சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஆகியோர் 16வது சுற்றுக்கு முன்னேறினர். இந்த ஜோடி 21- 16, 21- 13 என்ற செட் கணக்கில் மலேசியாவின் முகமது ஹைகல், சூங் ஜியான் ஜோடியை தோற்கடித்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி சீன தைபேயின் சாங்சிங் ஷூய், யாங் சின் துன் ஜோடியை 21-14, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இந்த ஜோடி அடுத்து சீன ேஜாடியான ஜியாயி பேன், ஜாங் ஷூ சியான் ேஜாடியினை எதிர்கொள்கிறது.
மற்றொரு மகளிர் இரட்டையர் ஜோடியான வைஷ்ணவி கட்கேகர், அலிஷா கான், ஆஸ்திரேலியாவின் க்ரோன்யா சோமரில்லே, ஏஞ்சலா யூ ஜோடியிடம் 8-21, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. பெண்கள் இரட்டையர் பிரிவில் அம்ருதா பிரமுதேஷ், சோனாலி சிங் ஜோடி, ஜப்பானின் நமி மாட்சுயாமா, சிஹாரு ஷிடாவிடமி ஜோடியிடமருந்து வாக் ஓவர் பெற்றது. இந்தியாவின் நம்பர் 1, உலகத்தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள ஒற்றையர் வீரரான லக்ஷயா சென், சீன தைபேயின் லின் சுன்யிக்கு எதிராக ஆடினார். முதல் ஆட்டத்தை சென் 21-15ல் கைப்பற்ற இரண்டாவது ஆட்டத்தை லின் 17-21ல் கைப்பற்றினார். ஆட்டம் இருவருக்கும் சமமாக இருந்த நிலையில் மூன்றாவது செட் ஆட்டத்தில் சென் 5-13 என்ற செட் கணக்கில் பின்தங்கி இருந்தார். அப்போது சென்னுக்கு திடீரென காயம் ஏற்பட்டதையடுத்து போட்டியிலிருந்து விலகினார்.