மொடக்குறிச்சி: சிவகிரி அருகே கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வந்த நிலையில் சடையப்பசாமி கோயில் மகா மண்டபம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் சிவகரி அருகே உள்ள கந்தசாமி பாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட சடையப்பசாமி கோயில் உள்ளது. தற்போது திருப்பணி வேலைகள் இங்கு நடைபெற்று வருகிறது. கோயில் உட்பிரகாரத்தில் மகா மண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவை கற்களால் கட்டப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நேற்று மகா மண்டபத்தின் தூண்கள் திடீரென்று சரிந்தது. இதனால் மண்டபமும் சரிந்து விழுந்தது. இதில், மண்டபம் கட்ட பயன்படுத்திய பிரமாண்டமான கற்கள் உடைந்து சிதறின. நல்வாய்ப்பாக அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வழக்கமாக காலையில் வேலைகளை துவங்குவார்கள். அந்த சமயத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். சுமார் ஒரு மணி நேரம் முன்னதாக மண்டபம் சரிந்து விழுந்ததால் வேலையாட்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
கோயில் மகா மண்டபம் சரிந்து விழுந்த செய்தி கேள்விப்பட்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கோயில் முன்பாக குவிந்தனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி மண்டல பொறியாளர் காணீஸ்வரி, ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மண்டப பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கல்தூண் சரிந்து மகா மண்டபம் சரிந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர். கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் கோயில் மகா மண்டபம் சரிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.