சென்னை: நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, தேசிய, மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் தலைவர் மற்றும் நீதித்துறை உறுப்பினர், நிபுணத்துவ உறுப்பினர்க்ளுடன் செயல்பட வேண்டும். ஆனால் தற்காலிக தேவைகளுக்காக ஒற்றை உறுப்பினருடன் செயல்பட நுகர்வோர் சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது. தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவராக நீதித்துறை உறுப்பினராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.கே.நகரை சேர்ந்த விமல் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஓராண்டாக ஒற்றை உறுப்பினருடன் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுவது சட்டவிரோதமானது. ஒற்றை உறுப்பினருடன் ஆணையம் செயல்பட அனுமதிக்கும் சட்டப்பிரிவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் ஒற்றை உறுப்பினராக வழக்குகளை விசாரிக்கவும், முடிவுகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும். ஒற்றை உறுப்பினர் அமர்வு பிறப்பித்த உத்தரவுகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் பதில் தருமாறு உத்தரவிட்டுள்ளது.