தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து உலா வருவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, மழை காலம் துவங்கியுள்ளதால் காடுகள் செழிந்துள்ளன. அதே வேளையில், யானைகளும் அடிக்கடி காட்டை விட்டு வெளியில் வந்து சாலைகளில் உலாவி வருகின்றன. நேற்று காலை ஒற்றை யானை ஒன்று அஞ்செட்டி வனப்பகுதியிலிருந்து வெளியே வந்தது. தொடர்நன்து அஞ்செட்டி -தேன்கனிக்கோட்டை சாலையில் நின்று கொண்டு மூங்கில் குறுத்துகளை சாப்பிட்டவாறு அங்கேயே உலவிக் கொண்டிருந்தது. அதனைக்கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். முன்னெச்சரிக்கையாக வந்த வழியாக சிலர் திரும்பிச் சென்றனர்.
வாகனங்கள் சத்தம் கேட்டு, நீண்ட நேரத்திற்கு பின்பு அங்கிருந்து மீண்டும் யானை காட்டிற்குள் சென்றது. அததனை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில், நேற்று காலை தேன்கனிக்கோட்டை பக்கமுள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்திற்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. பின்னர், தெருவில் ஹாயாக நடந்து சென்றது. அதனைக்கண்டு மக்கள் வீடுகளில் முடங்கினர். தொடர்ந்து அந்த யானை மத்திகிரி வனப்பகுதிக்கு சென்றது. கிராம பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்யை யானைனை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.