தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டாரங்களில் பச்சை மிளகாய் சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. இதில் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை அருகே உள்ள காடுசெட்டிபட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் மட்டும் இந்தளவுக்கு பச்சை மிளகாய் விவசாயம் நடந்து வருகிறதே! என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறதா? ராயல் புல்லட் என்ற ரகம்தான் அதற்கு முழுமுதற் காரணம். ஆம், இந்த ராயல் புல்லட் ரக பச்சை மிளகாய் சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இங்கிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை வாங்கி அனுப்புவதற்கு இந்தப் பகுதியில் வியாபாரிகளும் நிறைந்திருக்கிறார்கள். இந்த காரணத்தால்தான் இப்பகுதியில் ராயல் புல்லட் சாகுபடி ரவுண்டு கட்டுகிறது. ராயல் புல்லட் ரகத்தைப் பயிரிட்டு மகசூலை அள்ளி வரும் காடுசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பீரண் என்ற விவசாயியைச் சந்தித்தோம்.
“8ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். எனது தந்தையைப் பார்த்து விவசாயத்திற்கு வந்தேன். கடந்த 20 ஆண்டுகளாக நானே நேரடியாக வெள்ளாமை பார்க்கிறேன். எங்களுக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் பல வருடங்களாக காய்கறி வகைகளை மட்டுமே பயிரிட்டு வருகிறேன். முன்பு நாட்டு ரக பச்சை மிளகாயைப் பயிரிட்டு வந்தேன். ராயல் புல்லட் ரகத்தை ஏற்றுமதிக்காக வியாபாரிகள் மொத்தமாக வாங்கிக் கொள்வதாலும், நல்ல விளைச்சலும், விலையும் கிடைப்பதாலும் இப்போது அந்த ரகத்திற்கு மாறி இருக்கிறோம். ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டு வரும் அதேசமயத்தில் மற்றொரு ஏக்கர் நிலத்தில் ராயல் புல்லட் மிளகாயைப் பயிரிட்டு வருகிறேன்’’ என தன்னைப் பற்றியும், ராயல் புல்லட் பற்றியும் சுருக்கமாக கூறிய பீரண், ராயல் புல்லட் சாகுபடி செய்யப்படும் விதம் குறித்து விளக்க ஆரம்பித்தார்.
“ராயல் புல்லட் பச்சை மிளகாயைச் சாகுபடி செய்ய முதலில் ஒருமுறை நன்றாக நிலத்தை உழவு செய்து, மாட்டு எருவையும், கோழி எருவையும் கொட்டினோம். அதன்பிறகு 2 சால் உழவு ஓட்டினோம். கடைசியாக ரொட்டேவேட்டர் கொண்டு உழவு ஓட்டி 4 அடி இடைவெளிகளில் மேட்டுப்பாத்தி அமைத்தோம். அதில் 2 அடிக்கு ஒன்று என சொட்டுநீர்க்குழாய் அமைத்தோம். மேட்டுப்பாத்தியின் மீது மல்ச்சிங் ஷீட்டை வாங்கி வந்து இட்டோம். மல்ச்சிங் ஷீட் இடுவதற்கு முன்பு டிஏபி, ஸ்பிக், உயிர் உரம், போரான், ஜியோ கிரீன் ஆகிய உரங்களைக் கலந்து மண்ணில் இட்டோம். பின்பு சொட்டுநீர்க்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் துளையிட்டு, ஒரு மாதம் வளர்ந்த நாற்றுகளை நட்டோம். நடவுக்குத் தேவையான நாற்றுகளை அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வாங்கி வந்தோம். ஒரு ஏக்கருக்கு எப்படியும் 10 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும்.
நடவு செய்யப்பட்ட நாற்றுகளுக்கு சொட்டுநீர் மூலம் போதிய அளவுக்கு பாசனம் செய்தோம். நடவு செய்த 4வது நாளில் அழுகல் நோய் வராமல் இருக்க ஜொலிரோ என்ற மருந்தை சொட்டுநீரில் கலந்து கொடுத்தோம். பின்பு 10 நாள் கழித்து 19: 19சிங்கப்பூர் செல்லும் பாலக்கோடு பச்சை மிளகாய்
: 19 உரத்தை சொட்டுநீரில் கொடுத்தோம். 15வது நாளில் 12: 12: 12 உரத்தைக் கொடுத்தோம். 25வது நாளில் எக்ஸ் போனஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோம். இவ்வாறு பராமரிப்பு பணிகளை செய்து வரும் நிலையில் 40வது நாளில் செடிகள் நன்றாக வளர்ந்து நிற்கும். அப்போது 5 செடிக்கு ஒன்று அளவில் குச்சிகளை நடுவோம். அதில் கயிறு கட்டி, செடிகளை கட்டி வைப்போம். 55வது நாளில் செடிகள் மேலும் வளர்ந்து பூ, பிஞ்சுகள் வைக்கும். அந்த சமயத்தில் இரண்டாவது முறையாக கயிறு கட்டுவோம்.
90 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். அப்போது அறுவடையைத் தொடங்குவோம். 100வது நாளில் 2வது அறுவடையை முடித்து 35: 45 என்ற மருந்தை சொட்டுநீர் மூலம் கொடுப்போம். பின்பு 10 நாட்கள் கழித்து காய் பறித்து, அதேபோல மருந்து கொடுப்போம். இவ்வாறு 8 அறுவடை வரை எடுக்கலாம். 8 அறுவடை முடிந்தவுடன் காய்கள் குறைய ஆரம்பிக்கும். எப்படியும் ஒரு ஏக்கரில் 8 டன் வரை மகசூல் கிடைக்கும். அறுவடை செய்யப்படும் காய்களை தரம் பிரித்து அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைப்போம். வியாபாரிகள் வயலுக்கே வந்து அவற்றை எடை போட்டு வாங்கிச் செல்வார்கள். இந்தக் காய்களை அவர்கள் சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். அந்த நாடுகளில் இந்த மிளகாய்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு கிலோ மிளகாயை வியாபாரிகள் ரூ.25 முதல் 35 வரை விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். 8 டன் மிளகாய் மூலம் இரண்டரை லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதில் மருந்து, உரம், மல்ச்சிங் ஷீட் என செலவு அதிகம். இதற்கு எப்படியும் ஒன்றரை லட்சம் வரை ஆகும். அதுபோக ரூ.1 லட்சத்தை லாபமாக பார்க்கலாம். சில நேரங்களில் விலை கூடுதலாகவும் கிடைக்கும். அப்போது லாபமும் அதிகரிக்கும். மிளகாய் அறுவடை முடிந்தவுடன் செடிகளை அகற்றி விட்டு பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்வோம். மல்ச்சிங் ஷீட், சொட்டுநீர்க்குழாய் எல்லாம் அதற்கு பயன்படும். அந்த சாகுபடியில் கூடுதலான விளைச்சல் கிடைத்து, கூடுதல் லாபம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
பீரண்: 96983 52820.