சீர்காழி, நவ.15: சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்எல்ஏ நிவாரண உதவிகள் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள தொடுவாய் சுனாமி நகரில் வசிப்பவர் பேபி (70). இவரது கூரை வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் சம்பவ இடம் சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசு சார்பில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை, அரிசி, காய்கறி மற்றும் நிதி உதவி வழங்கினார்.
கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் இளங்கோவன், கிராம நிர்வாக அலுவலர் பபிதா, ஒன்றிய குழு உறுப்பினர் அங்குந்தன், மீனவர் அணி சின்னப்பா ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.