சேலம்: எஸ்ஐ சட்டையை பிடித்து இழுத்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலைய எஸ்ஐ அழகுதுரை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை, தாரமங்கலம்-நங்கவள்ளி சாலையில் தனியார் பேக்கரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு, இடைப்பாடி சமுத்திரம் பகுதியை சேர்ந்த தனபால் (47) என்பவர் வந்தார்.
அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக இருந்த கனகராஜின் அண்ணன் ஆவார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை அழித்த வழக்கில் இவர் கைதாகி ஜாமீனில் வெளி வந்தவர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ அழகுதுரையிடம் சென்ற தனபால், ஆபாசமாக பேசிக்கொண்டு தன் மீது மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு போட நீயும் தான் உடந்தை எனக்கூறி தகராறில் ஈடுபட்டார்.
அப்போது எஸ்ஐ அழகுதுரையின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனிருந்த சிறப்பு எஸ்ஐக்கள் பழனிசாமி, மூர்த்தி, அரிசியப்பன் உள்ளிட்ட போலீசார், தனபாலை மடக்கி பிடித்தனர். அவரை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். பின்னர், எஸ்ஐ அழகுதுரை கொடுத்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் தனபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் தனபாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தனபாலிடம் கடந்த 2 மாதத்திற்கு முன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார், 2வது முறையாக விசாரணை நடத்தினர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இடைப்பாடிக்கு வந்த சிபிசிஐடி போலீசார், ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜை எரித்த இடத்தையும், அவரது செல்போன், சிம்கார்டை எரித்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றனர். இச்சூழலில் தற்போது கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.