* நீச்சல், சைக்கிள் பந்தயம், டிராக் அண்ட் பீல்டு போட்டிகளை தொடர்ந்து செஸ் போட்டிகளிலும் பெண்கள் பிரிவில் மாற்று பாலினத்தவர் பங்கேற்க தடை விதிக்க சர்வதேச செஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
* இந்திய நடையோட்ட பந்தய வீராங்கனை பாவனா ஜாட், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் சோதனையில் பங்கேற்காததால், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் ஹங்கேரியில் இருந்து நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ‘‘எனக்கு செல்போனில் சிக்னல் கிடைக்காததால் சோதனைக்கான செயலியை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. கூடவே, ஒடிபி எண் வராததாலும் என்னால் சோதனையில் பங்கேற்க முடியவில்லை’’ என்று பாவனா தெரிவித்துள்ளார்.
* ஒடிஷாவைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீரர் கிஷோர் ஜெனாவின் விசாவை ஹங்கேரி தூதரகம் ரத்து செய்துள்ளதாக இந்திய தடகள சங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதனால் அவர் ஹங்கேரியில் நாளை தொடங்க உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் மற்றொரு ஈட்டி எறியும் வீரரான ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா சமூக ஊடகம் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், கிஷோர் ஜெனாவிற்கு உதவி செய்யும்படி கேட்டார். அதனையடுத்து கிஷோர் ஜெனாவின் விசா நேற்று நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
* உலகின் நெம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருந்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அஷ்வின் வெளியில் உட்கார வைக்கப்பட்டது இன்னும் பேசு பொருளாக தொடர்கிறது. இது குறித்து சமீபத்தில் பேசிய அஷ்வின், ‘வௌியில் உட்கார வைக்கப்பட்டதற்கான காரணம் எனக்கு எப்படி தெரியும். அதனை கண்டுபிடிப்பதும் என் வேலை இல்லை. அதுப்போன்ற முடிவுகள் என் கட்டுப்பாட்டில் இல்லை. அது குறித்து யோசிப்பது முட்டள்தனம்’ என்று கூறியுள்ளார்.
* ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆக.30 முதல் செப்.17 வரை பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடக்கிறது. அந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.
* துரந்த் கோப்பை 132வது கால்பந்து தொடரில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை எப்டி அணியை வீழ்த்தியது.
* இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி ஆக.12ம் தேதி நடைபெற இருந்த நிலையில் பஞ்சாப்-அரியான உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. காரணம் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பிரிஜ்பூஷண் ஆதரவாளர்களே அதிக எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிட்டதுதான். ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.