Saturday, September 7, 2024
Home » சீர்காழி தாடாளன்

சீர்காழி தாடாளன்

by Lavanya

காழிச்சீராம விண்ணகரம் என்ற சீர்காழி சென்று மூலவர் கருவறை முன் நிற்போம். அவருக்குமுன் எழில் கோலம் காட்டும் உற்சவர் திருவிக்கிரம நாராயணனை வைத்த விழி வாங்காமல் பார்ப்போம். இப்படி நாம் இவரை தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆமாம், இரண்டு முறை காணாமல் போய் மீண்டும் கிடைத்த பெருமாள் இவர்! இப்போது விழிகளை மூடிக்கொண்டு, அவர் திரும்பக் கிடைத்த சம்பவங்களை தியானம் செய்வோம்:
இந்த சீர்காழியிலேயே ஒருமுறை சமயக் கலவரங்கள் ஏற்பட்டன. துரதிருஷ்டவசமாக இது போன்ற அசம்பாவிதங்களில் முதலாவதாகவும், பெரிதாகவும் பாதிக்கப்பட்டவை கோயில்கள்தான். அந்த வழியில் இந்தக் கோயிலும் தாக்குதலுக்குட்பட்டு கிட்டத்தட்ட சின்னாபின்னமாகிவிட்டதென்றே சொல்லலாம்.

கோயில் இடிக்கப்பட்டால் யாரையாவது வைத்து, பொருள் திரட்டி, புதிதாகக் கட்டிக்கொள்ளலாம். ஆனால், உள்ளே கோயில் கொண்டிருக்கும் பெருமாளை யாராவது கொள்ளை கொண்டு போய்விட்டால் அவரை அப்புறம் மீட்பது எப்படி? அர்ச்சாவதாரமாக அவதரித்திருக்கும் இதே பெருமாளுக்கு மாற்று உருவாக்க முடியுமா என்ன? இவரது ஒளிமிகுந்த உடலிலிருந்து புறப்படும் அருள் அலைகளை, மாற்று விக்கிரகத்தால் தரமுடியுமா? பழைமையும், தொன்மைச் சிறப்பும் கொண்டு, முனிவர்களுக்கும் பிற தேவர்களுக்கும் தரிசனம் தந்து ஆட்கொண்ட இந்தப் பெருமாளின் சாந்நித்தியம் புதுச் சிலைக்கு ஏற்பட்டுவிட முடியுமா? மாற்று என்பது மனித வாழ்வில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம்; இறைவனிடம் அது சரிப்படுமா? ஆகவே இந்த அர்ச்சாவதாரத்தை எப்படியாவது காக்க வேண்டும்; வேற்று மனிதர் வேறு யாருடைய ஆளுமைக்கும் நம் பெருமாளை தாரை வார்த்துக் கொடுத்துவிடக் கூடாது – இப்படி தீவிரமாக சிந்தித்தாள் ஒரு மூதாட்டி.

கொஞ்சமும் சம்பந்தமில்லாத யாரோ ஒருவர் வந்து அள்ளி செல்வதைவிட நாமே எடுத்துச் சென்று பாதுகாத்தால் என்ன என்ற அவளது பக்தி மேம்பாட்டுக்கு பெருமாளும் புன்னகையுடன் சம்மதித்தார். அந்தப் பெண்மணி அந்த அர்ச்சாவதாரச் சிலையை கோயிலிலிருந்து எடுத்து வந்தாள். தன் வீட்டிலுள்ள தவிட்டுப் பானையில் வைத்து தவிடு தூவி மறைத்து வைத்தாள். அந்த விக்கிரகத்தை கைக்கொள்ள, சந்தேகப்பட்டு இவளது வீட்டிற்கு வரும் யாரும் தவிட்டுப் பானைக்குள் தேடிப் பார்ப்பார்களா, என்ன? அவளது எண்ணத்தை பெருமாள் ‘அங்கீகரித்த’தால் அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள். ஆனால் கோயிலில் குடியிருக்க வேண்டிய தெய்வத்தை, தவிட்டுப் பானையில் எத்தனை நாள்தான் வைத்திருப்பது? அவளுக்கு இந்தத் தயக்கமும் இருக்கத்தான் செய்தது. அவளுக்கு அருள வேண்டியே சிலகாலம் அவளது வீட்டில் கோயில் கொண்டிருந்த பெருமாள், அவளது கனவில் தோன்றி, தன்னை, அப்போது அந்தத் தலத்துக்கு வருகை தரும் திருமங்கையாழ்வாரிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டுக்கொண்டார்.

தான் பலருக்கும் தரிசனம் தந்து அவர்களைப் பரிபாலிக்க வேண்டிய கடமையை இனியும் தொடராமல் இருப்பது சரியல்ல என்று அவர் கருதியிருப்பார் போலிருக்கிறது!அதேபோல அவள், அங்கு வந்த ஆழ்வாரிடம் அந்த அர்ச்சாவதாரத்தை சமர்ப்பித்தாள். அதனை கோயிலில் ஸ்தாபிதம் செய்யத் தனக்கு பெருமாள் வாய்ப்பு அருளியதை எண்ணி பெருமிதம் கொண்டார் திருமங்கையாழ்வார். அன்றிலிருந்து தவிட்டுப் பானை தாடாளன் என்று இந்தப் பெருமாள் அழைக்கப்பட்டார். அதாவது தன்னைத் தவிட்டுப் பானையில் வைத்து ‘காப்பாற்’றிய மூதாட்டியை எல்லோரும் எல்லா காலத்திலும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனே செய்த ஏற்பாடு இது என்றே கொள்ள வேண்டும்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் பெருமாளுக்கு ‘சோதனை’ ஏற்பட்டது. முகலாய ஆட்சி காலத்தில் ஆற்காடு நவாபின் சேனைகள் ஊர் ஊராகப் போய் வரிவசூலித்து கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் சீர்காழிக்கு வந்தபோது இந்தத் தாடாளனைக் கண்டார்கள். அந்த ‘பொம்மை’யைத் தங்கள் தலைவனுடைய மகளுக்கு அன்பளிப்பாகக் கொண்டு கொடுத்தால் அவள் அதை வைத்து விளையாடி மகிழ்வாள்; மன்னனும் தங்களைப் பாராட்டுவான் என்று நினைத்தார்கள். உடனே பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி அந்த விக்கிரகத்தைக் கோயிலிலிருந்து பறித்துக்கொண்டு சென்றார்கள்.அவர்கள் எதிர்பார்த்தபடியே நவாபின் மகள் பேருவகையோடு அந்தப் பெருமாளைப் பெற்றுக்கொண்டு எப்போதும் தன்னுடனேயே வைத்துக்கொண்டு விளையாடினாள். இங்கே சீர்காழியில் பதட்டம் அதிகரித்தது.

பெருமாளைக் காணோமே, எங்கிருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ, அவரை மீட்க வேண்டுமே என்று பரிதவிப்புடன் தவித்து மறுகினார்கள், பக்தர்கள். அப்போது சிதம்பர படையாச்சி என்ற பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள் தான் அப்போது இருக்கும் இடத்தை விளக்கிச் சொன்னார். தன்னை எப்படி மீட்பது என்று உபாயமும் சொல்லிக்கொடுத்தார். அதன்படி படையாச்சியும் மற்றவர்களும் நவாபின் மாளிகைக்கு ஒரு நள்ளிரவில் சென்றார்கள். பெருமாள் சொல்லிக்கொடுத்தபடி, மதில் சுவருக்கு அருகே நின்றுகொண்டு, ‘‘தாடாளா வா, தாடாளா வா; வெண்ணெய் உண்ட தாடாளா வா, தாடாளா வா, தாடாளா வா; தவிட்டுப் பானை தாடாளா வா,’’ என்று குரல் கொடுத்தார்கள். அந்த இரவிலும் நவாபின் மகள் தாடாளனைத் தூக்கிப் போட்டு விளையாடிக்கொண்டிருந்தாள்.

தன் பக்தர்களின் குரல் கேட்கவே, அப்படியே அந்தப் பெண்ணின் கையிலிருந்து துள்ளி எகிறி, அறைச் சாளரத்தின் வழியாக வெளியே பாய்ந்து இவர்கள் கைகளில் வந்து விழுந்தார், பெருமாள். அந்தப் பெருமாளை அப்படியே தாங்கி பிடித்து மிகுந்த பாதுகாப்புடன், எதிரிகள் கண்களில் படாமல் சீர்காழிக்கு ஓடி வந்துவிட்டார்கள், பக்தர்கள். இப்போது கண் திறந்து பெருமாளைப் பார்ப்போம். நம் விழிகளிலிருந்து கசியும் கண்ணீர், நாம் தரிசிப்பதற்காகவே, இரண்டு முறைகளும் அந்த காலத்து பக்தர்களை ஊக்குவித்தப் பெருங்கருணைக்கான நன்றியாகவே வெளிப்படும். ‘தவிட்டுப் பானை தாடாளன்’ என்று பெருமாளை அழைப்பதன் மூலம் முதல் முறை இந்த உற்சவரைக் காப்பாற்றிக் காத்து திருமங்கையாழ்வாரிடம் சேர்ப்பித்த மூதாட்டியை இன்றளவும் கௌரவப்படுத்துகிறார்கள்.

அதேபோல நவாபிடமிருந்து மறுபடி இவரை மீட்டு வந்த சிதம்பர படையாச்சியின் முயற்சியைப் பாராட்டும் வகையில் இன்றும் அவரது பரம்பரையினருக்கு இக்கோயிலில் தனி மரியாதை செய்விக்கப்படுகிறது. இத்தலப் பெருமாள் தாடாளன் என்று பெயர் பெற்றதற்கும் நயமான காரணமும், விளக்கமும் உண்டு. பெருமாள் திரிவிக்கிரமனாக அவதாரம் மேற்கொண்டபோது முதல் அடியால் இந்த பூமியையே அளந்தாரே, அந்த அடி வைத்தது இந்தக் காழிச்சீராம விண்ணகரத்தில்தான். (இரண்டாவது அடியை காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருத்தலத்தில் வைத்த பெருமாள், ‘மூன்றாவது அடியை எங்கே வைக்க?’ என்று கேட்கும் பாவனையை திருக்கோவலூரில் காட்டுகிறார் என்று சொல்வார்கள்.)

தன் தாளால் இந்தப் பிரபஞ்சத்தையே ஆண்டவன் என்ற பொருளில் திருமங்கையாழ்வார் ‘தாடாளன்’ என்று ஒரே சொல்லில் சிறப்பித் திருக்கிறார்! ‘ஓங்கி உலகு அளந்த உத்தமன்’ என்று ஆண்டாளும், ‘ஞாலம் அளந்த பிரான் என்று நம்மாழ்வாரும் பல சொற்களில் விளக்கியதை ‘தாடாளன்’ என்ற ஒரே சொல்லில் திருமங்கையாழ்வார் நிறைவாக விளக்கி யதுதான் எவ்வளவு நயமானது! இந்த அடியை, 2000 வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படும் திருக்குறளும் பெரிதும் போற்றுகிறது. ‘வாலறிவன் நற்றாள்’, ‘மலர்மிசை ஏகினான் மாணடி’, ‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி’, தனக்குவமை இல்லாதான் தாள்’, ‘அறவாழி அந்தணன் தாள்’, ‘என்குணத்தான் தாளை,’ ‘நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றெல்லாம் கடவுள் வாழ்த்தில் அவன் தாளைப் போற்றிப் பாராட்டும் வள்ளுவர், பொருட்பாலில், மடியின்மை (சோம்பலின்மை) அதிகாரத்தில், 610வது குறளாக, இந்த திரிவிக்கிரம சம்பவத்தையே விளக்குகிறார்:
‘மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு’
– என்கிறார்.
அதாவது காலால் தாவி, உலகப் பரப்பு முழுவதையும் தன் அடியால் அளந்த திருமாலைப் போல, சோம்பலற்ற மன்னனின் ஆளுகைக்குள் இந்த உலகே அடிபணியும் என்று பொருள். இதேபோன்ற ‘குறளடி’யை இந்தப் பெருமாளின் பெருமையை விவரிக்கும் வகையில் திருமங்கையாழ்வாரும் பயன்படுத்தியிருக்கிறார். இதையும் திருஞானசம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பாடியதையும், அது சம்பந்தமான நிகழ்ச்சியை அறிவதும் மெய்சிலிர்க்க வைப்பதாகும். ஆழ்வாரின் மேன்மையை இச்சம்பவத்தின் மூலம் உலகறிய வெளிப்படுத்தியதில் இந்த சீர்காழி தலம் பெரும் பங்கு வகித்தது என்றே சொல்லலாம்.

திருமங்கையாழ்வார் வடதேசத்திலுள்ள பெருமாள் தலங்கள் சிலவற்றை தரிசித்து மங்களாசாசனம் செய்துவிட்டுத் தமிழகம் திரும்பினார். சீர்காழியில் தம் சீடர்களோடு வந்த அவர், அங்கே திருஞான சம்பந்தரையும் அவரது சீடர்களையும் சந்தித்தார். ஆழ்வாரின் அருமை, பெருமைகளைக் கேள்விப்பட்டிருந்த சம்பந்தர், அவரது வாயால் தனிப்பாடலைக் கேட்டு மகிழ விரும்பினார். ஆகவே குறள் என்ற பதத்தை வைத்து ஒரு பாசுரம் இயற்றச் சொல்லி விரும்பிக் கேட்டுக்கொண்டார். சம்பந்தரின் கீர்த்தியைத் தெரிந்து வைத்திருந்த ஆழ்வார், குறள் என்ற பதம் மட்டுமல்லாமல், எண்ணிக்கையை வைத்தும் ஒரு பாடல் இயற்றினார்:

ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி
உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திறன் நான்கும் வேள்வியைந்தும்
அங்கங்கள வைகளாறும் இசைகளேழும்
தெருவில் மலிவிழா வளம் சிறக்கும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மினீரே

என்று தொடங்கி, அடுத்தடுத்து பத்துப் பாடல்களில் திருமாலின் தசாவதாரங்களையும் விளக்கி, வியப்பூட்டினார், திருமங்கையாழ்வார். இப்பாடலிலும் குறள் என்று குறுகிய வாமனனையும், மண், விண் என்ற இரு நிலங்களையும், மூன்றாவது அடிக்கு எங்கே இடம் என்று கேட்டும், இறைவனின் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என்ற நான்கு இயல்புகளையும், ஐவகை வேள்விகளையும் ஆறு அங்கங்களையும், ஏழிசைகளையும் சொல்லி எண் நேர்த்தியை வெளிப்படுத்தினார். அப்பாடல்களைக் கேட்டு மனம் நெகிழ்ந்த திருஞான சம்பந்தர், உடனே அவரை ஆரத் தழுவி தம் உளப்பூர்வமான பாராட்டைத் தெரிவித்து தான் எப்போதும் உடன் கொண்டு செல்லும் வேலினை தம்
அன்பளிப்பாக அளித்தார். இது மட்டுமல்ல, இவ்விருவரும் எத்தகைய ஆழமான நட்பு பூண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் தமக்குள் பரிமாறிக்கொண்ட பாடல்களிலிருந்து அறிய முடிகிறது. பாவலர் என்ற ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாயினும், இறை வழிபாட்டில் இருவேறு கோணங்களில் செயல்படும் இவ்விருவரும், எந்த பாகுபடும் பாராட்டாமல் ஒருவருக்கொருவர் கவிமழை பொழிந்து நட்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்கள்.

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
கயத்துக்குள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
அலையுண்டு குலைசிதறும் ஆலிநாடா
படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடி
பதம் பெற்றப் பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே

– என்றார் சம்பந்தர். தன்னை ஒரு தாயாக பாவித்துக்கொண்டு தன் மகளின் நிலையை விளக்குவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
‘பரம்பொருளான திருமாலிடமே கொள்ளையடித்தவரே, மங்கை மன்னரே, உமது அழகு பவனி காணவந்த என் மகளின் உள்ளத்தையும் கொள்ளையடித்துவிட்டீரே! தன் இதயம் இழந்து, வெறும் உயிர் மட்டும் தரித்து வாழும் நிலைக்கு அவளைக் கொண்டுவிட்டீரே, இது முறைதானா?’ என்று கேட்டார் சம்பந்தர். இதற்கு ஆழ்வாரோ,

‘வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவையாக்கினோம் என்று
இருக்குமது தகவென்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே’

-என்று திருஞான சம்பந்தரை மிகவும் சிலாகித்துப் பாடுகிறார். திருமங்கயாழ்வார் தன்னையும் ஒரு பெண்ணாக பாவித்துகொண்டு திருஞான சம்பந்தரையும் அவரது அற்புதங்களையும் பாராட்டிப் பாடினார். அதாவது, ‘ஞானசம்பந்தரே, அபலையான நான் தங்களையே நினைந்து நினைந்து உருகிப் போனேன். தங்களைக் காணாவிட்டாலும், தங்கள் மேல் காதல் கொண்டு பிரிவாற்றாமையால் வருந்தி நிற்கிறேன். எனக்கு இப்போது நிலவொளிகூட அனலாக சுடுகிறது. அனலில் வெந்து சாம்பலாகிப் போன பூம்பாவை என்ற பெண்ணையே பிழைக்க வைத்து அற்புத விந்தை புரிந்தவரே, தங்களைக் காணாமல் நிலவொளியிலும் வெந்து சாம்பலாகப் போகும் என்னையும் தங்களது காதலால் உயிர்ப்பிப்பீர்களா?’ என்று உள்ளம் உருகக் கேட்கிறார்.

இப்படி இந்த இரு பெருந்தகைகளும் அதுவரை ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை என்றாலும், ஒருவரைப் பற்றி மற்றவர் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை பிரமிக்க வைக்கிறது! உளமார்ந்த நட்பு, மதக் கட்டுப்பாடுகளை, தளைகளைத் தகர்த்தெறிகிறது என்பதற்கு இந்த இருவரின் இணக்கமே பெருஞ்சான்றாக அமைந்துவிட்டது.
இவர்களது இந்த இணைந்த நெஞ்சங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் உதாரணமாகக் காட்டலாம். அது என்ன? திருஞான சம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடினார்; திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி பாடினார். கோளறு திருப்பதிகமும், பெரிய திருமொழி, 11ம் பத்து, நான்காம் பதிகமும் ஒரே பண் இசையைக் கொண்டிருக்கின்றன. ஆமாம், இரண்டுமே அடாணா (என்ற கர்நாடக சங்கீத) ராகத்திலும், திரிபுடை தாளத்திலும் அமைந்திருக்கின்றன!

உண்மையான தலைவர்களிடையே பேதமில்லை, தொண்டர்களிடம்தான் என்பதை அந்நாளிலேயே எடுத்துக்காட்டிய இந்த சமயத் தலைமகன்கள் இருவரும் தம் நட்பைப் பலப்படுத்திக்கொள்ள சீர்காழி உறுதியானதோர் பாலமாக அமைந்தது என்பது, இப்போது அந்தத் தலப் பெருமாளை தரிசிக்கும் நமக்குப் பேருவகை அளிக்கக்கூடியது.இந்த சாத்வீக மனோநிலையில் தாடாளன் பெருமாளை தரிசிக்கலாம். இடது காலை உயர்த்தி வலதுகாலை ஊன்றி நிற்கிறார் பெருமாள். இடது கை, உயர்த்திய இடது காலுக்கு இணையாக நீண்டிருக்கிறது. வலது கை, தான ஹஸ்தமாகத் திகழ்கிறது. அதாவது தானம் வாங்க வந்து, மகாபலியின் கர்வத்தை அடக்கிய பெருமாள், தான் ஒருவனே அனைவருக்கும் தானம் வழங்க வல்லவன் என்பதை நிரூபிப்பது போல!மன நிறைவாகப் பெருமாளை தரிசனம் செய்த பிறகு, லோகநாயகித் தாயாரைக் கண்குளிரக் காணலாம்.

இந்த மூலவருக்கு முன்னால், உற்சவராக மட்டவிழ்க் குழலித் தாயார் எழில்கோலம் காட்டுகிறார். அடர்ந்த, நீண்ட, கருங்கூந்தல் மிளிர ஒளிர்பவள் என்று பொருள். ஆனால் மூலவர் தாயாரை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் சேவிக்க முடியும் என்கிறார்கள். மூலவர், உற்சவர் இருவரும் ஒரே உயரத்தில் அமைந்திருக்கிறார்கள். தாயார் சந்நதி உள்ள மண்டபத்தூண் ஒன்றில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். வெளிப் பிராகார சுற்றில் ஆண்டாளை தனி சந்நதியில் தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் கோதண்டராமர் தனி முக்கியத்துவத்துடன் வழிபடப்படுகிறார். சீதை, லட்சுமணன், அனுமன் சமேதராகக் காட்சியளிக்கும் இவரே இந்த ஆலயத்தின் முதல் மூலவர் என்ற கருத்தும் நிலவுகிறது. காழிச் சீராம விண்ணகரம் என்று இந்தத் தலம் அழைக்கப் படுவதற்கும் இந்த ராமருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அந்தக் கருத்துக்கு ஆதாரம் சேர்க்கிறார்கள்.

(சீர்)காழியில் உறையும் (ஸ்ரீ )சீராமன் என்று கூடுதலாக விளக்கமும் தருகிறார்கள். ஆனால் வாமன- திரிவிக்கிரம அவதாரங்களுக்குப் பிறகுதான் ராம அவதாரம் என்பதால், இந்தக் கோயிலின் முதல் மூலவர் திரிவிக்கிரமனான தாடாளன்தான் என்ற மாற்றுக் கருத்தும் நிலவுகிறது. காழிச்சீராம விண்ணகரம் என்று இந்தத் தலம் அழைக்கப்படுகிறது. விண்ணகரம் என்றால் மஹாவிஷ்ணு வாசம் செய்யும் பரமபதம் என்று பொருள். திருமங்கையாழ்வாரின் பாசுரங்களிலிருந்து 108 திவ்ய தேசங்களில் மொத்தம் ஐந்து விண்ணகரங்கள் இருப்பதாக அறிய முடிகிறது. அவை: பரமேச்சுர விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுர விண்ணகரம், காழிச்சீராம விண்ணகரம். ஆனால் விண்ணகரம் என்ற பதத்தை முதன் முதலில் தம் பாசுரங்களில் கையாண்டவர் நம்மாழ்வார்தான்.

ஒப்பிலியப்பன் கோயில் கொண்டிருக்கும் தலத்தை ‘திருவிண்ணகர்’ என்று கூறி சிறப்பித்திருக்கிறார் அவர். இந்தச் சொல்லை ஏற்கெனவே அறிந்தோ அல்லது அதற்கு மாற்றுச் சொல் வேறு இல்லை என்ற திகைப்பாலோ பயன்படுத்தியிருக்கிறார் என்று கொள்ளலாம். பெருமாளை மங்களாசாசனம் செய்யும் உயரிய கைங்கர்யத்திற்குப் பொருத்தமான சொல் இது என்றும் திருமங்கையாழ்வார் கருதியிருக்கக்கூடும். ஒவ்வொருவர் முயற்சியும் பெருமாளின் பெருமையை மேலும் மேலும் ஓங்க வைக்கதானே தவிர, எந்த முரண்பாட்டுக்காகவும் அல்ல என்பதுதான் உண்மை. தாடாளனின் தாள் பணிந்தால் தரணி போற்ற வாழலாம் என்பது பலரது அனுபவமாக இருக்கிறது.

எப்படிப் போவது: சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் இருக்கிறது காழிச்சீராம விண்ணகரம். பேருந்து, ஆட்டோ மூலமாகச் செல்லலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: திருவாலி, காலை 7 முதல் 12 மணிவரை, மாலை 5 முதல் 8.30 மணிவரை. முகவரி: அருள்மிகு திரிவிக்ரம நாராயணப் பெருமாள் திருக்கோயில், சீர்காழி நகர் மற்றும் வட்டம், நாகை மாவட்டம் – 609110.
தியான ஸ்லோகம்
“தாடாளாலய வாஸிநோ பலிரிபோஸ் ஸௌகந்த்யவத் குந்தலா
தேவீ தத்ர விமாநமிஷ்ட பலதம் தத் புஷ்கலா வர்த்தகம்
தீர்த்தம் சங்க ஸர: ப்ரஸித்த யசஸே நாம்நாஷ்ட கோணாயவை
தஸ்மை துஷ்கர தாபஸாய வரத: ப்ராசீமுகோ பாஸதே’’

You may also like

Leave a Comment

one + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi