*பொதுமக்கள் சாலை மறியல்
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். முறையான விசாரணை நடத்த கோரி பெற்றோர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வேங்கைபட்டி மதுராபுரி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அஸ்விந்த் (7), இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளியிலிருந்து வந்ததாக கூறப்படும் காரில் பள்ளிக்குச் சென்ற மாணவர், மாலையில் உயிரிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவன் உயிரிழப்பு குறித்து டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான விசாரணை நடத்த கோரி நான்கு ரோடு சந்திப்பில் பெற்றோர், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாணவன் உயிரிழப்பு சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவரின் அப்பா பாலமுருகன் கூறும்போது, ‘‘மாணவருக்கு வலிப்பு வந்ததால் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம், மருத்துவமனை வரும்படி பள்ளியில் இருந்து தகவல் வந்தது. மருத்துவமனை வந்த பார்த்தபோது, என் மகனை உயிரிழந்த நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்’’ என்றார்.