Saturday, March 2, 2024
Home » சிங்கள உணவுகள்… சீக்ரெட் தகவல்கள்!

சிங்கள உணவுகள்… சீக்ரெட் தகவல்கள்!

by Lavanya

சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சைவம், அசைவம் என அனைத்து உணவுகளையும் பாதியளவுக்கு வேக வைத்து சாப்பிடுகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரும்பாலான உணவுகளை நன்றாக வேக வைத்தே சாப்பிடுகிறார்கள். இதில் இந்தியாவைப் போலவே உணவுக் கலாச்சாரத்தைக் கொண்ட நாடாக விளங்கும் இலங்கையில் சில பிரத்யேக உணவுக் கலாச்சாரமும் இருக்கிறது. இலங்கையின் உணவு என்பது நிலத்திற்கு நிலம் வேறுபாடு கொண்டிருக்கிறது. கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, கண்டி, மன்னார், மட்டக்களப்பு, கல்முனை, அக்கறைப்பட்டு, ஒட்டமாவடி, பதுளை, எல்ல, ரத்தினபுரா போன்ற பகுதிகளில் நுகரப்படும் உணவின் ருசியில் பல மாற்றங்கள் இருக்கிறது. இடியப்பம், அப்பம், இட்லி என்பவை தெற்கே வர வர இடியாப்பம், ஆப்பம், இட்டலி என உச்சரிப்பில் கூட மாறுபாடு காண்கிறது.

இவற்றின் ருசியும் அப்படியே மாறுகிறது. பொதுவாக இலங்கையில் சைவ உணவு வகைகளை மரக்கறி உணவு என்றும், அசைவ வகைகளை மச்சச் சாப்பாடு என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.சதுரங்கப் போட்டியில் ராஜாவை சிறைபிடிப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதுபோல இலங்கை மன்னர்களை சிறை பிடித்து இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள், அரேபிய வணிகர்கள் என பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களை இங்கு பரப்பினர். இலங்கையில் வாழும் தமிழர், சிங்களர், இலங்கை இஸ்லாமியர்கள், மலாய் இஸ்லாமியர்கள், போரா இஸ்லாமியர்கள், மோமோன் இஸ்லாமியர்கள் அனைவருக்குமே அரிசிதான் பிரதான உணவு. அதிலும் சிவப்பு அரிசி புழுங்கல்தான் இவர்கள் விரும்பி சாப்பிடும் அரிசி. நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளான தினை, சாமை, வரகு போன்றவற்றையும் இலங்கை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதுவே அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்கு மிகமுக்கியக் காரணம். அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு பருப்புக் கடையல், குழம்புகள், வறட்டல் தூள் கறிகள், பால் கறி, துவையல், பொரியல், சம்பல், ஊறுகாய் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். நமது திருநெல்வேலிச் சீமையைப் போலவே, இலங்கையிலும் சொதி மிகப் பிரபலம். வெள்ளைச் சாதத்தில் சொதி கலந்து சாப்பிடுவதில் அவர்களுக்கு அலாதி விருப்பம். சிங்கள மக்கள் தங்களது காலை உணவாக மரவள்ளிக்கிழங்கை உப்பும் மஞ்சளும் சேர்த்து அவித்து, அதோடு தேங்காய்ப்பூவைச் சேர்த்து சாப்பிடுகிறார்கள். சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது பெரும்பாலானோர் மூன்று வேளை உணவாக இதையே சாப்பிட்டு இருக்கிறார்கள். பலரின் பசியை இந்த மரவள்ளிக்கிழங்குதான் போக்கி இருக்கிறது. அதேபோல இலங்கை மக்கள் பனைமரத்தின் கிழங்கு, ஓலை, பனம்பழம் ஆகியவற்றை தங்களின் அன்றாட உணவுகளில் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது பனம் பழத்தைப் பிழிந்து அதனை வெயிலில் காய வைத்து உணவோடு சேர்த்து சாப்பிடுகிறார்கள். பனங்கிழங்கையும் நீள வாட்டில் கட் செய்து வெயிலில் காய விடுகிறார்கள். இந்த உலர்ந்த கிழங்கை ஒடியல் என்கிறார்கள். ஒடியல் மாவிலிருந்து செய்யப்படும் ஒடியல் கூழ் இங்கே மிகவும் பிரபலம். ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றாற் போல் ஒடியலின் ருசி மாறுபடுகிறது. ஒடியல் கூழைப் பனை ஓலையில் ஊற்றி பருகுகிறார்கள். அசைவம் என்று பார்க்கும்போது மீன், கருவாடு, மாட்டிறைச்சி, கோழி, ஆடு ஆகியவை அவர்களின் பிரதான அசைவ உணவாக இருக்கிறது. கேரளாவில் விரும்பி சாப்பிடப்படும் முட்டை ஆப்பம் இலங்கையிலும் ரொம்ப பேமஸ். ஆப்பத்தை ஊற்றி அதன் மேல் முட்டை ஆப்பாயில் போட்டு அதனை குழம்போடு சேர்த்து வயிற்றுக்குள்ளே அனுப்புகிறார்கள்.

இந்த முட்டை ஆப்பம் நம்ம சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலின் ஸ்பெஷல் டிஷ்சாக மாறி இருக்கிறது. இது ஆட்டுக்கால் பாயா மற்றும் சிக்கன் குழம்புடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இலங்கையின் மத்தியில் உள்ள சிறந்த நகரங்களில் ஒன்றான கண்டியில் பழா பிஞ்சுக்கறி என்ற ஒரு உணவைச் சாப்பிடுகிறார்கள். இது அசைவத்திற்கு நிகரான ஒரு அல்டி மேட்டான சைவ உணவு. அதேபோல மட்டக்களப்பில் கிடைக்கும் இறால் சொதி, மாங்காய் சம்பலுக்கென்று தனிக்கூட்டமே இருக்கிறது. மலாய் சமூகத்தினரால் இங்கு அறிமுகம் செய்யப்பட்ட பாபத், நாசி கோரேங், மீ கோரேங், சீனர்களால் அறிமுகம் செய்யப்பட்ட சீன மிளகாய்க் கூழ், ஒல்லாந்தர்களால் அறிமுகம் செய்யப்பட்ட லம்ப்ரைஸ், அரேபியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வட்டாலப்பம், இஸ்லாமியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பிரியாணி என அனைத்து தரப்பு உணவுகள் மீதும் இலங்கை மக்களுக்கு அலாதிப் பிரியம்தான். இதேபோல இன்னும் பல உணவுகள் இலங்கையின் ஸ்பெஷல்களாக இருக்கின்றன.

You may also like

Leave a Comment

14 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi