திருவொற்றியூர்: சிங்கப்பூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், ஆன்மிக சுற்றுலாவுக்காக கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை வந்துள்ளார். இவர், பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தபோது, அவரிடம் இருந்த பாஸ்போர்ட், ரூ.15 ஆயிரத்தை திருடிய நபர், ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டுவதாக, பூக்கடை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், சிங்கப்பூரை சேர்ந்த ரவீந்திரனுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த முகமது சமீர்கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், ரவீந்திரன் ஆன்மிக சுற்றுலாவாக சென்னைக்கு வந்தபோது, இதுபற்றி முகமது சமீர்கானிடம் கூறியுள்ளார்.
அதன்பேரில், ரவீந்திரனை சந்திக்க, அவர் தங்கியுள்ள விடுதிக்கு வந்த முகமது சமீர்கான், அவருக்கு தெரியாமல் அவரது பாஸ்போர்ட் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளார். இதனால் பதறிப்போன ரவீந்திரன், முகமது சமீர்கானை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பாஸ்போர்ட்டை திருப்பி தர வேண்டும் என்றால், ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, முகமது சமீர்கான் எந்த பகுதியை சேர்ந்தவர் என, அவரது இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.