பெரியபாளையம்: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளர்ச்சி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் 16 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, ரூ.50 கோடியே 79 லட்சம் செலவில் 7 திருக்கோயில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோயிலில், ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் பொது தரிசன வரிசை வளாகம், விளக்கு மண்டபம், அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம், வாகன நிறுத்துமிடம், விருந்தினர் மாளிகை, கழிப்பறை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, சிறுவாபுரி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, கடந்த 4 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கட்டு வருவதாகவும், பல்வேறு கோயில்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருவதாகவும், விரைவில், சிறுவாபுரி கோயிலுக்கு வந்து செல்ல வசதியாக 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை இயக்குனர் அனிதா, திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சிவஞானம், செயற்பொறியாளர் பார்த்திபன், செயல் அலுவலர்கள் மாதவன், பிரகாஷ், ராஜசேகரன், வட்டாட்சியர் சிவக்குமார், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சாந்தி, மாவட்ட அவைத் தலைவர் பகலவன், முன்னாள் மாவட்டக்குழு பெருந்தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியச் செயலாளர் செல்வசேகரன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், அறங்காவலர்குழு தலைவர் லட்சுமி நாராயணன், பொன்னேரி நகரச் செயலாளர் ரவிக்குமார், அன்புவாணன், எம்.எல்.ரவி, வெங்கடேசன், கண்ணதாசன், தீபன், ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.