*முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
சிவகாசி : சிவகாசியில் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கடந்த 1999ம் ஆண்டு விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. இதில் சிவகாசியில் தமிழகத்தின் 101வது உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது.
இந்த உழவர் சந்தையில் 54 கடைகள் உள்ளன. கழிப்பறை வசதி, இருசக்கர வாகனம் நிறுத்தும் வசதி, தகவல் மையம், சிற்றுண்டி விடுதி, இருப்பு வைக்கும் அறை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தொடக்கத்தில் அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை அரசு பேருந்து மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். அதிமுக ஆட்சிக்கு வரும் போது இந்த உழவர் சந்தை மூடப்படுகின்றது.
உழவர் சந்தையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளாக உழவர்சந்தை செயல்படவில்லை. தற்போது இந்த உழவர் சந்தையில் 2 கடை மட்டும் பெயரளவில் இயங்கி வருகின்றது.
உழவர் சந்தைக்கு பொதுமக்கள் யாரும் வராததால் பொருட்களை விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் படுத்து தூங்கி விடுகின்றனர். உழவர் சந்தை அதிகாரிகளிடம் மட்டும் அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு கிளம்பி விடுகின்றனர். இந்த 2 கடைகளிலும் விற்பனை இல்லையென்றாலும் தினமும் எதற்கு திறந்து வைக்கின்றனர் என்று அந்த பகுதி மக்கள் புரியாமல் புலம்பி செல்கின்றனர்.
உழவர் சந்தையை மீண்டும் முழுமையாக செயல்பட வைக்கும் வகையில் கடந்த ஆண்டு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் உழவர் சந்தையில் அசோகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சி இல்லாததால் உழவர்சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.ஆனால் உழவர் சந்தை அருகே உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் இயங்குவதால் பொதுமக்கள் அங்கு சென்றுதான் காய்கறி வாங்குகின்றனர்.
அண்ணா காய்கறி மார்க்கெட்டில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை பகுதி காலை முதல் மாலை வரை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றது. அண்ணா காய்கறி மார்க்கெட்டில் இயங்கும் பாதி கடைகளை உழவர் சந்தைக்கு கொண்டு சென்றாலே கூட்ட நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும்.
விவசாயிகள், வியாபாரிகள், வேளாண்மை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், உழவர் சந்தை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் உழவர்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இடைத்தரகர்கள் இன்றி வியாபாரம் செய்யலாம்
காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யாமல் நேரடியாக நுகர்வோரிடம் நல்ல லாபத்தில் விற்பனை செய்யும் வகையில் தமிழக அரசு இந்த உழவர் சந்தையை அமைத்துள்ளது.
இந்த உழவர் சந்தை இயங்கினால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பயன் அடைவர். சிவகாசி உழவர்சந்தையை மீண்டும் செயல்படுத்த விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அங்கன்வாடிகளுக்கு காய்கறி வாங்கப்படுமா?
விவசாயி ஒருவர் கூறும்போது, சிவகாசியில் 60க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், 2 அம்மா உணவகங்கள், ஏராளமான அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்கள், அம்மா உணவகங்களில் காய்கறி மற்றும் கீரைகள் உழவர் சந்தையில் வாங்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் சிவகாசி உழவர் சந்தை செயல்படும் வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வருவாய் கிடைக்கும். சிவகாசி உழவர் சந்தை மீண்டும் புத்துணர்வு பெறும் நிலை ஏற்படும் என்றார்.