டில் ஈடுபடுவது குறித்து அவரது குடும்பத்தினர் தொடக்கத்தில் வேண்டாம் எனக் குறுக்கிட்டனர். தொடர்ந்து ஸ்வப்னில் கொடுத்த தைரியத்தால் 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த ஜுகாத் சர்வதேச ஸ்கேட்போர்டிங் போட்டியில் ஷ்ரத்தாவின் திறமை பிரகாசித்தது. முதல் களம், மற்றும் வீட்டை விட்டு முதல் முறையாக வெகுதூரப் பயணம், ஏக்கம் ஆகியவற்றைக் கடந்து, அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

விளைவு விளம்பரங்கள் மற்றும் திரைப்பட உலகத்தின் பார்வை ஷ்ரத்தா மீது விழுந்தது. புகழ்பெற்ற பிராண்டுகளுக்கான டிவி விளம்பரங்களில் நடிப்பது முதல் 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்கேட்டர் கேர்ள்’ திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தைப் பெறுவது வரை, ஷ்ரத்தாவின் விடாமுயற்சியும் ஸ்கேட்போர்டிங்கின் மீதான ஆர்வமும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன. தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் பெற்ற சமீபத்திய வெற்றி, ஷ்ரத்தாவிற்கு ஒலிம்பிக் மீது ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் தன் பயிற்சியாளர்கள், ஸ்கேட்டிங் நண்பர்களுடன் ஒன்றிணைந்து பல கிராமங்களில் இருக்கும் பெண்களையும் ஒன்றிணைத்து பயிற்சிப் பட்டறைகள் நடத்திவருகிறார் ஷ்ரத்தா. ‘எனக்குக் கிடைச்ச வாய்ப்பும், பயிற்சியாளர்களும் கிடைக்காம எத்தனையோ கிராமத்துக் குழந்தைகள் இன்னும் ஏக்கத்தில் இருக்கின்றனர். இதற்கு என்னால் ஆன ஆதரவுகளைக் கொடுப்பேன். என்றாலும் இது மட்டும் போதாது, ஸ்கேட்டிங் பொருத்தவரை வசதியான குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற நிலை உள்ளது. இதனை மாற்றி அரசே இதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் என்னைப்போலவே இன்னும் எத்தனையோ குழந்தைகள் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்வார்கள்' தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் ஷ்ரத்தா ‘தி ஸ்கேட்டிங் கேர்ள்'.

- ஷாலினி நியூட்டன்