விருதுநகர்: சிவகாசியில் 98 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து தொழிலக பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது.
இதனால், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் 98 பட்டாசு ஆலைகளின் போர்மேன், சூப்பர்வைசர்கள் பயிற்சியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயற்சி முடிக்க தவறினால் செப்டம்பர் மாதம் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைக்கபடும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பட்டாசு ஆலை மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்க அழைப்பு விடுத்தும் பங்கேற்காததால் 98 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து தொழிலக பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. பயிற்சிக்கு ஊழியர்களை அனுப்பி வைக்க பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அழைப்பு கடிதம் அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளாததால் பட்டாசு ஆலைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.