Saturday, April 20, 2024
Home » சிவகாம சுந்தரி! சீரடிக்கே சாரும்

சிவகாம சுந்தரி! சீரடிக்கே சாரும்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

பாரும்‌, புனலும்‌, கனலும்‌ வெங்‌ காலும்‌ படர்விசும்பும்‌;
ஊரும்‌ முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்‌
சேரும்‌ தலைவி! சிவகாம சுந்தரி! சீரடிக்கே
சாரும்‌ தவம்‌ உடையார்‌ படையாத தனம்‌ இல்லையே.
அறுபத்தி எட்டாவது அந்தாதி
“ஆதியாக”

இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாமா வேண்டாமா? நாம் கேட்டால் அந்த வரம் கிடைக்குமா? கிடைக்காதா? நாம் யார்? நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? இந்த உலகம் எத்தகையது? இந்த உடலின் அமைப்பு எந்த அடிப்படையில் அமைந்து இருக்கிறது? நாம் எதற்காக வாழ்கிறோம்? வாழ்க்கையின் இலக்கு எது? என்று அனைத்து தத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும், இந்த ஒரே பாடலில் பதில் சொல்கிறார்.

இப்பாடலில் முப்பத்தி ஆறு பொருள்களைப் பற்றி அபிராமிபட்டர் குறிப்பிடுகிறார். அதில் பதினெட்டுக்கும் மேற்பட்ட சொற்கள், சார்புச் சொற்களாக உள்ளன. இவை ஒன்றில்லாமல் ஒன்றை, அதாவது ஒரு சொல்லை மட்டும் தனித்து புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் அபிராமிபட்டர் பதினெட்டு சொற்களை சொல்லியதனால் பாடலில் இதரசொற்கள் இல்லை என்றாலும், சொன்னதாகவே ஆகிறது. அபிராமிபட்டர், இப்பாடலை பொறுத்தவரை மிக சிறந்த தத்துவ ஆசிரியராக போதிக்கின்றார். அந்த வகையில் தத்துவ கலைச்சொற்களை புரிந்துகொண்டே அதன் வழி இப்பாடலை புரிந்து கொள்ள வேண்டும். அதில் முதலில், `பதார்த்தம்’ என்ற சொல்லை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு பொருளை நாம் சுட்டிக் காட்ட விரும்பினாலும், அப்பொருளின் பெயர், பொருளின் தன்மை, அதன் செயல்பாடு, அதே தன்மையை கொண்டே வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா, அந்த பொருளுக்கு மட்டும் உரிய பிறபொருளில் உள்ள மற்றும் இல்லாத தனித்தன்மை, அந்த பொருளுக்கு உரிய மூலம், அந்த பொருளில் இல்லாத பண்பு இந்த ஏழுவகையாலும் சொல் பொருளானது உறுதி செய்யப்பட வேண்டும்.

ஒரு உதாரணத்தினால், இதை உணர முயல்வோம். பொதுவாக திருமணப் பத்திரிகையில் மணமகன், மணமகள் பெயரை போடும்போது அவர்களின் ஊர், தாயின்பெயர், தந்தையின் பெயர், எத்தனையாவது மகன், எத்தனையாவது மகள் என்பதன் அடையாளம், தந்தையின் தாய் தந்தை பெயர், பெண்ணின் பெயர் என்று ஏழு அடையாளங்களை சூட்டுவர். இவை யாவும் அந்த மணப்பெண்ணை தனித்து அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்கும். அதுபோலவே, அபிராமிபட்டர் குறிப்பிட்ட சொற்களை தத்துவ நோக்கில் பார்ப்போம். இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”
பாரும்
புனலும்
கனலும்
வெங் காலும்
படர்விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி
ஒன்றுபடச் சேரும்
தலைவி! சிவகாம சுந்தரி! சீரடிக்கே சாரும்
தவம் உடையார்
படையாத தனம் இல்லையே

இவ்வரிசையின்படி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

‘‘பாரும்”

என்பதனால், இந்த உலகத்தில் மனிதனால் தீண்டி, சுவைத்துப் பார்த்து, நுகர்ந்து, கேட்டு என்பதை ஐம் புலனாலும் உணர்ந்து கொள்ளக் கூடிய காற்று, தண்ணீர், நெருப்பு, பூமி, ஆகாயம் இவ்வைந்தும் இணைந்ததால் தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ‘‘பாரும்” என்கிறார்.

‘‘புனலும்”

என்பதனால், இந்த உலகத்தில் மனிதனால் தீண்டி, சுவைத்து, பார்த்து, கேட்கக்கூடியதை நான்கு புலன்களால் மட்டும் உணர்ந்து கொள்ளக்கூடிய காற்று, தண்ணீர், நெருப்பு, ஆகாயம், இந்த நான்கும் இணைந்ததால் தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ‘‘புனலும்” என்கிறார்.

‘‘கனலும்”

என்ற சொல்லால், இந்த உலகத்தில் மனிதனால் தீண்டி, பார்த்து, கேட்டு, என்பதை மூன்று புலன்களாலும் உணர்ந்து கொள்ளக் கூடிய காற்று, நெருப்பு, ஆகாயம் இம்மூன்றின் இணைவால் தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ‘‘கனலும்” என்கிறார்.

‘‘வெங்காலும்”

என்ற சொல்லால், இந்த உலகத்தில் மனிதனால் தீண்டி கேட்கப்படுவதை இரண்டு புலன்களால் மட்டும் உணர்ந்து கொள்ளக்கூடிய காற்று, ஆகாயம் எனும் இவ்விரண்டின் இணைவால் தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ‘‘வெங்காலும்” என்கிறார்.

‘‘படர் விசும்பும்”

இந்த உலகத்தில் மனிதனால் கேட்டல் என்ற ஒரே புலனால் உணர்ந்து கொள்ளக் கூடிய ஆகாயம் என்கின்ற வெற்றிடத்தை ‘‘படர்விசும்பும்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

இதையே யந்திர சாஸ்திரங்கள் ஒருபுலனால் அறிவதை ஒரே கோடுள்ள வட்டக்குறியீட்டால் ஆகாயமான படர் விசும்பையும் இருபுலனால் அறிவதை இருகோடுள்ள சந்திரப்பிறை போன்ற குறியீட்டால் காற்றான வெங்காலையும் மூன்று புலன்களால் மூன்று கோடுள்ள முக்கோணவடிவமான குறியீட்டால் நெருப்பான கனலையும் நான்கு புலன்களால் நான்கு கோடுள்ள சதுரவடிவ குறியீட்டால் நீரான புலனையும் ஐந்து புலன்களால் ஐந்து கோடுள்ள ஐங்கோண வடிவ குறியீட்டால் நிலத்தை பாரும் என்ற சொல்லினால் குறிப்பிடுகிறார். இதையே சிதம்பர சக்கரம் என்ற யந்திரத்தில் இன்றும் காணலாம். இது திருக்கடையூரிலும் உள்ளது. இந்த யந்திர வடிவத்தில் எழுந்தருளிருக்கும் உமையம்மை, சிவன் இருவரையும் இணைத்தே ‘தில்லை ஊரர்தம் பாகத்து உமை’ (காப்பு) இதையே “படர்விசும்பும்” என்றார்.

“ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி”

“ஊறொலி” என்ற சொல்லால் காதுகளால் கேட்கக்கூடியது பத்துவகை ஒலியை, குறிப்பிடுகிறார்.

* காக்கை குருவி போன்ற பறவைகளின் ஒலி
* மனிதர் பேசுகின்ற மொழியின் ஒலி
* பஞ்சபூதங்களால் ஏற்படும் உலோகங் களின் இணைவால் ஏற்படும் ஒலி
* அருவியின் ஒலி
* நெருப்பு மிகுந்து எரிவதனால் ஏற்படும் ஒலி
* புயல் வீசுவதால் ஏற்படும் ஒலி
* எதிரொலி
* இன்னிசையினால் ஏற்படும் ஒலி
* ஒலியலா ஒலி [கனவில்] நம் காதுகளில் கேட்கப்படும் ஒலி
* அசரீரி என்னும் இறைவாக்கு என்று பலவாறு பகுத்து இருப்பதையும் “ஊறொலி’’ என்று குறிப்பிடுகிறார்.

“ஊரும்” என்ற சொல்லால் மெய்யினால் உணரக்கூடிய குளிர்ச்சி, சூடு, வழவழப்பு, சொரசொரப்பு, தினவு [அரிப்பு], தீண்டல் என்ற ஆறுவகை பண்பையே “ஊரும்” என்கிறார்.

‘‘முருகு” என்ற சொல்லால் மூக்கினால் மட்டும் உணரப்படும் நறுமண வேறுபாடு, நாற்ற வேறுபாடு, நறுமணம், நாற்றம் என்ற நான்கையுமே “முருகு” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

‘‘சுவை” நாவினால் மட்டும் உணரப்படும். சுவை என்ற சொல்லால் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்ற ஆறையும் “சுவை” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

‘‘ஒளி” கண்ணினால் மட்டும் உணரப்படும் வண்ணம், வடிவம், இருள், வெளிச்சம் இவற்றின் வேறுபாட்டை “ஒளி” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

புலன்களால் அறிந்து மனதிற்குள் பதிவு செய்வதற்கு உதவியான நினைவுகளாய் புறப்பொருள்களோடு தொடர்பு கொண்டு அவற்றின் இயல்பு வழி நம்மனதிற்குள் பதிக்கின்ற புலன்களின் செயல்களை மட்டுமே ‘‘ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி” என்கிறார்.

‘‘ஒன்றுபடச் சேரும்”

என்ற இச்சொல்லினால், ஐந்து புலன்களையும் ஒருமித்து சேர்த்தலால் மனதையே ஒன்றுபடச் சேரும் என்கிறார். சேர்த்தல் என்ற சொல்லால் ஐந்து புலன்களின் வழி கிடைத்த பதிவுகளாகிய நினைவை. நினைவுகளின் தொகுப்பை, நினைவலைகளின் பகுப்பின் ஒருங்கிணைப்பையே ‘‘ஒன்று படச் சேரும்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மேலும், இச்சொல்லானது மனதையும் குறிக்கும். மனமானது அணுவை விட மிக நுட்பமான பரமாணுவடிவத்தில் உள்ளது. இது அழிவற்றதாக உள்ளது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனதாக உயிர் தோறும் இருக்கிறது. இது உடலுக்கு உள்ளிருக்கிறது.

புலன்களின் உதவியின்றி இது தனித்து இயங்காது. இந்திரியகமாகிய புலன்களை சார்ந்து இயங்குவதால் இதுவும் ஒரு இந்திரியமாகவே [புலனாகவே] கருதப்படுகிறது. இது ஆன்மாவிற்கு சுகம், துக்கம், சமம், ஞானம், திவ்யம் போன்ற அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் சாதனமாக இருக்கிறது. இது உறங்கும் நேரத்தில் அறிவுடன் தொடர்பு அற்றும் விழிப்பு காலத்தில் அறிவுடன் தொடர்பு கொண்டும்.

இருவகையில் செயல்படும், கனவிலும் செயல்படும் திறன் உடையது. மனதின் துணையின்றி புலன்கள் இயங்காது. இது புலன்களோடு புறத்தும் ஆன்மாவோடு அகத்தும் என இருமுகத் தொடர்பு கொண்டது. தனித்து இயங்காது. புலனையோ, ஆன்மாவையே சார்ந்து இயங்கும் மனமானது எட்டு விதமானதும் வெவ்வேறானதுமான தன்மைகளை உடையது மெய், வாய், கண், மூக்கு, செவி, புத்தி, சித்தம், அகங்காரம் என்ற எட்டு விதமான பண்புடைய காரணங்கள் ஆகும்.

புலன்களை, நினைவுகளை, பதிவுகளை, புற உலகு தொடர்புகளை, ஆன்மா ஒன்று சேர்த்து அதன் வழி உடலை இயக்கி அனுபவத்தை தோற்றுவிப்பதனால் ‘‘ஒன்றுபடச் சேரும்” என்கிறார்.

இதையே ஆகமம் ‘அஷ்ட பந்தனம்’ என்கிறது. ஆனால், தத்துவம் ஆன்மாவை தனித்து காட்ட மனதையே அடையாளமாக சூட்டுகிறது. ஒவ்வொரு ஆன்மாவும் அதன் அடையாளமாக மனதையே வைத்துக் கொண்டிருக்கிறது. மனது மாறுபடும் தன்மை உடையது. ஆனால், ஆன்மா மாறாத தன்மை உடையது. மாறுபடும் தன்மையைக் கொண்ட மனதை மாறாத தன்மை கொண்ட தன்னைப் பற்றிய உண்மை இயல்பை அறிய முடிகிறது. மனதானது ஆன்மாவைவிட்டுப் பிரியாது. ஆன்மாவுடன் சேராது.

ஆன்மாவின் முன்னிலையிலும், படர்க்கை நிலையிலும் இருந்து உதவும். படர்க்கையில் இருந்தால், ஆன்மாவிற்கு உலக இன்பம், உடல் மகிழ்ச்சி தரும். முன்னிலையில் இருந்தால் ஆன்மா உணர்ச்சி, ஞானம் தரும். இதையே ஆலய ஆகமங்களில் அந்தந்த இறைவனின் வாகனமாக காட்டுகிறது. உதாரணமாய் சிவன் முன் நந்தியும், சக்தியின் முன் சிங்கமும், முருகன் முன் மயிலும் போன்று என உணர்க.

இதையே மனதானது ஆன்மாவைச் சாரும். புற உலகப் பொருளோடு “சேரும்” என்பதையே ‘‘சேரும், சாரும்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார் பட்டர். சாக்ததத்துவத்தைப் பொருத்தவரை, ஆன்மா உலக இன்பத்தை அனுபவிப்பதற்கும் இறையருளை நாடி மோட்சத்தைப் பெறுவதற்கும் கர்மவினையால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக் கொள்வதற்கும் அனைத்திற்குமான ஒரே சாதனமாய் மனதே சொல்லப்படுகிறது.

அந்த மனதை எப்படி வாழும்போது பயன்படுத்துகிறோமோ, அதுதான் ஆன்மாவின் சுக- துக்க ஞான மோட்சத்தை நிர்ணயிக்கிறது.மனம் தாழ்ந்தால் ஆன்மாவை தாழச் செய்யும் இதையே ‘இழிவுற்று நின்றநெஞ்சே!’ (71) என்பதனால் உணரலாம். மனதை உயர்த்துவதற்கு பூசனை, தியானம், ஜபம், முதலியவற்றை ஆகமம் பரிந்துரை செய்கிறது. இதையே பட்டர் ‘நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்’ (59) என்பதனால் அறியலாம்.

உலகியலை உடல் இன்பத்தை அதிகமாக பயன்படுத்துவது வாழும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், இறப்பிற்குப் பின் ஆன்மாவிற்கு மிகப் பெரிய துன்பத்தையே ஏற்படுத்தும். இதையே ‘பாழ்நரகக் குழிக்கே’ (79), ‘கருமநெஞ்சால்’ (3) என்ற பாடல் வரிகளால் சூட்டுகிறார். இந்த மனதை அடக்கி ஆள்வது இறையருள் அன்றி இயலாது என்கிறார்.மனதானது இயல்பாக தாழ்வு நெறியைத்தான் பெற்றிருக்கும்.

புறம் நோக்கி துன்புறும் அகம்நோக்கி ஆன்மாவைத் தேடாது. இதையே பட்டர் ‘ஆசைக்கடலில் அகப்பட்டு’ (32) என்கிறார். அதுவே பக்தியை பற்றும் போது உயரும் தன்மையுடையது. இதையே “ஒன்றுபடச் சேரும்” என்கிறார். இனி நாம் காண இருக்கும் சொற்கள் உமையம்மையின் பெயர்கள். இப்பெயர்களை கொண்ட உமையம்மையானவள் அபிராமிபட்டர் குறிப்பிடும், “பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்” என்ற மனித உடலுக்கு வெளியே உள்ள பஞ்சபூதங்களுக்கு அதிதேவதைகள் என்று ஆகமம் குறிப்பிடுகிறது.

அதே சமயம் “ஊரும் முருகு சுவை ஒளி ஊறொலி” என்ற வார்த்தையால் இந்த அதி தேவதைகளுக்கு உரிய ஆண் தேவதைகளை குறிப்பிடுகிறது. அபிராமிபட்டர் “தலைவி, சிவ, காம, சுந்தரி, சீரடி” என்ற ஐந்து பெண் தேவதைகளையே பாட்டில் குறிப்பிடுகிறார். இந்த தேவதையின் ஆண் தேவதைகளை பட்டர் குறிப்பிடவில்லை என்றாலும் அவை இணைந்தே சாக்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் நாம் அவற்றைப் பற்றியும் அறிய வேண்டும். உலகியலில் உள்ள உதாரணத்தைக் காட்டி ஆன்ம உண்மைகளை விளக்கிக் கொள்ள வழிவகை செய்கிறார் பட்டர். அந்த வகையில் ஒரு ஆணும் பெண்ணும் முறையாக சேர்ந்து வாழும் உரிமைக்கு திருமணம் என்னும் சடங்கு வழிவகுக்கிறது.

அதுபோல உடலில் உள்ள “ஊரும், முருகு, சுவை, ஒளி, ஊறொலி” என்ற உணர்வுக்கு ஆண் அதிதேவதைகளும் “பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்’’ என்ற உலகியல் பொருள்களை பெண் தேவதைகளாகவும் இரண்டும் இணையும் போது உலகியல் சார்ந்த போகத்தின் வழி வாரிசு தோன்றுவது போல உபாசகனின் இந்த தியானத்தின் வழி இறையருள் காட்சியின் வழி ஆன்மாவிற்கு தேவையான ஞானம் தோன்றும். அதன் வழி அனுபவம் தோன்றும் இப்பாடலில் வாரிசுகளை இணைத்து சிந்திக்கும் போது அறியலாம்.

ஆகம சாஸ்திரங்களின் நோக்கில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதா சிவம், சரஸ்வதி, லட்சுமி, கௌரி, காமேஸ்வரி, மனோன்மணி இவர்கள் சரீரத்தில் புருஷரூபமாகவும் [ஆண் வடிவாகவும்] உலகில் பெண் வடிவமாகவும் பிரிந்து உள்ளனர்.முயற்சியினால் அறத்தின் வழி திருமணம் செய்வது போல சூழலின் வழி நமக்கு ஞானம்வரும். ஒவ்வொரு மனிதனும் தனக்கான இன்பத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் துக்கத்தை விலக்கிக்கொள்வதற்கும் உரிய சாதனங்களை சேர்த்து தனக்கு தேவையான சூழலைத் தானே உருவாக்க முயல்கிறான் இதையே சக்தி தத்துவம் வாழ்க்கை என்கிறது.

அபிராமிபட்டர் இக்கருத்தையே ‘வாழ்வே’ (பதிகம்) என்று குறிப்பிடுகிறார். இந்த வாழ்க்கையை உருவாக்கித் தருவதற்கு உடலைத் தந்தவர் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன், உலகின் வழி நின்று மெய், வாய், கண், மூக்கு, செவிக்கு இன்பத்தைத் தரும் பொருளை தருபவர்.சரஸ்வதி, லட்சுமி, கெளரி, காமேஷ்வரி, மனோன்மணி இதையே பட்டர் ‘பொருளே! பொருள்முடிக்கும் போகமே’ (36) என்பதனால் அறியலாம். முடிப்பது என்பது உலகியலில் மணம் முடிப்பதையும் சாஸ்திர நெறியில் புலன்கள் பொருள்களோடு பொருந்தி பெறும் அறிவைக் குறிக்கும். இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டே “ஒன்றுபடச் சேரும்” என்கிறார்.

“தலைவி! சிவகாம சுந்தரி!
சீரடிக்கே சாரும்”

தலைவியை நாயகி என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. “சிவ” – மனோன்மணி, “காம” – காமேஸ்வரி, “சுந்தரி” – லட்சுமி, “சீரடி” – கௌரியையும் குறிப்பிடுகிறார். சிற்ப சாஸ்திரத்தில் சாக்த தந்திரத்தின் படி பிரம்மாவின் நாவில் சரஸ்வதி, விஷ்ணுவின் மார்பில் லட்சுமியும், ருத்ரனின் தலையில் கௌரியும் [கங்கை என்ற பேரில் கௌரி – என்ற சொல்லானது வெண்மை நிறத்தையும், சொல்லையும், ஆன்ம அறிவை பெறும் வழிபாட்டை செய்வதையும் குறிக்கும்] ஈஸ்வரனின் உடலில் பாதியும், சதாசிவத்தை விட்டு நீங்காது நிற்பது மனோன்மணி.

லிங்கத்திலிருக்கும் ஆவுடையாரைக் குறிக்கும் சொல் மனோன்மணி. இந்த தேவதைகள் சேர்ந்தும் பிரிந்தும் இருக்கும். இதையே ஆதிசங்கரர் ‘சிவசக்தியாயுக்தோ’ என்பதனால் அறியலாம். இதையெல்லாம் மனதில் கொண்டு “தலைவி! சிவகாம சுந்தரி! சீரடிக்கே சாரும்” என்கிறார்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

You may also like

Leave a Comment

eighteen − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi