பொதுவாக திருமங்கை ஆழ்வார் ஒரு திருத்தலம் சென்று கண்டு, சேவித்து, எம்பெருமான் மீது பாசுரங்களைப் பாடுவார். ஆனால் ஒரு சிறிய விவாதத்தின் காரணமாக ஒரு அழகான பாசுரம் எண் அலங்காரமாகப் பிறந்தது. அப்படிப் பிறந்த தலம் தான் சீர்காழி என்கின்ற காழிச் சீராம விண்ணகரம். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் கோவிந்தராஜப் பெருமாளைச் சேவித்து விட்டு சோழநாட்டின் தலைவாசலில் உள்ள சீர்காழி திவ்ய தேசத்திற்கு தம்முடைய சீடர்களோடு வருகிறார்.
அவரை வரவேற்க பலரும் காத்திருக்கிறார்கள்.
“பரகாலன் வந்தார், அரட்டமுக்கி வந்தார், அடையார் சீயம் வந்தார், கலியன் வந்தார், நாலு கவிப்பெருமாள் வந்தார்” என்று பல விருதுகளின் முழக்கம் விண்ணை முட்டுகிறது.
அங்கே சைவ சமயத்தில் இருந்த ஞானசம்பந்தப் பெருமானின் அடியார்கள், ‘‘இவ்விடத்தில் இப்படி விருது ஓதுவது தகாது’’ என்று சொல்ல, அது சிறிய விவாதமாக மாறி, ஞானசம்பந்தர் அங்கே வருகிறார்.
திருமங்கை ஆழ்வாரிடம் அவர், ‘‘ஒரு குறள் பாடுக’’ என்று கேட்க, அவர் சொன்ன வார்த்தையை அடிப்படையாகக்கொண்டு, எண் அலங்காரமாக ஒரு பதிகத்தைப் பாடுகின்றார்.
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும்
காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே
பின்னால் திருவெழுகூற்றிருக்கை என்று ஒரு பிரபந்தம் இயற்றுவதற்கு முன்னோட்டமாக இந்தப் பாடல் அமைந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அந்தத் தலத்தில் அவருக்கு முதன்முதலில் உலகளந்த பெருமாளின் நினைவு தான் வருகிறது.
ஒரு குறளாய் என்று வாமன அவதாரத்தைத் தொடங்கி, திரிவிக்கிரம அவதாரம் சொல்லி பாடலை முடிக்கின்றார்.
அந்தச் செய்யுளின் நலத்தையும், சந்த நலத்தையும், பொருட் சிறப்புகளையும் கண்ட ஞானசம்பந்தர், ‘‘உமக்கு ஓதப்பட்ட விருதுகள் அனைத்தும் பொருந்தும்’’ என்று சொல்லி, அவருக்கு ஒரு வேலும் பரிசாகத் தந்தார் என்று தல வரலாறு சொல்லுகிறது.
அது ஏன் முதலில் வாமன அவதாரம் ஆழ்வாரின் நினைவுக்கு வந்தது?
பொதுவாகவே ஆழ்வார்கள் எல்லாருமே வாமன அவதாரத்தில் ஈடுபடுவர். இந்த பூமியை வாமனன் மண் என்று நம்மாழ்வார் பாடுவார். மகாபலி சக்கரவர்த்தி, ஏதோ தன் மண்ணை தானம் தந்ததாக நினைத்துக்கொண்டான். இது வாமனன் மண் அல்லவா.
மண்ணை இருந்து துழாவி ‘வாமனன் மண் இது’ என்னும்,விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும், கண்ணை உள்நீர் மல்க நின்று ‘கடல்வண்ணன்’ என்னும் அன்னே! என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு. என் செய்கேன் பெய் வளையீரே?
யாரோ ஒருவருக்குத் (இந்திரன்) தருவதற்காக, எல்லா ஐஸ்வர்யங்களையும் உடைய பெருமாள், தன்னுடைய பெருமையைக் கருதாது, நெளிந்தும் குழைந்தும் யாசித்த அவதாரம் அல்லவா அது.
அதனால் தான் தன்னிடம் பொருள் இல்லாவிட்டாலும் யாசித்து தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
நாம் செய்தித்தாளில் ஒரு செய்தியைக் கண்டோம்.
மதுரையில் ஒரு பிச்சைக்காரர், தான் யாசித்துப் பெற்ற பணத்தின் பெரும் பகுதியை, ‘‘கொரானா கொள்ளை நோய்’’ வந்த போது மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக இரண்டு மூன்று முறை மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசாங்கத்திற்கு அளித்தார் என்பதைப் படிக்கிறோம்.
ஆன்மிகத்திலும் படிக்கக் கூடிய செய்திகள் வாழ்க்கைக்கு உதவ வேண்டும்.
அதற்கு எடுத்துக்காட்டு தான் வாமனாவதாரம்.
தன்னை இழந்து, பிறருக்காக வாழ்ந்த அவதாரம் என்பதால், ஆண்டாள் அவனை வாமனன் என்று சொல்லாமல், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று மங்களாசாசனம் செய்தாள்.
இப்போதும் அந்தப் பாடலை பாடித்தான் வைணவர்கள் ஒருவரை வாழ்த்துவார்கள்.
வாமனாவதாரம் வெற்றியைத் தரும் அவதாரம். எனவே தான் பகவான் வெற்றி பெற்ற அந்த வாமன அவதாரத்தை முதலாகக் கொண்டு ஒரு குறளாய் இருநிலம் என்று ஆரம்பித்தார்.
இலக்கியத்தை விஸ்தாரமாக அளக்கும் நூல் தமிழில் திருக்குறள்.
இரண்டு அடிகளால் உலகத்தின் அத்தனை விஷயங்களையும் அளப்பது.
பகவான் இரண்டு அடிகளால் எல்லா உலகத்தையும் அளந்தான் என்பதால் அவருக்கு திருக்குறளப்பன் என்று பெயர்.
அதனால்தான் ஒரு குறளாய் என்ற சொல்லில் திருமங்கையாழ்வார் சீர்காழி பாசுரத்தைத் தொடங்கினார்.
குறள் என்றால் ‘‘குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட’’ என்று பொருள். உலகளந்த திருவிக்கிரமனின் சுருக்கம் தானே வாமனன்.
சின்ன ஆலயம்தான். உள்ளே நுழைந்த உடன் வலதுபுறம் ராமர் சந்நதி. இடதுபுறம் மடைப்பள்ளி. அழகான பிராகாரம். இடதுபுறம் தாயார் சந்நதி. வலதுபுறம் வழக்கம்போல ஆண்டாள் சந்நதி. கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் சந்நதி என அத்தனை அம்சங்களும் இருக்கும்.
மகாமண்டபம் போக படிகள் ஏறவேண்டும். ஏறிய உடனே கருவறையில் பெருமாளின் கம்பீரமான தரிசனம் கிடைக்கும். முதலிலேயே சொன்ன ஒரு குறளாய் என்கிற பாசுரத்தையும், அதன் பொருள் சிறப்பையும் மனதில் ஓட விட்டுக் கொண்டு உலகளந்த உத்தமனின் தூக்கிய திருவடியை வைத்த கண் வாங்காமல் பார்த்து மனம் சிலிர்க்க வேண்டும்.
பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியை தாங்கியபடி இருப்பதைப்போல, இங்கு தாயார் லோகநாயகி மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாள். ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத் தலத்தில் மகாலட்சுமி தாங்குகிறாளாம். எனவே அவள் தன் மார்பில் சுவாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது.
நான்முகன் தன் ஆயுள் பற்றிய செருக்கினால் இருக்க, அந்த கர்வத்தை அடக்க உரோமச முனிவர் தவம் இயற்றிய தலம் இது.
இதன் விளைவாக மூன்றரை கோடி பிரம்ம தேவர் ஆயுளை அந்த முனிவர் பெற்றார். அந்த ரோமச முனிவருக்கு உலகளந்த காட்சியை காட்டி நின்றான் பெருமாள்.
திருக்கோவிலூரில் அவரது வலது திருவடி தூக்கியபடி இருக்கும். ஆனால் இங்கே பெருமானின் இடது பாதம் தூக்கி இருக்க பஞ்சாயுதங்களுடன் காட்சி தருவார்.
தாயார் மட்டவிழ் குழலி. லோகநாயகி தாயார். விமானத்திற்கு புஷ்பக விமானம் என்று பெயர். பலாமரம் தான் இங்கே தல விருட்சம்.
இக்கோயிலில் முன் மண்டபத்தில் இடது கரத்தில் குடையும் வலது கரத்தில் தான முத்திரையும் கூடிய அழகான வாமன மூர்த்தியையும், தோளில் வேலைச் சாய்த்துக் கொண்டு, கம்பீரமாகக் காட்சி தரும் திருமங்கையாழ் வாரின் தரிசனத்தையும் காணலாம்.
கருவறைக்கு முன் உள்ள சிறு மண்டபத்தில் வரிசையாக ஆழ்வார்கள் எழுந்தருளி இருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
ஒருகாலத்தில் அந்நியப் படையெடுப்பு நடந்த பொழுது, இங்குள்ள உற்சவ மூர்த்தியை மூதாட்டி ஒருவர் தன்னுடைய தவிட்டுப் பானையில் வைத்து பாதுகாத்தாள்.
இந்த திருத்தலத்தைச் சேவிக்க வந்த திருமங்கையாழ்வார் அந்த மூதாட்டியிடமிருந்து உற்சவ மூர்த்தியைப் பெற்று இந்த ஆலயத்தில் அமைந்தார்.
ஒருமுறை ஆற்காடு நவாப்பின் வீரர்கள் இந்த உற்சவ மூர்த்தியை எடுத்துக் கொண்டு சென்று அரண்மனைக்குள் மறைத்து வைக்க, சிதம்பரம் படையாட்சி என்கின்ற ஒரு பக்தர், துணிவோடு சென்று அதனை மீட்டு வந்ததால் இன்றும் அவர் மரபினருக்கு ஏழாம் நாள் உற்சவத்தில் மரியாதை உண்டு.
இந்த உற்சவ மூர்த்திக்கு தவிட்டுப் பானை தாடாளன் என்று பெயர். ‘‘தாள்’ என்றால் “பூமி அல்லது உலகம்’, “ஆளன்’’ என்றால் “அளந்தவன்’’ என்று பொருள். தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் இவருக்கு “தாடாளன்’ என்று பெயர்.
வருடத்திற்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசித் திருநாளில் இந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.
இங்கே தனிச்சந்நதியில் சீதா சமேத ராமபிரான் இருக்கிறார். இந்த உற்சவ மூர்த்திகள் அவ்வளவு அழகாக இருப்பார்கள்.
இராமானுஜருக்கும் இந்தத் தலத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு.
இராமானுஜர் ஒரு முறை இந்தத் தலத்து திருமொழிப் பாசுரத்தைப் பயின்றார்.
பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய்
பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்
மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ
நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்
தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மினீரே.
அப்பொழுது இந்தப் பாசுரத்தில் வருகின்ற தெட்டபழம் என்கின்ற வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை. தெரியாமல் தன்னுடைய சீடர்களுக்குப் பொருள் சொல்வதற்கும் அவர் விரும்பவில்லை. அதனால் பொருள் தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்று விட்டுவிட்டார். ஏதேதோ நூல்களில் ஆராய்ந்து பார்த்தார். சரியான பொருள் அவருக்குத் தெரியவில்லை.
அப்பொழுது இந்த தலத்துக்கு அவர் எழுந்தருளினார். அப்பொழுது ஒரு மரத் தடியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் மரத்தின் மேலே ஏறி பழங்களைப் பறித்து கீழே உள்ள சிறுவர்களுக்குப் போட்டுக் கொண்டிருந்தான். கீழே உள்ள சிறுவன் ‘‘நல்ல தெட்டபழமாகப் பார்த்துப் போடு’’ என்று சொல்ல, அது இராமானுஜர் காதில் விழுந்தது.
உடனே அந்த சிறுவனை அழைத்து ‘‘தெட்டபழம் என்றால் என்ன பொருள்?’’ என்று கேட்க. ‘‘சுவாமி இது தெரியாதா? தெட்டபழம் என்றால் நல்ல கனிந்த பழம் என்று பொருள்’’ என்று சொல்ல, இந்தப் பகுதியில் வழங்குகின்ற ஒரு திசைச்சொல்லான தெட்டபழம் என்பதன் பொருளை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் இராமானுஜர் அந்த சிறுவர்களை வாழ்த்தி அனுப்பினார்.
உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். வாருங்கள். வளமான வாழ்வு பெற சீர்காழி தாடாளனைச்
சேவிப்போம்.