நவ துர்கைகளில் ஐந்தாமவள் ஸ்கந்தமாதா என்ற துர்கை. சைல புத்திரியாக ஹிமவானுக்கு மகளாகப் பிறந்து, பிரம்ம சாரிணியாக கடுமையான தவம் புரிந்து, சந்திர கண்டாவாக மலர்ந்த இன் முகத்துடன் கூடியவளாக ஈசனை மணந்து, அண்டத்தை வயிற்றில் சுமக்கும் கூஷ்மாண்டா தேவியாகி, இப்போது கந்தனை ஈன்றெடுத்து அன்னையாகி இருக்கிறாள் ஜெகன்மாதா.
பெண்ணின் பருவங்களும் நவ துர்க்கைகளும்
பிறந்தவுடன் பெண் குழந்தைகள், தந்தையிடம் அதிக பிரியம் உள்ளனவாக இருக்கும் என்பது இன்றளவும் கண்கூடு. இப்படி, சின்னஞ்சிறு பெண்குழந்தைகளை குறிக்கும் துர்கை சைலபுத்திரி. பாடசாலை சென்று கல்வி பயிலும் பெண்களின் வடிவில் இருப்பவள் பிரம்மசாரிணி துர்க்கை. தனது மணாளனை கண்ட, காதல் பெருக்கில் பூரிப்பில், முகம் மலர்ந்து இருக்கும், மணப் பெண்ணை குறிப்பவள் சந்திர கண்டா துர்கை.
திருமணம் முடிந்து, சூல் கொண்ட பெண்ணின் வடிவில் இருப்பவள் கூஷ்மாண்டா துர்க்கை. குழந்தையை ஈன்றெடுத்த பெண்ணின் வடிவில் இருப்பவள் ஸ்கந்த மாதா துர்க்கை. பெற்ற தாய் தனது பிள்ளைகளிடம் பரிவு காட்டி அன்போடு வளர்ப்பது போல உலகை வளர்ப்பவள் இந்த ஸ்கந்த மாதா துர்க்கை.
இப்படி பெண்ணின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு தெய்வீக தன்மையை கொடுத்து, அதை வழிபட்டு வந்த நமது முன்னோர் களின் ஞானத்தை என்னவென்று சொல்லி வியப்பது?
புஜங்க தாண்டவமும் ஸ்கந்த மாதா துர்க்கையும்
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, பாற்கடலைக் கடைந்த போது முதலில் வெளிப்பட்டது ஆல கால விஷம் தான். அந்த ஆலகால விஷத்தை ஈசன், அண்டசராசரத்தையும் காக்கும் பொருட்டு, உண்டு, ஆலமுண்ட நீலகண்டனாக மாறினார். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு, என்று சொல்வதற்கு ஏற்ப, விஷமுண்ட மகேசன், மயக்கத்தோடு, மாலை வேளையில் பிரதோஷ தாண்டவம் புரிந்தார். இந்த தாண்டவத்துக்கு புஜங்க தாண்டவம் என்று பெயர். ஈசன் ஆடிய இந்த தாண்டவத்தில் இருந்து இந்த ஸ்கந்த மாதா துர்கை தோன்றியதாக சைவ ஆகமப்புராணங்கள் சொல்கிறது.
நவகிரகங்களும் ஸ்கந்த மாதா துர்க்கையும்
நவகிரகங்களில் செவ்வாய் மிகவும் முக்கியமானவர். பூமி, ரத்தம் போன்றவற்றுக்கு அதிபதியாக விளங்குபவர் இவர். இன்றும், ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பலர், திருமணம் ஆவதற்கும், திருமணம் ஆன பின்பும் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். இப்படி ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு, ஸ்கந்த மாதா தேவியின் வழிபாடு பெரிய வரப்பிரசாதம் தரும் என்றால் அது மிகையல்ல.
புராணங்களில் ஸ்கந்த மாதா துர்க்கை
தாரகாசுரன் என்ற அரக்கன் ஈசனுக்கும், உமை அம்மைக்கும் பிறக்கும் குழந்தை மூலமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் கேட்டு இருந்தான். வரம் பெற்ற மமதையில் உலகையே துன்புறுத்தினான் தாரகாசுரன். ஆகவே அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்களும் முனிவர்களும் சென்று ஈசனை இறைஞ்சினார்கள். அவர்கள் மீது கருணை கொண்ட இறைவன், நெற்றிக்கண்ணைத் திறந்து, அதிலிருந்து தனது சக்தியை வெளிப்படுத்தினார்.
அந்த சக்தி, ஆறு தீப்பொறிகளின் வடிவில், கங்கைக் கரையில் இருந்த நாணல் காட்டில் இருந்த ஆறு தாமரை மலர்களில் விழுந்து, ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தது. அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அவர்கள் வளர்த்த ஆறு குழந்தைகளை உமை அம்மை வாஞ்சையோடு அணைக்க, ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறி, ஆறுமுகத்து எம்பெருமானாக காட்சி தந்தது.இப்படி ஈசனின் சக்தியை, ஒன்றாக்கி உலகுக்கு ஆறுமுகனாக கொடுத்த அம்பிகையையே ஸ்கந்த மாதா என்று புராணங்கள் சொல்கிறது.
லலிதா சஹஸ்ரநாமத்தில் ஸ்கந்த மாதா துர்க்கை
தேவியின் ஆயிரம் நாமங்களை பட்டியலிடும் அற்புதமான நூல், லலிதா சஹஸ்ரநாமம். இதை அம்பிகையின் திருவாயில் இருந்து தோன்றிய வாக்தேவிகள் எட்டுப் பேர், அம்பிகையின் அருளால் இயற்றிய ஒன்றாகும். இதில் குஹாம்பா என்று ஒரு நாமம் வருகிறது. குகன் என்றால் முருகன் அவனை ஈன்று எடுத்தவள் என்று இந்த நாமத்துக்கு பொருள். இதற்கு, அறியாமையில் மூழ்கி இருக்கும் சாதகனுக்கு, ஞானம் என்ற ஒளி பிறக்க காரணமானவள் என்றும் ஒரு பொருள் உண்டு. அடுத்து குஹ ஜன்ம பூ: என்று ஒரு நாமமும் லலிதா சஹஸ்ர
நாமத்தில் வருகிறது. இந்த நாமத்துக்கும் ஆறுமுகனை உலகிற்கு கொடுத்தவள் என்றே பொருள்.
ஆறு ஆதாரங்களில் ஸ்கந்த மாதா துர்க்கை
உடலில் இருக்கும் சூட்சுமமான ஆறு ஆதார சக்கரங்களில், இந்த துர்கை விசுக்தி சக்கரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சாதகன், தனது யோக சாதனையால், தனது குண்டலினி சக்தியை இந்த சக்கரத்துக்குக் கொண்டு வரும் சமயம், அவனுடைய உலகாய ஆசைகள், சிந்தனைகள் முழுதும் தொலைந்து அழிந்து போகிறது. அவனுடைய மனம், உலகாய பந்தங்கள், உலக மாயையால் ஏற்பட்ட பந்தங்கள், கர்ம வினையால் ஏற்பட்ட பந்தங்கள் போன்றவற்றில் இருந்து விடு பட்டு, அம்பிகையின் திருவடியில் லயிக்கிறது. அதே போல இந்த சமயத்தில் பலவிதமான சஞ்சலங்கள் மனதில் ஏற்படும். சாதகன் ஏகாக்கிர மனத்துடன், மன ஒருமைப் பாட்டுடன் சாதனையைத் தொடர்ந்து, ஆன்மிகவாழ்வில் முன்னேற வேண்டும்.
ஸ்கந்த மாதா துர்க்கையின் தோற்றம்
இந்த தேவி சிம்ம வாகனத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு கரங்கள் கொண்டவள். மேலிரு கரங்களில் தாமரைப் பூவையும், கீழ் இரு கரங்களில் அபயம் காட்டும் முத்திரையையும், அனைத்து வரங்களையும் உனக்கு நான் கொடுக்கிறேன் என்று சொல்லும் வரத முத்திரையையும் தாங்கி இருக்கிறாள் இந்த தேவி. மடியில் குழந்தை முருகப் பெருமானை தாங்குபவளாக காட்சி தருகிறாள்.மேல்நோக்கிய அபய முத்திரை, மேலான உலகங்களில், உயர்ந்த பெருவாழ்வும், முக்தி வீட்டு இன்பமும் இந்த அம்பிகை கொடுக்கிறாள் என்று காட்டுகிறது. அதேபோல கீழே நோக்கி இருக்கும் அம்பிகையின் கைகள், இந்த மானிட உலகில் அனைத்து விதமான நன்மையும் இந்த அம்பிகை கொடுக்கிறாள் என்று காட்டுகிறது.
தாமரைச் செல்வத்தைக் குறிக்கிறது. இந்த அம்பிகை தாமரையைக் கையில் தாங்கி இருப்பதால், சாதகனுக்கு பதினாறு செல்வங்களும் அருளும் தேவி இவள் என்பது தெரிகிறது.மேலும் இந்த அம்பிகை தாமரைப் பூவில் இருப்பதாக சில நூல்கள் சொல்கிறது. இது சூட்சுமமான மனிதனின் இதயத் தாமரையை குறிக்கிறது. ஒரு பக்தன், பக்தியில் முன்னேறிச் செல்ல செல்ல அவனது மனம் தூய்மையாகிறது. அதில் இருக்கும் மன மாசுகள் நீங்குகிறது. அப்போது அவனால், இதயத்தில் இருக்கும் அம்பிகையை உணர முடிகிறது. இப்படி ஒவ்வொரு ஜீவனின் இதயக் கமலத்தில் இந்த தேவி இருக்கிறாள் என்பதைக் குறிக்க தாமரை ஆசனத்தில் இவள் இருக்கிறாள். ஆகவே இவளுக்கு பத்மாசனா என்ற திருநாமமும் இருக்கிறது. லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ‘‘பத்மாசனா” என்ற நாமமும் இங்கே ஒப்பு நோக்கத் தகும்.
மேலும் இந்த தேவி சிம்ம வாகனத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்ம வாகனம் தர்மத்தை குறிக்கிறது. எந்த மனதில் தர்ம சிந்தனை இருக்கிறதோ அந்த மனதில், தேவி வசிக்கிறாள் என்று இது சூசகமாக சொல்கிறது. மேலும் சிம்மம் கம்பீரமானது, பயம் கொள்ளாதது. அந்த சிம்மத்தைப் போல இந்த தேவியின் உபாசகனும் பூமியில் யாருக்கும் அஞ்சாமல் இருக்கலாம் என்றும் அம்பிகையின் வாகனம் நமக்கு காட்டிக் கொடுக்கிறது.
இந்த தேவியின் கைகளில் ஆறுமுகத்து எம்பெருமான் வீற்றிருக்கிறார். இவரது ஆறு முகம், மனிதனின் ஐந்து புலன்களையும், புலன்வழி செல்லும் மனதையும் குறிக்கிறது. திசைமாறி எங்கெங்கோ புலன் இன்பத்தில் செல்லும் மனதை ஒருமுகப்படுத்தி அம்பிகையின் பாதத்தில் வைக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இது குறிக்கிறது. அதுமட்டுமில்லை, ஆறு குழந்தைகளாகப் பிரிந்து இருந்த முருகப் பெருமானை ஒன்று சேர்த்தது போல, நமது மனங்களையும் புலன்களையும் இறைவனை நோக்கி ஒருமுகப் படுத்த இந்த தேவி வழிவகை செய்கிறாள் என்பதையும் இது காட்டுகிறது.
ஸ்கந்த மாதா துர்க்கையை உபாசிக்கும் சாதகன்
இந்த தேவியை உபாசிக்கும்போது, குழந்தை வடிவில் இருக்கும் முருகப்பெருமானையும் சேர்த்தே வணங்குகிறோம். இப்படி ஒரு விசேஷம் இந்த தேவியின் உபாசனையில் மட்டுமே இருக்கிறது. இந்த தேவி சூரியனுக்கு அதிதேவதையாக இருப்பதால், இந்த தேவியை உபாசிப்பவனுக்கு ஒரு, தெய்வீகமான தேஜஸ் ஏற்படுகிறது. அவனைச்சுற்றி ஒரு தெய்வீகஒளி மண்டலம் சதா இருந்துகொண்டு, அவனை எப்போதும் பாதுகாக்கும்.
ஸ்கந்த மாதா துர்க்கையை எப்படி வழிபடுவது
நவராத்திரியின் ஐந்தாவது நாள், இந்த துர்க்கைக்கு உகந்தது. அன்று இந்த துர்க்கையை ஆதார சக்கரமான விசுக்தி சக்கரத்தில் வைத்து பூஜிக்க அபரிமிதமான பலன்களைத் தரும். நாமும் இந்த துர்க்கையை வணங்கி வாழ்வில் பெறுதற்கு அரிய பேறுகளைப் பெறுவோம்.
தொகுப்பு: ஜி.மகேஷ்