சென்னை: மருத்துவ கல்லூரியில் மகளை சேர்க்க அழைத்து சென்று திரும்பிய போது லாரி மீது கார் மோதி அக்கா-தம்பி பலியாகினர். மற்றொரு விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு குளப்புலம் கல்வெட்டான்குழியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திர சிங்(49). அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர். இவரது மனைவி ஷெரின் (47). அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் அபி ஷெரின் (19). பிளஸ் 2 முடித்து, ஈரோடு பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ளார். கல்லூரியில் சேர்ப்பதற்காக மனைவி மற்றும் மகளோடு ஈரோட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டத்திற்கு காரில் ஜெயச்சந்திர சிங் சென்றுள்ளனர். இவர்களோடு தனியார் பள்ளி ஆசிரியையான அவரது அக்கா ஜெயந்தியும் (55) பயணித்துள்ளார். காரை ஜெயச்சந்திர சிங் ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில், ஜெயச்சந்திரசிங் மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஷெரின், அபி ஆகிய இருவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ்(54), ரமேஷ்(50). சகோதர்களான இருவரும் பிளம்பர் வேலைக்காக நேற்று முன்தினம் திருப்பத்தூருக்கு சென்றுவிட்டு இரவு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அதேசமயம், திருப்பத்தூர் மாவட்டம், ராஜமங்கலத்தை சேர்ந்த குமார், கிருஷ்ணகிரிக்கு ஜல்லிக்கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி டீசல் காலியாகி கந்திலி அடுத்த கல்லேரியில் சாலையோரம் நின்றது. அந்த டிப்பர் லாரியின் மீது ராஜேஷ், ரமேஷ் சென்ற மொபட் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.