சிங்கப்பூர்: சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார். இது பிரதமர் மோடியின் 5வது சிங்கப்பூர் பயணமாகும். சிங்கப்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அத்துடன், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமரிடம் மோடி உறுதி அளித்தார். இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள் பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக கலாசார மையம் அமைய உள்ளது.
உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலம், இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழ் மொழி, நாகரிகம், பண்பாட்டை வளர்க்க சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.