Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எஸ்.ஐ.ஆரை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நவ.11ல் கண்டன ஆர்ப்பாட்டம்!!

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பணியை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் நவ.11ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்த உள்ளனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் S.I.R-க்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது.

சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.,வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு ஒன்றிய பா.ஜ.க. அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முயன்றிருப்பதோடு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் S.I.R திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.)வின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக - விவசாயிகளாக இருப்பதால், Enumeration Form-களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர். அதோடு, வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் Enumeration-க்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும் – அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இந்த S.I.R. ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

i. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பார்த்தவாறே 4.11.2025ஆம் தேதியிலிருந்து இன்று வரை களத்தில் S.I.R, பெரும்பாலான வாக்காளர்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலான இடங்களில் BLOக்கள் இன்று வரை கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) தரத் துவங்கவில்லை.

ii. BLOக்களும் – BLA2க்களுக்கும் இடையே சரியான தகவல் தொடர்புகளை ஏற்படுத்தபடவில்லை. அவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

iii. சில இடங்களில், குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் BLOக்கள் Enumeration Form-ஐ ஒரு நாளிலேயே பூர்த்தி செய்து தர வலியுறுத்துகிறார்கள்.

iv. தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன.

எனவே, இந்த S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளதை கண்டித்து ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் வருகிற 11-11-2025 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.00 மணியளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.