Sunday, March 16, 2025
Home » சைனசைடிஸ் பிரச்னை…

சைனசைடிஸ் பிரச்னை…

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயுர்வேதத் தீர்வு!

சைனஸ் பிரச்னை வருவதற்கு நோய்த் தொற்றோ அல்லது அலர்ஜியோ மட்டுமே காரணமில்லை. அசிடிட்டியும் ஒரு காரணம். ஆம் அசிடிட்டியினால் கூட சைனஸ் பிரச்னை வரக்கூடும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.

சிலர் வாழ்நாள் முழுவதும் வலி நிவாரணிகளும் ஆன்டிபயாட்டிக்கும் சாப்பிட்டு வர அசிடிட்டி அதிகமாகி சைனஸ் பிரச்னை அதிகமாகுமே தவிர இது நிரந்தரமாகக் குணமடையாமல் நாளுக்கு நாள் வீரியமடைந்து உங்கள் தினசரி செயல்களையே முடக்கிவிடும். ஆக சைனஸ் ஒரு ஆட்கொல்லி நோயாக பல நேரங்களில் மாறாமல் இருந்தாலும் கூட அது நம் மன தைரியத்தையும் உடலமைப்பையும் மாற்றி. நம்மை சோர்வடையச் செய்யும் ஒரு முக்கியமான நோயாகப் பார்க்கப்படுகிறது.

லட்சத்தில் ஒருவருக்கு இந்நோய் பூஞ்சான் காரணமாக உருவாகி இருந்தால் அது மூளைவரை பரவி நம் கண், காது ஆகியவற்றின் செயல்பாடுகளைக் குறைத்து பக்கவாதம் வரை உருவாக்க வாய்ப்புகள் உண்டு. எனவே இப்பிரச்னையை உடனுக்குடன் சரிசெய்து கொள்வது நல்லது.அடிப்படையில் சைனஸ் என்பது ஒரு வியாதி அல்ல. அது நமது தலையில் இருக்கும் ஒரு அங்கம் ஆகும். இது முக எலும்புகளுக்குள் சில துவாரங்களாகும் (வெற்று இடங்கள்), இவை நம் மூக்குடன் இணைக்கப்பட்டுள்ளன.

நமது உடலில் நான்கு வகையான சைனஸ் மண்டலங்கள் உள்ளன. அவைகளில் காற்று மூக்கின் வழியே புகுந்து நம் தலையை நம் கழுத்தின் மீது மிதக்கச் செய்து நமது தலையின் பாரம் நமக்குத் தெரியாத அளவிற்கு பார்த்துக் கொள்கிறது. மேலும் நாம் பேசுவதற்கு ஒலி அதிர்வுகளை ஏற்படுத்த உதவுகிறது. சில சமயங்களில் சில ஒவ்வாமைகளின் காரணமாகவோ அல்லது நோய்த்தோற்று காரணமாகவோ பல நேரங்களில் நீண்ட காலமாக இருக்கும் அசிடிட்டியின் காரணமாகவோ நமது சைனஸ் மண்டலத்தின் உள்ளிருக்கும் திசுக்கள் வீக்கம் அடைந்து அதனால் தலைபாரம், தலைவலி, மூக்கடைப்பு மற்றும் சளித் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சைனஸ் மண்டலத்தினுள் பாக்டீரியா வைரஸ் அல்லது பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படுவதாலோ அல்லது புகைபிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்தல் ஆகியவையினால் ஏற்படும் அலர்ஜியினாலோ அல்லது அசிடிட்டியால் நம் வயிற்றின் அமிலங்களின் நெடிகள் மேல்நோக்கிச் செல்வதாலோ சைனஸ் உள்ளிருக்கும் திசுக்கள் சேதமடைந்து சைனசைடிஸ் பிரச்னையை உருவாக்கலாம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் இது நுரையீரலுக்குள் சென்று இருமல், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி இது ஆஸ்துமாவாக கூட மாற வழிவகுக்கும்.

காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகிய மூன்று அங்கங்களும் ஒன்றோடு மற்றொன்று இணைந்திருப்பதால் இந்த மூக்கில் ஏற்படும் சைனசைடிஸ் பிரச்னையால் மற்ற உறுப்புகளும் பாதிக்க நேரிடும். காதுக்குள் இந்த நோய்த் தொற்று சென்று சிலருக்கு நிரந்தரமாகக் காது கேளாமை பிரச்னை உட்பட பல பிரச்னைகள் உண்டாக வாய்ப்புண்டு.

சைனசைடிஸின் அறிகுறிகள்

*தலைவலி – லேசானது முதல் தீவிரமான, கனத்துடன் கூடிய தலைவலி, (கீழே குனிந்தால் தலைக்குள் தண்ணீர் ஓடுவது போல் உணர்தல்) – சமயங்களில் ஒற்றைத் தலைவலியாக வருதல்.
*வலி – கண், காது, மேல் தாடை, தொண்டை மற்றும் பற்களில் வலி.
*கெட்ட சுவாசம் – துர்நாற்றம் வீசும் மூச்சு.
*மூக்கடைப்பு – ஒன்று அல்லது இரண்டு நாசியின் அடைப்பு காரணமாக சுவாசிப்பதில் சிரமம்.
*குறிப்பாக இரவு நேரங்களில் இருமல்
*மூக்கடைப்பு, காது அடைப்பு, வாசனை இழப்பு
*கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வீக்கம்
*சோர்வு – காய்ச்சல்
*சளி – வெண்மையான சில சமயங்களில் மஞ்சள் நிறமான அடர்த்தியான சளி.

சைனசைடிசின் ஆயுர்வேதக் கண்ணோட்டம்

ஆயுர்வேதத்தில் சைனசைடிஸ் துஷ்ட பிரதிஷ்யயம் என்றும் பீனசம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கப வியாதியாக வருகிறது. இது தீவிரமடைந்து, முக்கியமாக சுவாசக் குழாயில் இருக்கும் பிராண வாதத்தை பாதிக்கிறது. சைனசைடிஸ் சிகிச்சைக்கான ஆயுர்வேத அணுகுமுறை பன்முகத்தன்மை கொண்டது. இது பஞ்சகர்மா, வாய்வழி மருந்துகள், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஒரு கூட்டு நச்சுத்தன்மை நீக்கும் செயல்முறைகளாக கையாளப்படுகிறது.

நசியம், லேபனம், தலம், வமனம், விரேசனம், சிரோதாரே, தூமபானம் போன்ற சிகிச்சைகள் பொதுவாக வியாதியின் தீவிரத்தைப் பொறுத்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
நஸ்ய கர்மா அல்லது நசியம் என்பது ஒரு தனித்துவமான மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து நச்சு நீக்கும் சிகிச்சைகளில் ஒன்றாகும். இது சைனசைடிஸ் சிகிச்சையில் மிகவும் வெற்றி தருவதாக இருக்கிறது.

நசிய சிகிச்சையில் மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும் மூலிகைப் பொடிகளை மூக்கின் வழியாக செலுத்தி சளி சுரப்பதைத் தூண்டி சைனஸ் உள்ளிருக்கும் சளியைக் கரைக்கவும் தளர்த்தவும் உதவி அங்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நசிய பிரயோகத்திற்கு சட்பிந்து தைலம், திரிகடுக சூரணம், நசிகா சூரணம் ஆகியவை பயன்படுத்தலாம்.
உடம்பிலிருந்து கபத்தை நீக்க பேதி மருந்தான விரேசனம் நன்றாகப் பயன்படும்.

தூம முறை

விறலி மஞ்சள் ஒரு துண்டு எடுத்துக் கொண்டு அதை நல்லெண்ணெய் அல்லது நெய்தீபத்தில் சுட்டு பின்னர் அதிலிருந்து வரும் புகையை மூக்கின் வழியே இழுக்க வேண்டும் அல்லது சிறிய அளவு மஞ்சள் தூள் ( இரண்டு சிட்டிகைகள் அல்லது கால் தேக்கரண்டி) சூடாக இருக்கும் அடுப்புக்கரி மீது வைத்து அதன் புகை மூக்கின் வழியே உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு செய்ய சைனஸில் ஏற்படும் மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலிக்கு ஒரு அவசரகால, தற்காலத் தீர்வாக அமையும்.

ஆயுர்வேதத்தில் உள்ளுக்குக் கொடுக்க கஷாயங்களான சதமூல கட்டுத்ராயம், வியாக்ரியாதி, வாரணாதி, குக்குலுதிக்தகம், பத்தியாக்ஷ தாத்திரியாதி, பத்தியா குஸ்தும்பராதி, இந்து காந்தம் ஆகியவை நோயாளியின் தன்மைக்கேற்ப திரிகடுகம், சுதர்சனம் ஆகிய சூரணங்களுடன் சேர்த்துக் கொடுக்க நல்ல பலன் தரும். வாயில் அடக்கிக் கொள்ள தாளிசாதி வடகமும் வியோஷாதி வடகமும் பயன்படுத்த மூக்கில் ஏற்படும் மூக்கடைப்பு மற்றும் சளித் தொந்தரவுகள் குறைந்து இந்த சைனஸ் பிரச்னை குறைவதை நாம் காணலாம்.

மேலும் சுதர்சன மாத்திரை, குக்குலு பஞ்சபல மாத்திரை, சூர்யாவர்த்த மாத்திரை ஆகியவையும் அரிஷ்டங்களான வாசரிஷ்டம், கணக்காசவம் அமிர்தாரிஷ்டம் ஆகியவை வியாதியின் குறிக்குணங்களுக்கேற்ப கொடுக்க கபம் குறைந்து மூக்கு துவாரங்கள் விரிவடைந்து இந்த பிரச்னைகளின் அறிகுறிகள் நன்றாகக் குறைவதை நாம் காணலாம்.

நோயின் தீவிரத் தன்மை குறைந்து வலிகள் குறைந்து வரும் தறுவாயில் காயகற்ப மருந்துகளான அகஸ்திய ரசாயனம். தசமூல ரசாயனம், சித்ரகஹரீதகி லேகியம், இந்துகாந்த கிருதம், கண்டகாரி கிருதம், குக்குலுதிக்தாக கிருதம் ஆகியவை கொடுத்து வர இந்த நோய் முற்றிலுமாகக் குணமடைந்து பின் நாட்களில் அவர்களுக்கு இந்த நோய் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளப் பெரிதும் உதவும். வெளி பூச்சுகளாக ராஸ்னாதி சூரணப்பற்று, திரிகடுகு சூரணப் பர்றி ஆகியவை கொடுக்க நல்ல பலன் தரும்.

சைனசைடிஸைத் தடுப்பதற்கான வாழ்க்கை முறை மாற்றங்கள்

*தேவையில்லாமல் அடிக்கடி உங்கள் மூக்கைச் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். கிருமிகள் மற்றும் தொற்று நோயைத் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும்.

*புகைபிடிப்பதைத் தவிக்கவும்.

*குளிர் மற்றும் மேல் சுவாச நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படும்போது முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும்.

*எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் முகமூடிகளை அணிவதன் மூலம் தூசி, புகை, மாசு, எரிச்சல் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தூசி மற்றும் மகரந்த ஒவ்வாமை உள்ளவர்கள் தேவையான சமயங்களில் முகமூடி அணிய வேண்டும்.

*பல் நோய்த்தொற்றுகள் மற்றும் வலிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.

*மழை, பனி, தூசி, புகை ஆகியவற்றில் உங்களை வெளிப்படுத்தாதீர்கள். சிகைக்காய் பொடியைப் பயன்படுத்தாதீர்கள். அடிக்கடி எண்ணெய் குளியலை தவிர்க்கவும்.

*மின் விசிறியின் கீழ் நேரடியாக தூங்குவதைத் தவிர்க்கவும். ஏசி ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 24 முதல் 29 செல்சியஸ் வெப்பநிலையில் ஏசியைப் பயன்படுத்தலாம்.

*செல்லப்பிராணிகளின் முடிகள் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும். எனவே அவற்றை விலக்கி வைக்கவும்.

*வீட்டைச் சுத்தம் செய்தல் அல்லது தூசி அடித்தல், கொசுவர்த்திச் சுருள்கள், லிக்யூடேட்டர்கள் புகை, அகர்பத்தி புகை போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

*ஆஸ்பரின், சல்பைடுகள், என்சாய்ட்ஸ், டார்ட் ராசைன் பூசப்பட்ட மாத்திரைகள் தவிர்க்க வேண்டும்.

*இரவு உணவை இரவு எட்டு மணிக்கு முன்பே எடுத்துக் கொள்ள வேண்டும்.

*குளிர்கால நிலையில் தலை, காது மூடும்படியாக ஸ்கார்ஃப் அணிவது நல்லது.

*சரியான வழிகாட்டுதலுடன் பிராணாயாமம் செய்யலாம்.

*மருத்துவரின் ஆலோசனைப்படி நீராவி செய்யலாம்.

உணவு முறைகள்

*குடிக்க வெந்நீரை மட்டும் பயன்படுத்தவும்.

*மிளகாய்க்குப் பதிலாக உங்கள் உணவில் முடிந்தவரை மிளகு பயன்படுத்தப்பட வேண்டும்.

*சிவப்பு அரிசி, குதிரைவாலி, கோதுமை, பார்லி, தேன், பருப்புக்கீரை, பூண்டு, பேரீச்சம்பழம், ஏலக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

*பூண்டு மிளகு, சீரகம், பெருங்காயம், சோம்பு, இலவங்கப் பட்டை, கொத்துமல்லி, கிராம்பு, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்க்கவும்.

*மஞ்சள் மற்றும் உலர்ந்த இஞ்சி (சுக்கு), மிளகு ஆகியவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை நல்ல இயற்கையான அழற்சி எதிர்ப்பு உணவுகள்.

*மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் நாம் செய்து வர சைனசைடிஸ் நோய் அறவே நீங்கி முற்றிலுமாகக் குணமடைந்து பின்னர் வாழ்நாள் முழுவதும் வராமல் பார்த்துக் கொள்ளப் பெரிதும் உதவும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தொகுப்பு: உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

thirteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi