சிங்கப்பூர்: சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் நேற்று, சீன வீராங்கனைகள் வாங் ஸி யி, ஹான் யு, சென் யுபெய், ஜப்பான் வீராங்கனை யமகுச்சி அபார வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தனர். சிங்கப்பூரில் சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் சீன வீராங்கனை வாங் ஸி யி, தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய வாங் ஸி யி, 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை ஹான் யு, ஜப்பான் வீராங்கனை நாட்சுகி நிதெய்ரா உடன் களம் கண்டார். இப்போட்டியில் 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹான் வெற்றி பெற்றார். 3வது காலிறுதியில் சீன வீராங்கனை சென் யுபெய், தென் கொரிய வீராங்கனை எஸ்.ஒய். ஆன் உடன் மோதினார்.
இப்போட்டியில் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் சென் வெற்றி வாகை சூடினார். 4வது காலிறுதியில் கனடா வீராங்கனை மிச்செல் லீ, ஜப்பான் வீராங்கனை ஏ. யமகுச்சி உடன் மோதினார். இப்போட்டியில் அபாரமாக ஆடிய யமகுச்சி, 21-15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற 4 வீராங்கனைகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.
* அரையிறுதியில் இந்திய வீரர்கள் ஆடவர் இரட்டையர் பிரிவு
சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி இணை, மலேசியா வீரர்கள் கோ ஸெ பெ, நுார் இசுதின் பின் முகம்மது ரம்ஸானி இணையுடன் மோதியது. இப்போட்டியில் துடிப்புடன் செயல்பட்ட இந்திய இணை, 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.