போபால்: ஆபரேஷன் சிந்தூர் வீரத்தின் அடையாளமாகி விட்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இனி பாகிஸ்தானின் தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்படும் என எச்சரித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ராணி லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாளையொட்டி மகிளா சஷக்திகரன் மகா சம்மேளன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
இந்தியா கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்ட நாடு. நமது பாரம்பரியத்தில் சிந்தூர் என்பது பெண் சக்தியின் அடையாளம். ராம பக்தியில் மூழ்கிய அனுமனும் செந்தூரத்தை கொண்டிருப்பவர். சக்தி பூஜையில் சிந்தூரத்தை வழங்குகிறோம். இந்த சிந்தூர் வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. பஹல்காமில், தீவிரவாதிகள் இந்தியர்களின் ரத்தத்தை மட்டுமல்ல, நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் இந்தியாவின் பெண் சக்திக்கு சவால் விடுத்துள்ளனர்.
இந்த சவால் தீவிரவாதிகளுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் சாவு மணியாக மாறி உள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தான் ராணுவத்தால் நினைத்து கூடப் பார்க்க முடியாத வகையில், இந்திய ராணுவம் தீவிரவாதிகளின் மறைவிடங்களை அழித்துவிட்டது. அவர்கள் தோட்டாக்களை வீசினால், பீரங்கி குண்டுகளால் பதிலடி கொடுக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நாட்டின் பாதுகாப்பில் இந்திய மகள்களின் திறனை இன்று உலகம் கண்டு வருகிறது. இதற்காகவும், கடந்த பத்தாண்டுகளில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளி முதல் போர்க்களம் வரை, இன்று நாடு தனது மகள்களின் துணிச்சலில் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, ராணி அஹில்யா ஹோல்கரின் 300 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரை மற்றும் ரூ.300 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.