பூந்தமல்லி: மதுரவாயல் பகுதியில் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை வன்கொடுமை சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயலில் உள்ள கடை ஒன்றில் 23 வயது நிரம்பிய பெண்ணும், அவரது தங்கையும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். மதுரவாயல் பல்லவன் நகர் பிரதான சாலையில் நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் அக்கா, தங்கை இருவரையும் வழிமறித்து ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அச்சமடைந்த 2 பெண்களும் வேகமாக நடந்து சென்றுள்ளனர்.
அவர்களை தொடர்ந்து சென்று மீண்டும் வழிமறித்த அந்த நபர், பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளார். இதனால் 2 பெண்களும் கூச்சலிட்டு உதவி கேட்க, உடனே அருகே இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மதுரவாயல் ஐயப்பா நகரைச் சேர்ந்த உத்தமன் (43) என்பது தெரியவந்தது. தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
* வாலிபர் மீது போக்சோ
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (20). இவர் 11ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது மாணவியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.