திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே கடந்த ஆண்டு சகோதரி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டதால், பழிக்குப்பழி வாங்க வாலிபரை வெட்டிக்கொன்ற சகோதரர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா (38). இவரது கணவர் வெங்கடேசன். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலவாக்கத்தில் குடியிருந்தனர்.
வெங்கடேசன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். சுகன்யாவின் சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா தனது 2 குழந்தைகளுடன் புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் இவரது கடையை ஒட்டி மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த பாலாஜி (26) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம்தேதி திங்கட்கிழமை சுகன்யா எரித்து கொல்லப்பட்டார்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் விசாரணையில் சுகன்யாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பாலாஜியின் தந்தை குமார் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், பாலாஜி, நேற்று அதே கடையில் அமர்ந்து மோட்டார்களுக்கு செப்புக்கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது 12.45 மணியளவில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாலாஜியின் கடைக்குள் புகுந்து அவரை இழுத்து வெளியே தள்ளி சரமாரியாக வெட்டித் தள்ளியது. அலறி அடித்து வெளியே ஓடிவந்த பாலாஜி சாலையோரம் தடுமாறி கீழே விழுந்தார். அவரது தலை, கை, கால், முகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக் கொலை செய்த கும்பல் காரில் ஏறி தப்பி ஓடியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான போலீசார், அங்கு சென்று பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து அப்பகுதியில் சோதனை நடத்தினர். மேலும், மைக் மூலமாக காரில் தப்பிச்ெசன்ற நபர்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டு மதுராந்தகம் அருகே தொழுப்பேடு பகுதியில் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சுகன்யாவின் சகோதரர்கள் இருவரும், அவர்களது நண்பர்களும் என முதற்கட்ட விசாரணையில், தங்கையை கொன்ற நபர்களை பழிக்குப்பழி வாங்க இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார், இக்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.