கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யபப்ட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில், தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 13 மாணவிகள் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது குறித்து போலி என்சிசி முகாம் நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்தி நகர் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் (35), போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு பதிவானதும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மாணவி பலாத்கார சம்பவத்தை மறைக்க முயற்சி செய்த பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியைகள், பயிற்சியாளர்கள் உள்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனிடையே சிவராமன் தன்னை வக்கீல் என கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் பேரில் சிவராமன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ள சிவராமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்களை போலியாக தயாரித்தல், பொய்யாக ஆவணத்தை தயாரித்து ஏமாற்றுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.